கடும் வறட்சியால் 500 மாடுகள் சாவு : கால்நடைகளை காக்க நடவடிக்கை தேவை! - அன்புமணி இராமதாஸ் அறிக்கை
தமிழகத்தில் வரலாறு காணாத கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகம் அடுத்தடுத்து கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் வறட்சியின் கொடுமையால் கடந்த 25 நாட்களில் 500&க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. இதேநிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை அமைந்துள்ள சேலம் மாவட்டம் சில மாதங்களுக்கு முன்பு வரை கால்நடைகளின் சொர்க்கபுரியாக விளங்கியது. மேட்டூர் அணையை ஒட்டியுள்ள புல்வெளிகளில் மேய்ந்து, அணையிலுள்ள தண்ணீரை குடித்து கால்நடைகள் இயல்பாக வாழ்ந்து வந்தன. ஆனால், கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வதைக்கும் வறட்சி அவற்றின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டது. மேய்வதற்கு புல்லும், குடிப்பதற்கு நீரும் இல்லாத நிலையில் கால்நடைகள் பட்டினியில் வாடுகின்றன. வசதி படைத்த சிலர் வெளியிலிருந்து அதிக விலை கொடுத்து தீவனமும், நீரும் வாங்கி வழங்குவதால் அவர்களின் கால்நடைகள் மட்டும் வறட்சியை தாக்குப்பிடித்து உயிர்வாழ்கின்றன. மற்றவர்கள் பசுக்கள் மற்றும் காளைகளை வளர்க்க முடியாமல் வந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். வறட்சியால் மெலிந்து விட்ட மாடுகள் அதிகபட்சம் ரூ.800&க்கு மட்டுமே விலைபோவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாடுகளை விலைக்கு விற்க மனம் வராத விவசாயிகள் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக அனுப்பி வைக்கின்றனர். ஆனால், வறட்சியால் காடுகளும் காய்ந்து கிடப்பதாலும், தண்ணீர் இல்லாததாலும் அங்கு அனுப்பப்பட்ட கால்நடைகளும் பட்டினியில் வாடி உயிரிழக்கின்றன. மேட்டூர் அணையையொட்டிய கோவிந்தப்பாடி, ஏமனூர், கோபிநத்தம், ஜம்புருட்டிப்பட்டு, ஆலம்பாடி காட்டுப்பகுதிகளில் 500&க்கும் மாடுகளின் உடல்கள் அழுகிய நிலையில் கிடக்கின்றன. இவை அனைத்தும் கடந்த 25 நாட்களில் நிகழ்ந்த கொடுமை தான் என்று மேட்டூர் வட்டார மக்கள் தெரிவித்துள்ளனர். கால்நடை வளர்ப்பை முக்கியத் தொழிலாகக் கொண்ட அப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் 20 முதல் 60 மாடுகள் வரை வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று முதல் 8 மாடுகள் வரை வறட்சிக்கு பலியாகியுள்ளன. இன்னும் ஏராளமான மாடுகள் பலவீனமாகி விட்டதால் எந்த நேரமும் உயிரிழக்கும் ஆபத்து நிலவுகிறது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் தான் இந்த நிலை என்று கூறமுடியாது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இதேநிலை தான் காணப்படுகிறது. இந்த அவலநிலைக்கு தமிழக அரசு தான் காரணம் ஆகும். முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே வறட்சியின் கொடுமைகளில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், மற்ற மாவட்டங்களில் எந்த அளவுக்கு கால்நடைகளை பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதேநிலை நீடித்தால் கால்நடைகள் பேரிழப்பை சந்திக்கும். அத்தகைய இழப்புக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கும், விவசாயத்திற்கு தாங்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்.
வறட்சியிலிருந்து கால்நடைகளைக் காப்பதற்காக ரூ.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், கால்நடைத் தீவனங்களை மலிவு விலையில் விற்பதற்காக மாநிலம் முழுவதும் கால்நடைத் தீவனக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறியிருக்கிறார். ஆனால், அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து ஆக்கப்பூர்வமாக எந்த பணியும் நடக்கவில்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கால்நடைத் தீவன கிடங்குகளையும் பார்க்க முடியவில்லை.
தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக வறட்சி உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தீர்க்க அரசும், முதலமைச்சரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக தன்னை இன்னொரு ஜெயலலிதாவாக முன்னிலைப்படுத்திக் கொள்ளும் வகையில் ஆடம்பரமான விழாக்களை நடத்துதல், தேவையே இல்லாமல் போக்குவரத்து நெருக்கடிகளை உருவாக்குதல், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய ஆட்சியாளர்களிடம் சரணடைதல் போன்றவற்றில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டுகிறார். முதலமைச்சர் பதவியைக் காப்பதில் காட்டும் அக்கறையில் நூற்றில் ஒரு பங்கையாவது கால்நடைகளைக் காப்பதில் காட்ட வேண்டும். வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கால்நடைகளுக்கு குடிநீர், தீவனம் ஆகியவை தாராளமாக கிடைக்க அரசு வகை செய்ய வேண்டும்.