ஆண்டு உற்பத்தி விற்றுக்கொள்முதல் படிவத்தினை 30.06.2022-க்குள் இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், 01.07.2022 முதல் நாள் ஒன்றுக்கு ரூ.100/- அபராதம் விதிக்கப்படும் - உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன், எச்சரிக்கை
உணவுப் பொருள் உற்பத்தி செய்ய உரிமம் பெற்ற வியாபாரிகள், ஆண்டு உற்பத்தி விற்றுக்கொள்முதல் படிவத்தினை 30.06.2022-க்குள் இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், 01.07.2022 முதல் நாள் ஒன்றுக்கு ரூ.100/- அபராதம் விதிக்கப்படும் - உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம். உணவு பாதுகாப்புத் துறை,மாவட்ட நியமன அலுவலர், டாக்டர்.ச.மாரியப்பன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; அரிசி, உப்பு, சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள், பால், கருப்பட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பேக்கரி, கூல்டிரிங்க்ஸ், மெக்ரூன், கடலைமிட்டாய், சேவு போன்ற நொறுக்குத் தீனி தயாரிப்பாளர்கள், மீன் பதப்படுத்தி பொட்டலமிடுபவர்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், அதாவது, மேனுஃபேக்சூரிங், ரீப்பேக்கர்ஸ், ரீலேபிளர்ஸ் என்ற வணிக வகை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றோர், ஒவ்வொரு நிதியாண்டின் உணவுப் பொருள் தயாரிப்பு விற்றுக்கொள்முதல் விபரத்தை உரிய படிவத்தில், குறிப்பிட்ட நிதியாண்டு நிறைவு பெற்றவுடன் வரக்கூடிய மே மாதம் 31 தேதிக்குள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறினால், அப்படிவத்தை பதிவேற்றம் செய்யும் காலம் வரை, நாள் ஒன்றுக்கு ரூ.100/- அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத்தினை வணிகர் செலுத்தும் வரை, அவ்வபராதமானது சம்பந்தப்பட்ட உணவு வணிகரின் FoSCoS இணையத்தளக் கணக்கில் தொடர்ந்து கணக்கிடப்பட்டுக்கொண்டே வரும். இதனால், ஆண்டு உற்பத்தி விற்றுக்கொள்முதல் படிவத்தினை உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்யத் தவறினால், வணிகர்கள் தேவையற்ற வகையில் அதிகத் தொகையை கூடுதல் அபராதமாக செலுத்த நேரிடும். மேலும், அபராதத்தைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருந்தால், வணிகர்களது உணவு பாதுகாப்பு உரிமமானது தற்காலிகமாக ரத்து செய்து, தொழில் நிறுத்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம், வணிகர்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு, 2021-22 நிதியாண்டிற்கான ஆண்டு உற்பத்தி விற்றுக்கொள்முதல் படிவத்தினை இணையத்தளத்தில் அபராதம் ஏதுமின்றி பதிவேற்றம் செய்யும் கால வரம்பை, 30.06.2022 வரை நீட்டித்துள்ளது. ஆண்டு உற்பத்தி விற்றுக்கொள்முதல் படிவத்தினை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தி, சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு, அவர்களின் உரிம விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு FoSCoS இணையத்தளம் மூலம் ஏற்கனவே நியமன அலுவலரால் அறிவிப்பு சார்பு செய்யப்பட்டுள்ளது. FoSCoS இணையத்தளமும் ஆட்டோமேட்டிக் நினைவூட்டலை வணிகர்களுக்கு அனுப்பியுள்ளது.
எனவே, வணிகர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்த மிக எளிதான ஆண்டு உற்பத்தி விற்றுக்கொள்முதல் படிவத்தினை https://foscos.fssai.gov.in என்ற இணையத்தளத்தின் தங்களது பயனீட்டாளர் கணக்கில் பதிவேற்றம் செய்து, அபராதத்தைத் தவிர்த்திடவும், தொடர் சட்ட நடவடிக்கையினை தவிர்த்தடவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
தவறும் வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.