சென்னையில் ஏரிகள் எல்லாம் வீடுகளாக,அலுவலகமாக, மாறியதால் தான் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது ;எல்லாம் யார் காரணம்? சிந்திக்கவும்.....
சென்னை 2020 நவம்பர் 27 ;சென்னையில் மழை என்றால் வெள்ளம் என்றும், வெயில் என்றால் குடிநீர் தட்டுப்பாடு என்றும் கவலை கொள்கிறார்கள். தமிழகத்தில் எந்த ஒரு நகரத்திற்கும் இல்லாத ஒரு இயற்கை அமைப்பு சென்னைக்கு உண்டு. அதுதான் கடல்.
எவ்வளவு நீர் தேங்கினாலும் கடலுக்கு உடனே சென்றுவிடும். தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறை தமிழக வரலாற்றில் பழமையான ஒன்று. இத்தகைய நீர்நிலைகள், குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப் பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத்துள்ளனர். கிணறு வெட்டுதல் தொடர்பான நூலுக்கு கூட ‘கூவநூல்’ என்று தான் பெயர்.
கூவம் என்றால் அசுத்தமானது என்ற சிந்தனை ஆறு மாசுபடுத்தப்பட்டதில் இருந்து உருவானது தான். ஆனால் கூவம் என்ற சொல்லுக்கு "தூய ஊற்று நீர்" என்றே பொருள். குயில் கூவுது என்பது இனிமை சார்ந்த செயல்.
எப்போதும் பெய்யும் மழைதான் சென்னையில் இப்போதும் பெய்கிறது. ஆனால் வெள்ளம் சூழ்கிறது என்கிறோம். ஏன்? ஏனெனில் வெள்ளத்தை தாங்கி நின்ற ஏரி, தாங்கல் அனைத்தும் நகரமயத்திற்கு இரையாகிவிட்டது.
சென்னையில் நகரமயத்திற்கு இரையான ஏரிகள் இவை.
1.நுங்கம்பாக்கம் ஏரி,
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
25.செம்பாக்கம் ஏரி,
26.சிட்லபாக்கம் ஏரி
27.போரூர் ஏரி,
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
32.வேளச்"ஏரி"
33.செம்மஞ்"ஏரி"
34.ரெட்"ஏரி"
35.பொத்"ஏரி"
36.கூடுவாஞ்"ஏரி"
37அடை"ஆறு"(அடர்ந்த ஆறு)
38."அணை"காபுத்தூர்
39.பள்ளிக்கர"அணை"
40.காட்டாங்"குளத்தூர்"
- இப்ப புரியுதா? ஏரி, குளம், ஆறு, அணையில் தண்ணீர் நிற்காமல் வேறு எங்கு நிற்கும்?
இதுபோக தண்ணீரைத் தாங்கி நின்ற தாங்கல்களும் உண்டு. அவைகளும் அழிக்கப்பட்டன. ஈக்காட்டுத்தாங்கலில் தான் ஊருக்கு உபதேசம் செய்யும் அத்தனைத் தொலைக்காட்சிகளும் உள்ளன.
நகரமயமாக்கல் நடைபெற்றாலும் நீர் கடலுக்கு செல்லக்கூடிய வழியை உருவாக்கியிருக்க வேண்டும். அதற்கான இணைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அது அரசும், அங்கு வாழும் மக்களும் இணைந்து செய்ய வேண்டிய ஏற்பாடு. அதைச் செய்ய தவறிவிட்டு வருடம் தோறும் அழுகிறார்கள். இப்போதும் பிரச்சனையில்லை. திட்டமிட்டால் எளிமையாக செய்து முடிக்கலாம்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல்,பூண்டி,சோழவரம் ,செம்பரம்பாக்கம் ஏரிகளின் ஒட்டு மொத்த நீர் கொள்ளளவு 15 டி.எம்.சி.
சென்னை மக்களின் ஒரு ஆண்டு நீர் தேவை 11 டி.எம்.சி.
கடந்த ஆண்டு இங்கு பெய்த மழையில் கடலில் வீணாக கலந்த நீரின் அளவு 120 டி.எம்.சி. இதை தேக்கி வைக்கும் ஏற்பாடும் இல்லை.
நீரின் இருப்பைத் தெரிந்து கொள்ள பல்வேறு அளவு முறைகள் உள்ளன. லிட்டர்,மில்லிமீட்டர்,கனஅடி,கனமீட்டர்,மில்லியன் கனஅடி,டிஎம்சி என அழைக்கிறார்கள்.
மழை நீரை மண்ணுக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினால் அது எத்தனை மில்லிமீட்டர் உயரத்திற்கு தேங்கி நிற்கிறதோ,மழையளவு அத்தனை மில்லிமீட்டர் என்கிறார்கள்.
ஆறுகள்,கால்வாய்களில் ஓடும் நீரைக் குறிக்க கன அடி,கன மீட்டர் என்ற அளவு பயன்படுத்துகிறார்கள்.ஒரு கனஅடி என்பது 1 அடிநீளம்,1 அடி அகலம்,1 அடி உயரம் உள்ள பெட்டியின் கொள்ளளவுதான் ஒரு கனஅடி. ஒரு கனஅடி கொள்ளளவு என்பது லிட்டர் கணக்கில் 28.3 லிட்டர் ஆகும்.
எவ்வளவு நேரம் தண்ணீர் ஓடியது என்று அறிந்தால்,எத்தனை கனஅடி ஓடியது என்று சொல்லிவிடலாம்.ஒரு வினாடிக்கு ஒரு கனஅடி பாய்ந்தால் ஒரு நாளைக்கு 86,400 கனஅடி பாயும்.அணைகளில் உள்ள நீரை மில்லியன் கனஅடி என்கிறார்கள்.
ஒரு மில்லியன் கனஅடி என்பது 10 லட்சம் கனஅடியாகும்.பெரிய நீர் தேக்கங்களில் உள்ள நீரின் அளவிற்கு TMC என்கிறார்கள்.TMC என்றால் ஆயிரம் மில்லியன் அல்லது 100 கோடி கனஅடி ஆகும்.
Thousand Million Cubic Feet என்பதன் ஆங்கிலச்சுருக்கமே TMC என்பது.
தேவையான நீரை தேக்கி வைக்கவும், அதிகமாக பெய்யும் மழை நீரை கடலுக்கு அனுப்பவும் சிறந்த திட்டமிடலை உருவாக்காமல் தீர்வு இல்லை.