திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன் குளத்தின் உபரிநீர் தவிர ஏனைய பிற குளங்களின் உபரிநீர் முழுவதும் திருச்செந்தூர் கடலில் கலக்கிறது. - விவசாயிகள் கோரிக்கை
உடன்குடி வட்டார பகுதியில் உள்ள பல்வேறு விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு,மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் தெற்கு பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் கடலில் பாதி கடம்பா என்ற பட்டப்பெயர் பெற்ற கடம்பாகுளத்தின் கீழுள்ள 13 பாசன குளங்களுள் கடைசி குளமான திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன் குளத்தின் உபரிநீர் தவிர ஏனைய பிற குளங்களின் உபரிநீர் முழுவதும் திருச்செந்தூர் கடலில் கலக்கிறது.
இவற்றில் ஆவுடையார்குளம் கால்வாய் மற்றும் பிற குளங்களின் உபரிநீர் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் கல்லூரி வழியாக கடலுக்கு காந்திபுரம் கால்வாய் வழியாகவும்செல்கிறது. இவற்றிற்கு இடைப்பட்ட தூரம் வெறும் 500மீட்டர் மட்டுமே இந்த 2 கால்வாய்களையும் இணைத்தால் காந்திபுரம் கால்வாய் வழியாக வீணாக கடலுக்கு போகும் பெருமளவு தண்ணீரை மிச்சப்படுத்தி திருச்செந்தூர் ஆவுடையார் குளத்திற்கு அனுப்பி சேமிக்க முடியும். இதனால் குலசை தருவைக்குளத்திற்கு உபரிநீர் வழங்கும் நா.முத்தையாபுரம் எல்லப்ப நாயக்கன்குளம் கூடுதல் தண்ணீர் பெறும்.
மேலும் 12 குளங்களின் மூலம் ஏராளமான கனஅடி தாமிரபரணி தண்ணீர் வீணாககடலுக்கு செல்வதால் அதை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும், குலசை தருவைக்குளத்தையும் நிரந்தர நீர்பெறும் குளங்கள் பட்டியலில் இணைத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் தாழ்வானஉவர்நில நீர்ப்பிடிப்புபகுதியில் சேமித்தால் நிலத்தடிநீர் உப்பாக மாறியுள்ள உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நன்னீராக மாறும்.
மேலும் இந்த வழியில் எஞ்சிய நீர் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி வழிந்தோடி கருமேனிஆற்றில் விழுந்து மணப்பாடு கடலில் கலந்து விடும். அத்துடன் வருடந்தோறும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களும் நன்னீராடி மகிழும் வாய்ப்பும் பெறுவர். அதனால் இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.