Onetamil News Logo

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பணியில் வளைந்து கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்த்தி டோக்ராவின் உயரம் மூன்றரை அடிதான்! 

Onetamil News
 

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பணியில் வளைந்து கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்த்தி டோக்ராவின் உயரம் மூன்றரை அடிதான்! 


ஆஜ்மீர் 2019 செப் 05 ; ஆர்த்தி டோக்ரா அசரவைக்கும் மாவட்ட கலெக்டர்!...உயரத்தில் குறைவானவரே!
ஆனால் செயல்களில் உயரியவர்!
வளர்ந்த கலெக்டர்கள் கூட வளைந்து கொடுக்கக்கூடும். ஆட்சியர் ஆர்த்தி, பணியில் வளைந்துகொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்த்தி டோக்ராவின் உயரம் மூன்றரை அடிதான்! ஆனால், சட்டத்துக்குப் புறம்பான எந்தக் காரியமும் ஆர்த்தியின் ஆட்சிப் பணியில் நடைபெற்றதில்லை. ஜோத்பூரிலிருந்த ஆர்த்தியை ஆஜ்மீர் மாவட்டத்துக்கு சமீபத்தில் மாறுதல் செய்தது, ராஜஸ்தான் அரசு.ஆட்சியர் மாற்றப்பட்டது குறித்து தகவல் பரவ, அதை எதிர்த்து ஜோத்பூர் மக்கள் மாவட்ட அலுவலகத்தில் குவிந்தனர். ஆட்சியரைச் சந்தித்து 'இங்கிருந்து போகக் கூடாது' என மன்றாடினார்கள். 'அரசு பணியில் இதுவும் ஓர் அங்கம்தான்' என்றவாறு மக்களைச் சமாதானப்படுத்தினார் ஆர்த்தி. 
ஆர்த்தி டோக்ரா தந்தை, ராணுவத்தில் பணிரிந்தார். தாயார், பள்ளி ஆசிரியை. 1979-ஆம் ஆண்டு பிறந்த ஆர்த்திக்கு, வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லை. பெற்றோர் கவலைப்பட்டார்கள். மிகவும் குள்ளமான உருவம்கொண்டிருந்தார். உறவினர்கள், 'இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்று ஆர்த்தியின் பெற்றோரை வற்புறுத்தினார்கள். 'இனிமேல் எங்களுக்கு வேறு குழந்தை வேண்டாம். ஆர்த்திதான் எங்கள் உலகம்' என்று சிரித்தவாறே பதிலளித்துவிட்டனர் ஆர்த்தியின் பாசமிகு பெற்றோர். 
டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பொருளியல் பட்டம் பெற்ற ஆர்த்தி, முதுகலைப் படிப்புக்காக டேராடூன் சென்றார். அங்கே ஐ.ஏ.எஸ் அதிகாரியான மனிஷாவைச் சந்தித்தார். அதுவரை ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஆர்த்தியிடம் கிடையாது. ஆர்த்திக்குள் ஒளிந்திருந்த திறமைகளை அடையாளம் கண்டுகொண்ட மனிஷா, ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது, 'நீங்கள் ஏன் ஐ.ஏ.எஸ் படிக்கக் கூடாது?' எனக் கேட்டார். இந்தக் கேள்விதான் ஆர்த்தியின் வாழ்க்கைப் பயணத்தை மாற்றியது. 
ஆட்சியருக்குத் தேவையான கம்பீரம், தோரணை குறித்தெல்லாம் ஆர்த்தி யோசிக்கவேயில்லை. யூ.பி.எஸ்.சி தேர்வுக்கு, தன்னை தயார்ப்படுத்த ஆரம்பித்தார். 2006-ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் உயர்ந்தார். 
உயரம் மூன்றரை அடி என்றாலும், பணியில் தீரம் மிகுந்தவர் ஆர்த்தி.  சுத்தம் சோறு போடும் என்ற பழமொழியில் ஆர்த்திக்கு அதீத நம்பிக்கை உண்டு. தான் ஆட்சியராகப் பணியாற்றிய மாவட்டங்களில் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதற்கு முன்பு 2013-ஆம் ஆண்டு ஆஜ்மீர் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி பணிபுரிந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலேயே பொதுவெளியில் காலைக்கடன் கழிக்கும் கிராமங்கள் நிறைந்த மாவட்டமாக ஆஜ்மீர் இருந்தது. திறந்தவெளியில் இப்படி கழிப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்தினார் ஆர்த்தி. அரசு அலுவலர்களையும் விழிப்புணர்வில் ஈடுபடவைத்தார்.
திறந்தவெளியில் காலைக்கடன் கழிக்கும் மக்கள் நிறைந்த 219 கிராமங்களை அடையாளம் கண்டு  'புக்கா டாய்லெட்' எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் சிமென்ட் பயன்படுத்தி கழிவறைகளைக் கட்ட நடவடிக்கை எடுத்தார். ஆஜ்மீரில் இவர் ஆட்சியராக இருந்த சமயத்தில் 800 கழிவறைகள் கட்டப்பட்டன. கழிவறை கட்ட முடியாத ஏழைகளுக்கு, கழிவறை கட்ட மாவட்ட நிர்வாகம் தங்குதடையின்றி நிதி அளித்தது. இதனால், ஆஜ்மீர் மாவட்டத்தில் குடிசை வீட்டுக்குக்கூட சுத்தமான சுகாதாரமான 'புக்கா டாய்லெட்' கிடைத்தது. ஆர்த்தியின் இந்த 'புக்கா டாய்லெட்' திட்டம் செம வெற்றி தந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலப் பிரதிநிதிகளும் ஆர்த்தியின் 'புக்கா டாய்லெட்' திட்டத்தைப் பார்வையிட்டு, தங்கள் மாநிலங்களில் அதேபோன்று அமல்படுத்தியுள்ளனர். தாய்லாந்து, நேபாளம் போன்ற நாடுகளிலிருந்துகூட புக்கா டாய்லெட் முறை பற்றித் தெரிந்துகொள்ள ஆஜ்மீர் வருகிறார்கள். 
ஆர்த்திக்கு அவரின் தாயார்தான் வழிகாட்டி. "எனக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நான் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்றபோது ஏராளமானோர் எங்கள் வீட்டுக்கு  வந்து, என் அம்மாவிடம், 'ஒரு மகன் செய்யவேண்டிய சாதனையை உங்கள் மகள் செய்துள்ளார்' என்று வாழ்த்தினர். அவர்களிடத்தில், 'என் மகள் ஒரு மகளாக சாதனை படைத்திருக்கிறாள்' என்று என் அம்மா பதிலளிப்பார்" என, தன்னை ஆளாக்கிய தாயார்குறித்து பெருமைப்படுகிறார் ஆர்த்தி.
ஆர்த்தி டோக்ரா இருக்கும் இடத்தில் நேர்மையான மக்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதால் மக்கள் எங்கிருந்தாலும் இவரை வரவேற்று, வாழ்த்தி வருகிறார்கள்.வந்தவரை மாறுதல் செய்தால் அனுமதிக்க மறுத்து
ஆர்ப்பரிக்கிறார்கள்.. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் கிடைக்கும் நல்ல திட்டங்கள் அல்லவா?
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo