ஐதராபாத்தில் நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக சீரியஸ்
நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத்பாபு. தமிழ் திரைத்துறையின் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் 1971 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணம் செய்த இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த அண்ணாமலை திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து மிகவும் பிரபலமானார்.
முத்து திரைப்படத்திலும் ரஜினிகாந்த்துக்கு எசமானாக நடித்திருப்பார். இது போன்ற ஹிட் படங்கள் இவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித் தந்தது. தமிழ் தெலுங்கு மட்டுமின்றி கன்னடா, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
90களில் சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சியுடன் சரத்பாபு நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் முதலில் அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. உடல் நலம் தேறிய பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். பிறகு மீண்டும் உடல் நலப் பதிவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.