ஆறுமுகநேரி பகுதியில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி இருப்பு வைத்து, எத்திலீனை தவறாக பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1125 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிப்பு: உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை
தூத்துக்குடி 2023 ஜூன் 4 ;ஆறுமுகநேரி பகுதியில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி இருப்பு வைத்து, எத்திலீனை தவறாக பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1125 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிப்பு: உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுகாதாரத்துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். கி.செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்நிலையில்,கிடைக்கப்பெற்றப் புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் அவர்களின் உத்திரவின் பேரில், திருச்செந்தூர் ஒன்றியம் (ம) காயல்பட்டிணம் நகராட்சி பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன், சிவநாதன் என்பவருக்குச் சொந்தமான மாம்பழ குடோன்களை நேற்று (03.06.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது,1125 கிலோ மாம்பழங்களை அனுமதிக்கப்பட்ட எத்திலீன் கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அனுமதிக்கப்படாத முறையினால், பழுக்க வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், அந்த குடோன்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும் உறுதிசெய்யப்பட்டது. எனவே, 1125 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து, பேரூராட்சி உதவியுடன் குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கிய அக்குடோன்களானது மூடி முத்திரையிடப்பட்டன.
வியாபாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை;
உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவுப் பொருளை தயாரித்தல், இருப்பு வைத்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
எந்தவொரு வணிகராவது உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிந்தால், உடனடியாக அவ்வளாகம் மூடி முத்திரையிடப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது.
உணவு பாதுகாப்பு உரிமத்தினை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பழ வியாபாரிகளுக்கு ஒரு முக்கிய செய்தி:
மாம்பழம் உள்ளிட்ட பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க விரும்புவார்கள், எத்திலீன் கியாஸ் சேம்பர் மூலமாக தான் பழுக்க வைக்க வேண்டும்.
எத்திலீன் கியாஸ் சேம்பர் இல்லாத இடங்களில், எத்திலீன் ஸ்பிரே பயன்படுத்தலாம். ஆனால், பழங்கள் வைக்கப்படும் அறையில் முதலில் எத்திலீன் ஸ்பிரே செய்து, அதன் பின்னர் மாம்பழத்தை சுவற்றிலிருந்து 1/2 அடி தள்ளியும், அறையின் கொள்ளளவில் 75% வரை வைத்துவிட்டு, அறையை மூடிவிட வேண்டும். அடுத்த 24 மணி நேரம் கழித்து, அந்தக் கதவினைத் திறக்க வேண்டும்.
இந்த வசதியும் இல்லாத வியாபாரிகள். ‘எத்திஃபான்” சொல்லக்கூடிய ஒரு ஷேசட்டில் வரக்கூடிய செயற்கை பழுக்க வைப்பானை (எத்திலீன் பொடி) 5-10 விநாடிகள் தண்ணீரில் ஊறவைத்து, சிறு துளைகள் உள்ள பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, 10 கிலோ மாம்பழம் உள்ள பெட்டியில் வைத்து, அப்பெட்டியை காற்றுப்புகாமல் மூடி வைக்க வேண்டும். அதனை, 24 மணி நேரம் கழித்து அதை திறந்து விடலாம்.
மேற்கூறிய முறைகளைத் தவிர, எத்திலீனை நேரடியாக பழங்களில் தெளிப்பது, எத்திலீன் கலந்த தண்ணீரை பழங்களுடன் சேர்த்து, இருப்பு வைப்பது ஆகிய முறைகள் FSSAI-ன் வழிகாட்டுதல்களுக்குப் புறம்பானதாகும்.
நுகர்வோர்களின் கவனத்திற்கு:
நுகர்வோர்கள் மாம்பழத்தை நன்கு அறிந்த வியாபாரிகளிடம் வாங்க வேண்டும்.
மாம்பழத்தை வாங்கி வந்தவுடன், ஓடும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
முடியும் எனில், ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊறவைத்தால், தோல் மேல் இருக்கக்கூடிய எத்திலீன் படிமம் நீங்கிவிடும்.
நுகர்வோர்கள் இயன்றவரை மாம்பழத்தின் மீது கருப்புத் திட்டுக்கள் இல்லாத பழமாகப் பார்த்து வாங்க வேண்டும்.மாம்பழத்தை மிருதுவாக அழுத்தினால், சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். நன்கு அழுந்தினால், அவற்றை வாங்க வேண்டாம்.
ஒரே மாதிரியாக மஞ்சள் நிறத்தில் அல்லாமல், சிறிது பச்சை நிறமும் இருக்குமாறு மாம்பழத்தைப் பார்த்து வாங்க வேண்டும்.
மாம்பழத்தை வாங்கி வந்த இரண்டு தினங்களுக்குள், அறை வெப்பநிலையில் வைத்திருந்து, அதனைப் பயன்படுத்தலாம்.
மாம்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர்கள் புகராளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.