விநாயகர் சதுர்த்தியையொட்டி அமைக்கப்பட்ட 11 பிள்ளையார் சிலைகள் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு தூத்துக்குடி தெர்மல் கடற்கரை பகுதியில் கடலில் கரைக்கப்பட்டது.
தூத்துக்குடி 2023 செப் 24 ; புதுக்கோட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அமைக்கப்பட்ட 11 பிள்ளையார் சிலைகள் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு தூத்துக்குடி தெர்மல் கடற்கரை பகுதியில் கடலில் கரைக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த 18ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் போலீஸ் அனுமதியுடன் 11 இடங்களில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் மூலம் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டது. அந்த விநாயகர் சிலைகள் பொதுமக்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில், புதுக்கோட்டையில் பத்திரகாளியம்மன் கோவில் வளாகம், பஜார் பகுதி, யாதவர் தெரு, ராமச்சந்திரபுரம், ராஜீவ்நகர், கோரம்பள்ளம், பொட்டலுரணி, சிறுபாடு, குலையன்கரிசல், தெற்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இந்நிலையில், விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டது.
இதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி தலைமை வகித்தார். இந்து முன்னணி மண்டல தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் ஓருங்கிணைக்கப்பட்டு புதுக்கோட்டை பஜார் பகுதியில் இருந்து கூட்டாம்புளி, குலையன்கரிசல், பொட்டலுரணி, முத்தையாபுரம் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தூத்துக்குடி தெர்மல் கடற்கரை பகுதியில் கடலில் கரைக்கப்பட்டது.
இதில், இந்து முன்னணி மண்டல துணைத் தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் ஆனந்த், முனியசாமி, பெரியசாமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்&இன்ஸ்பெக்டர்கள் முத்துவீரப்பன், ஞானராஜ் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.