Onetamil News Logo

 2  1/2 லட்சம் பேர் குரூப்-1  தேர்வெழுதினர் ;  டெபுடி கலெக்டர் ஆயிட்டாங்க!’  காயத்ரி எம்.இ

Onetamil News
 

 2  1/2 லட்சம் பேர் குரூப்-1  தேர்வெழுதினர் ;  டெபுடி கலெக்டர் ஆயிட்டாங்க!’  காயத்ரி எம்.இ சென்னை ;  2  1/2 லட்சம் பேர் குரூப்-1  தேர்வெழுதினர் ;  டெபுடி கலெக்டர் ஆயிட்டாங்க!’  காயத்ரி எம்.இ        
 இது குறித்து  அவரது பேட்டி ....“எனது தந்தை சுப்பிரமணி காஞ்சீபுரத்தை சேர்ந்தவர். வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனது தாயார் விஜயலட்சுமி. பெற்றோருக்கு நாங்கள் மூவருமே பெண்களாக பிறந்தோம். எனது அக்காள் புவனேஸ்வரி யோகா டீச்சர். தங்கை சுகன்யாஸ்ரீ வக்கீல். நாங்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பினார்கள். தைரியமானவர்களாகவும் எங்களை வளர்த்தார்கள். நான் மாங்காடு பகுதியில் உள்ள நவபாரத் வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தேன்” என்கிறார், காயத்ரி.
பள்ளிப் பருவத்தில் பேச்சுப்போட்டிகளில் பங்குபெற்று இவர் பரிசுகள் பெற்றிருக்கிறார். நடிப்பிலும் ஆர்வம் இருந் திருக்கிறது. 16 வயது வரை பள்ளி நாடகங்களில் ராஜா வேடம்போட்டு கம்பீரமாக வலம் வந்திருக் கிறார். படிப்பிலும் சிறந்த மாணவியாக திகழ்ந்திருக்கிறார். பின்பு பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த இவர், அங்கும் படிப்பில் ஜொலித்திருக் கிறார். பல்கலைக்கழக அளவில் 11-வது இடம் பிடித்ததால் கல்லூரி சார்பில் இவருக்கு தங்கப்பதக்கமும், கேடயமும் வழங்கியிருக்கிறார்கள். கல்லூரியில், ‘ஆரோக்கிய ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றிருக்கிறார்.
பள்ளி, கல்லூரியில் இவர் படிப்பில் சிறந்து விளங்கியதால், தான் படித்த கல்வியை பயன்படுத்தி எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும் என்ற உந்துதலோடு செயல்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் திருமணம் நடந்திருக்கிறது.
“நான் பி.ஈ. முடித்ததும் எம்.ஈ. படிக்க பணம் கட்டினேன். அப்போது உறவினர்கள், ‘உங்க மகளுக்கு கல்யாணம் செய்துவைக்கலையா?’ என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். பொதுவாக எங்கள் சமூகத்தில் பெண்களுக்கு 20 வயதில் திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். என் அக்காளுக்கும் அப்படித்தான் நடந்தது. எனக்கும் நல்ல வரன் அமைந்துவிட்டது என்றார்கள். என்னை பெண் பார்க்க கார்த்திகேயன் வந்தார். நான் முதலில் சில நாட்கள் கூச்சத்தில் அவரை முகம் கொடுத்து பார்க்கவேயில்லை. எனக்கும் அவரது குணங்கள் பிடித்ததால் திரு மணத்திற்கு சம்மதித்தேன். அதனால் எம்.ஈ. படிக்க கட்டிய பணத்தை திருப்பி வாங்கினோம்” என்கிறார்.
இவரது கணவர் பெயர் கார்த்திகேயன். எம்.பி.ஏ. படித்த இவர், சுயதொழில் செய்கிறார். காயத்ரியின் மாமனார் பார்த்தசாரதி. மாமியார் மகேஸ்வரி.
காதலை பற்றி காயத்ரியின் கண்ணோட்டமே மாறுபட்டதாக இருந்திருக்கிறது. அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார்.
“நாங்கள் மூவரும் பெண்ணாக இருந்ததால் மிகுந்த கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்டோம். காதலை ஒரு மோசமான விஷயமாக எங்கள் மனதில் பதியவைத்தனர். அதனால் காதலையும், காதலிப்பவர்களையும் குறிப்பிட்ட காலம் வரை நான் தப்பாகத்தான் எடுத்துக்கொண்டேன். காதலை பற்றிய சரியான புரிதல் எனக்கு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. அதனால் நானும், என் கணவரும் இப்போது காதலித்துக்கொண்டிருக்கிறோம்” என்று சிரிக்கிறார், காயத்ரி.
திருமணத்தை அடுத்து தாய்மை நிலையை அடைந்த இவர், பெண் குழந்தையை பெற்றெடுத்து முழுமையான குடும்பத்தலைவியாக மாறியிருக் கிறார். அந்த வாழ்க்கையை அவர் ரசித்து, அனுபவித்துக்கொண்டிருந்தாலும் மனதில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்திருக்கிறது.
“நன்றாக படித்த நாம் சராசரி பெண் போன்று குடும்பம் என்ற சிறிய வட்டத்திற்குள் சிக்கிவிட்டோமே! நமது சாதனை எண்ணம் மங்கிப்போய்விட்டதே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நான் தேவையற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடமாட்டேன். டி.வி. நிகழ்ச்சிகளும் பார்க்கமாட்டேன். குடும்ப நிர்வாகத்தை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் மகளும் வளர்ந்துகொண்டிருந்தாள். ‘என் அம்மா இந்த மாதிரியான சாதனையாளராக இருந்தார் என்று என் மகள் சொல்வதற்கு எதிர்காலத்தில் ஒன்றும் இல்லாமல் போய்விடுமோ!’ என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது.
அப்போதுதான் ஏதாவது ஒரு அரசு வேலையிலாவது சேரவேண்டும். அதற்காக படிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளையின் அப்பலோ ஸ்டடி சென்டருக்கு சென்றேன். தாய் ஆன பின்பு என்னால் முன்பு போல் படிக்க முடியுமா என்ற தயக்கம் நிறைய இருந்தது. பல்வேறு விதமான குழப்பங்களோடு அங்கு சென்றேன். அங்கு சாம் ராஜேஸ்வரன் எனக்கு கவுன்சலிங் கொடுத்து நம்பிக்கையை விதைத்தார். குரூப்-1 தேர்வு எழுதும் அளவுக்கு என்னிடம் திறமை இருக்கிறது என்று சொன்னார். அவரது வழிகாட்டுதலாலும், என் கடின உழைப்பாலும், என் குடும்பத்தினர் கொடுத்த ஒத்துழைப்பாலும்தான் என்னால் இந்த சாதனையை படைக்க முடிந்தது. சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை மையத்தில் எனக்கு அளித்த நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது” என்று பெரு மிதம் பொங்க சொல்கிறார், காயத்ரி.
இரண்டு வருடங்கள் இவர் கிட்டத்தட்ட குடும்பத்தை பிரிந்து, புத்தகங்களோடு குடும்பம் நடத்தியிருக்கிறார். பேச்சும், மூச்சும் படிப்பாகவே இருந்திருக்கிறது. கணவர், மாமனார், மாமியார் போன்றோரும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
“ஓய்வற்ற படிப்பால் என் உடல் நிலை ஓரளவு பாதித்தாலும், திரு மணத்திற்கு முன்பு நான் படிப்பில் முதலிடம் பிடித்ததுபோல், தாயான பின்பும் அதே இடத்தை பிடித்து துணை ஆட்சியராகிவிட்டேன். தாயான எல்லா பெண்களுக்கும் நான் ஒரு எடுத்துக்காட்டாகியுள்ளேன். இடைவிடாத முயற்சிகளில் ஈடுபட்டால் எல்லா பெண்களாலும் இதுபோல் சாதிக்க முடியும். இப்போது நான் என்னை ஒரு முழு சக்தி நிறைந்த பெண்ணாக உணர்கிறேன்” என்று கூறும் காயத்ரி, தன்னிடம் கம்பீரத்தை உருவாக்கிக்கொள்ள தோற்றத்தில் நேர்த்தியான சில மாற்றங்களையும் உருவாக்கியிருக்கிறார்.
“சாதாரணமாக ஒரு பெண் தலைக்கு குளித்து ரெடியாக அதிக நேரம் பிடிக்கும். அவள் தன் கூந்தலை அலங்காரம் செய்ய கிளிப், பின், ரப்பர் பேண்ட் போன்று பல பொருட்களையும் உடன்வைத்திருக்கவேண்டும். கூந்தலை வளர்த்து, எப்படி அலங்காரம் செய்துகொண்டாலும் அது மற்றவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமையாது. அதனால் என்னை நானே தனித்துவமாக காட்டிக்கொள்ளவும், சாதாரண பெண் இல்லை என்ற எண்ணத்தை எனக்குள் விதைக்கவும் தோற்றத்தில் சில மாற்றங்களை செய்தேன். கூந்தலை ஆண்கள் போல் வெட்டிக்கொண்டேன். அதனால் விமர்சனங்கள் எழுந்தன. யாருக்கும் இடைஞ்சல் இல்லாதது, எனக்கு சவுகரியமானது என்பதால் நான் விமர்சனத்தை காதுகொடுத்து கேட்கவேஇல்லை. உடையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினேன். புல்நெக் காளர் மற்றும் முக்கால் கை கொண்ட ஜாக்கெட் அணிந்தேன். அதோடு மனதளவில் மாற்றங் களை ஏற்படுத்திக்கொள்ள ஆளுமைத்திறனையும் வளர்த்துக்கொண்டேன்” என்று புதுமைப்பெண்ணாக தனது கருத்தை எடுத்து ரைக்கிறார்.
காயத்ரிக்கு இனி பல்வேறு கட்ட பயிற்சிகள் காத்திருக்கின்றன. அவைகளை முடித்துவிட்டு, மக்கள் பணியாற்ற தயாராக இருக்கிறார். சிறந்த அதிகாரி என்ற பெயரைப் பெறுவது இவரது லட்சியமாக இருக்கிறது.
இவர், பெண்களுக்கு சொல்ல விரும்பும் ‘மெசேஜ்’ புதுமையானது.
பெண்கள் வாழ்க்கையை நேசிக்கவேண்டும். முழுமையாக வாழவேண்டும். அதற்காக அவர்கள் சரியான வயதில், சரியான வரன் அமையும்போது திருமணம் செய்து கொள்ளவேண்டும். திருமணத்திற்கு பிறகும் சிறந்ததொரு வாழ்க்கை இருக் கிறது. விட்ட முயற்சிகளை திருமணத்திற்கு பிறகு கணவர், குழந்தைகள், குடும்பத்தினர் உதவியோடு தொடர்ந்து, சாதனைகளை எட்டிப்பிடித்துவிடலாம். திருமணமும், தாய்மையும் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கற்கள் அல்ல.. படிக்கற்கள்..” என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்.
எனது லட்சியத்தை அடைவதற்காக கடந்த இரண்டு வருடங்களாக முழுநேரமும் படித்துக்கொண்டே இருந்தேன். அதனால் செல்லக்குட்டியான என் மகளிடம் பேசக்கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கடைசி நான்கு மாதங்கள் வீட்டில் இருந்து வெளியேறி விடுதியில் தங்கியிருந்து படித்ததால், மகளால் என்னை பார்க்ககூட முடியவில்லை. நான் படித்துமுடித்து தேர்வுகளையும் எழுதிவிட்டு வீட்டுக்கு சென்றதும், மகள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு ‘அம்மா நான் ரொம்ப ஏங்கிப்போயிட்டேன். ஆனா நீ கஷ்டப்பட்டு படிச்சிக்கிட்டு இருந்ததால் என் ஏக்கத்தை எனக்குள்ளே புதைச்சிக்கிட்டு அமைதியாயிட்டேன். நீ பக்கத்தில் இல்லாத தால் எனக்கு தூக்கமே வரலை. தினமும் உன் போட்டோவை பார்த்ததும் எனக்கு அழுகையா வரும். ஆனால் அப்பா அருகில் வரும்போது அவருக்கும் தெரியக்கூடாதுங்கிறதுக்காக அழுகையை அடக்கிக்குவேன். அம்மா போதும்மா.. இனியும் என்னை பிரிந்து போயிடாதேம்மா..’ என்று என் மகள் அழுதுகொண்டே சொன்னபோது என் கண்களும் கலங்கிவிட்டன..” என்று நெகிழ்ந்து சொல்லும் காயத்ரி சுப்பிரமணி சில மாதங்கள் மகளையும் மறந்து, படித்து- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, துணை ஆட்சியராகி சாதனைபடைத்திருக்கிறார்.
பொதுவாக பெண்கள், திருமணம் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகிவிடும் என்பார்கள். அதிலும் குழந்தையை பெற்றெடுத்து தாயாகிவிட்டால், அதோடு தங்கள் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிடும் என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட கருத்துக்களை தகர்த்துஎறிகிறார் காயத்ரி சுப்பிரமணி. ஏன்என்றால் என்ஜினீயரிங் முடித்ததும் இவருக்கு 20 வயதிலே திருமணம் நடந்திருக்கிறது. அடுத்த ஆண்டே குழந்தை பிறந்திருக்கிறது. முழுமையாக குடும்பத்தலைவியான பின்பு, இவரது சிறு வயது லட்சியம் தலைதூக்கியிருக்கிறது. கணவர், மகள், பிறந்த வீட்டார், புகுந்த வீட்டார் அத்தனை பேர் ஒத்துழைப்போடு இந்த ‘நம்பர் ஒன்’ சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மாக்கள் இவருக்கு போன் செய்து, ‘நாங்களும் உங்களைப் போல் சிறுவயது லட்சியத்தை அடையவேண்டும். வழிகாட்டுங்கள்’ என்று ஆலோசனை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு என்பது துணை ஆட்சியர் போன்ற மிக முக்கியமான பணி களுக்கானது. இரண்டரை லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினார்கள். அதில் காயத்ரி சுப்பிரமணி முதலிடத்தை பிடித்து சாதித்திருக்கிறார். 
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo