தூத்துக்குடி செக் மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் அப்பகுதியில் பால்வியாபாரம் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும் பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளருமான வி.எஸ்.ஆர்.பிரபு என்பவருடன் நட்புடன் வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது அவசர தேவைக்காக 2012ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடனாக கேட்டுள்ளார். இதற்கு பால்வியாபாரி எனது குழந்தைகள் படிப்புச் செலவிற்கு வைத்திருக்கும் பணத்தை தர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். மீண்டும் அவரிடம் 2 மாதத்தில் கண்டிப்பாக கொடுத்து விடுவதாக கூறி ரூ.5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2 காசோலை கொடுத்துள்ளார்.
பிரபு சொன்னது போல் 2 மாதம் கழித்து பணம் வந்து சேராத நிலையில், வங்கியிலும் காசோலைக்கு பணம் இல்லாத நிலை இருந்தது. இதனையடுத்து தூத்துக்குடி விரைவு நீதிமன்றம்-1-யில் பரமசிவம் வழக்கு தொடர்ந்தார். இவரது சார்பில் வக்கீல் சுபேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தார். 11 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் 13ம் தேதி நீதிபதி செல்வி ஜலதி வழக்கு தொடுத்தவருக்கு ரூ.5 லட்சத்துடன் மற்றும் வழக்குச் செலவு உள்ளிட்டவை சேர்த்து ரூ.10 லட்சத்தை ஒரு மாத காலத்திற்குள் பரமசிவத்திற்கு வழங்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டு சிறைதண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
பாஜக மாநில நிர்வாகி ஒருவருக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பினால் தூத்துக்குடி பாஜக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.