ஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்
ஆம்பூர் 2019 நவம்பர் 1 ; ஃபீனிக்ஸ்பறவையைப் போல் உயர பறப்போம்
ஃபீனிக்ஸ் பறவை தோல்வியால் துவண்டுவிடாமல் தொடர்ந்து போராடும் குணத்தை எடுத்துக்காட்ட கூறப்படுகிறது. எகிப்திய, கிரேக்க, சீன கதைகளில் ஃபீனிக்ஸ் குறித்தான குறிப்புகள் பல உள்ளன.
தனக்கென கூடு கட்டி அதற்கு நெருப்பு வைத்து தன்னைத் தானே எரிவூட்டி பின்னர் அந்த சாம்பலிலிருந்து புழுவாக உருவாகும். அப்படி உருவாகி, மீண்டும் சிவப்பும் தங்க நிறமும் கலந்த இறகுகளைக் கொண்ட பறவையாக உருவாகி, 500 முதல் 1000 வருடங்கள் வரை வாழும் தன்மையுடையது என்பது ஒரு நம்பிக்கை!
மற்றொரு நம்பிக்கையின் படி ஃபீனிக்ஸ் பறவைக்கு சூரியன் தான் லட்சியம். சூரியனை தொட்டுவிட வேண்டும் என்பதற்காக உயர உயரப் பறக்கும். சூரியனின் அருகில் சென்று வெப்பத்தால் கருகி விழுந்து மீண்டும் தன்னம்பிக்கையுடன் பிறந்து கம்பீரமாய் சூரியனை நோக்கி பறக்கும் என்பதாகும்!
நாமும் நமது இலக்குகளை நோக்கி சிறகுகளை விரித்து நம்பிக்கையோடு நம்மை நாமே ஊக்கப்படுத்தி பறந்து செல்ல வேண்டும்.
நம்மை மீளுருவாக்கம் செய்யும் சக்தி நம்மிடமே உள்ளது. நெருப்பில் எரிந்து சாம்பலாகி மீண்டும் நெருப்பை எதிர்க்கும் சக்தியோடு தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்கிறது ஃபீனிக்ஸ்.
நாம் பயப்பட வேண்டியது கீழே விழுவதை பற்றி அல்ல. மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலைக்கு நாம் சோர்ந்துவிடக் கூடாது என்பதை நினைத்து மட்டுமே. நமக்கான எல்லையை நாமே சுருக்கி ஆசுவாசப்படுத்திக் கொள்ளாமல் எல்லைகளை உடைத்தெறிந்து கனவுகளை விரிவுபடுத்த வேண்டும்.
சாம்பலில் இருந்து முழு பலத்தோடு உயிர்த்தெழ முதலில் ஃபீனிக்ஸ் தன்னைத்தானே எரித்துக் கொள்கிறது. அதுபோல தோல்வியில் விழுந்தாலும் அதிலிருந்து கிடைக்கும் படிப்பினையை கொண்டு புது உற்சாகத்தோடு பயணிக்க வேண்டும்.
வலி நம்மை அழித்து விடவும் முடியும், நம்மை உற்சாகப்படுத்தவும் செய்யும். நமக்குத் எது தேவை என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
யார் வேண்டுமென்றாலும் அவமானப்படுத்தட்டும், காயப்படுத்தட்டும், துரோகம் செய்யட்டும். இவை எதுவும் நம்மை வீழ்த்திவிடக்கூடாது. நமது மனதில் எரிந்து கொண்டிருக்கும் ஃபீனிக்ஸை தட்டி எழுப்பினால் அது உயர உயர பறக்க வழி நடத்தும்!
தலையை உயர்த்தி சிறகுகளை விரித்து இலக்குகளை நோக்கி பறப்போம், ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல ...