Onetamil News Logo

பெரும்பான்மை இருக்கலாம். ஆனால் மக்கள் உங்கள் கைகளில் இருக்க மாட்டார்கள்!” குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கண்டன ஆர்பாட்டத்தில் கனிமொழி எம்பி எழுச்சியுரை 

Onetamil News
 

பெரும்பான்மை இருக்கலாம். ஆனால் மக்கள் உங்கள் கைகளில் இருக்க மாட்டார்கள்!”
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கண்டன ஆர்பாட்டத்தில் கனிமொழி எம்பி எழுச்சியுரை 


சென்னை 2019 டிசம்பர் 18 ;குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து டிசம்பர் 17 ஆம் தேதி  சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்  திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி எம்பி கண்டன உரையாற்றினார்.  இந்த கண்டன ஆர்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு ஏற்பாடு செய்திருந்தார்.
கனிமொழி எம்பியின் கண்டன உரை வருமாறு...
 “திராவிட முன்னேற்ற்க கழகம் ஏன் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறது? திமுகவின் தலைவர் ஏன் இந்த சட்டத்தை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்த உத்தரவிட்டிருக்கிறார்? நாடாளுமன்றத்தில் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்கவும் திமுக உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டவர் நமது தலைவர் தளபதி.

இந்த சட்டத் திருத்தத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், இது அடிப்படையிலே நமது அரசியல் சாசனம் தந்த அத்தனை வாக்குறுதிகளுக்கும் எதிரானது. சமத்துவத்துக்கு எதிரானது, சகோதரத்துவத்துக்கு எதிரானது. எல்லாரும் சமம் என்ற வாக்குறுதிக்கு எதிரானதுதான் இந்த சட்டத் திருத்தம்.
11 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்தவர்கள், அதற்கு மேல் இந்த மண்ணில் வாழ்ந்தவர்களுக்குதான் குடியுரிமை என்ற சட்டம் இருக்கிறது. இந்தப் புதிய சட்டத் திருத்தத்தில் ஐந்து ஆண்டுகள் நீங்கள் இந்தியாவில் வாழ்ந்திருந்தாலே உங்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.  இதில் யாருக்கும் பிரச்சினை இல்லை. 

ஆனால், எங்கே கருத்து வேறுபாடு வருகிறது என்றால் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் உள்நாட்டுக் குழப்பங்கள், பிரச்சினைகள் இருக்கின்றன. மத ரீதியாக, அரசியல் ரீதியாக, இன ரீதியாக, மொழிரீதியான பிரச்சினைகளால் அங்கே வாழ முடியாத சூழல் ஏற்படும் போது சில இன, மொழி,  மத மக்கள் வெளிநாடுகளுக்குப் போகிறார்கள். அமெரிக்காவுக்குப் போகிறார்கள், ஆஸ்திரேலியாவுக்குப் போகிறார்கள், ஐரோப்பாவுக்குப் போகிறார்கள், கனடாவுக்குப் போகிறார்கள்.  அதேபோல இந்தியாவுக்கும் வருகிறார்கள். இங்கு வந்து குடியுரிமை கோருகிறார்கள், புகலிடம் தேடுகிறார்கள். 
இந்த சட்டம் என்ன சொல்கிறது? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வரக் கூடிய மக்களுக்கு மட்டும் நீங்கள் ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருந்தால், உங்களுக்குக் குடியுரிமை வழங்கிறோம்.  அதுமட்டுமில்லை... அந்த மூன்று நாடுகளில் இருந்து வந்தவராக இருந்தாலும் நீங்கள் இஸ்லாமியராக இருந்தால் உங்களுக்கு இந்தியாவில்  குடியுரிமை கிடையாது. 
பார்சியாக இருக்கலாம், சீக்கியராக இருக்கலாம், இந்துக்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இஸ்லாமியராக இருந்தால் இந்த சட்டத் திருத்தம் உங்களுக்கு குடியுரிமை வழங்காது.   இது அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற அடிப்படைக்கே எதிரானதா இல்லையா? உலக நாடுகளின் சபையான ஐ.நா. சபை இந்த சட்டத்தைக் கண்டித்திருக்கிறது. இது மனித குலத்துக்கு எதிரானது, மனிதர்களை பாகுபடுத்தும் சட்டம் என ஐ.நா. சபை கண்டித்திருக்கக் கூடிய சட்டம்தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம்.
மனித நேயத்துக்கு, மனிதத்துக்கும் அடிப்படையில் எதிரான ஒன்று. மதத்தின் அடிப்படையிலே மனிதர்களைப் பிரித்துப் பார்க்கக் கூடிய சட்டம், இந்த சட்டம் என்ற அந்த ஒரு காரணத்துக்காக  தளபதி அவர்கள் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்கிறார்.

அடுத்து நம்மை சுற்றியிருக்கக் கூடிய நாடுகளைப் பற்றிப் பேசும்போது  பர்மா என்று அழைக்கப்படும் மியன்மார் நாட்டிலே பிரச்சினைகள் இருக்கின்றன. அங்கிருந்து முஸ்லிம் மக்கள்  இந்தியாவுக்கு வருகிறார்கள். ஏன் பாகிஸ்தானிலே கூட எல்லா இஸ்லாமியர்களுக்கும் சமமாக வாழக் கூடிய சூழ் நிலை இல்லை. வெவ்வேறு குழுக்களைச் சேர்ர்ந்த இஸ்லாமியர்கள் அங்கே பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் உரிமை பறிக்கப்படுகிறது. அவர்கள் இங்கே வந்து குடியுரிமை  தேடும்போது அவர்களுக்கு குடியுரிமை இல்லை.
அதேபோல இலங்கையில் இருந்து  நம்முடைய தமிழ் சகோதரர்கள் இங்கே வந்து பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சட்டத்தின்படி குடியுரிமை கிடையாது. 11 ஆண்டுகள் என்கிறார்கள், அதையும் 5 ஆண்டுகளாகக் குறைத்துவிட்டோம் என்கிறார்கள். ஆனால் இதையும் தாண்டி பல வருடங்களாக இங்கே இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது என்று சொல்லக் கூடிய சட்டத் திருத்தம் இது. எனவே இந்த சட்டம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டம். இதை எப்படி ஏற்க முடியும்? 

அந்த மூன்று நாடுகளில் இருந்து  இந்துக்கள் வந்தால், பார்சிகள் வந்தால் சீக்கியர்கள் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்கிறீர்கள். ஆனால் இலங்கையில்  இருந்து இந்துக்கள் வந்தால்? அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை இல்லை. இந்த சட்டத்தின் உள்ளடக்கத்திலே அவர்களுடைய பெயர் கிடையாது.
இதை என்னவென்று கேட்டால் மத்திய உள்துறை அமைச்சர் இங்கே வந்த இலங்கைத் தமிழர்களுக்கும், அங்கே இருக்கும் மலையகத் தமிழர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பாராளுமன்றத்திலே பதில் சொல்கிறார்.  இதுதான் அவர்கள் தமிழர்களுக்குக் கொடுத்திருக்கக் கூடிய மரியாதை. ஏனென்றால் தமிழ்நாடு என்றாலே அவர்களுக்குப் பிடிக்காது. நாம்  அவர்களுக்கு ஓட்டுப் போடப் போவது கிடையாது. பிஜேபி இங்கே காலூன்ற  முடியாது.
 இங்கே இருக்கக் கூடிய மிக முக்கியப் பிரச்சினைகளான வேலையில்லா திண்டாட்டம்,  பொருளாதார வீழ்ச்சி, சரிவு, நீங்கள் கொண்டுவந்த பணமதிப்பழிப்பில் இருந்து இன்னும் தலை தூக்கமுடியாத நிலைமை, ஜிஎஸ்டி குழப்பங்கள் இவற்றையெல்லாம் மக்கள் மறந்துவிட வேண்டும் என்பதற்காக, இதில் இருந்தெல்லாம் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக  அடுக்கடுக்கான சட்டங்கள்.  பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அரசாங்கமே பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றால் இந்த நாட்டிலே இதை விட கேவலம் இருக்க முடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். 
சென்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தைப் பிரித்து  மாநிலத்தையே சிறைச் சாலையாக்கி லட்சக்கணக்கானோரை சிறையில்  அடைத்திருக்கும் கொடுமை  இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. 

நாடாளுமன்றத்திலே எங்கள் பக்கத்திலே அமர்ந்திருக்கக் கூடிய காஷ்மீரின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா  நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தன் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் வந்து பேச வேண்டிய ஃபரூக் அப்துல்லா நாடாளுமன்றத்துக்கு வர முடியாத நிலை. இப்படி காஷ்மீரில் இன்னும் எத்தனையோ தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் இருந்து பிரிந்துபோக வேண்டும் என்று நினைக்காத தலைவர்கள். இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தக் கூடாது என்று சொல்லக் கூடிய தலைவர்கள், நாம் எந்தக் காலத்திலும் இந்தியர்கள்தான் என்று சொல்லக் கூடிய அத்தனை தலைவர்களையும் கைது செய்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நாடாளுமன்றத்திலே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து இந்த நாடே பற்றி எரியக் கூடிய நிலைமையை உருவாக்கியிருக்கிறார்கள்.  நேற்று முன் தினம் மாணவர்கள் போராடியிருக்கிறார்கள். மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராடக் கூடிய நேரத்திலே அங்கே அரசாங்கத்தின் காவல்துறை அவர்களிடம் எப்படி நடந்தது என்பதை செய்திகளின் மூலமாக, யு ட்யூப் மூலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அவர்கள் எப்படித் தாக்கப்பட்டார்கள்.  ஆண், பெண், அவர்களின் வயது எதைப் பற்றியும் கவலைப்படாமல், மாட்டைக் காக்கிற இந்த நாட்டில் கல்லூரி மாணவர்களை மாட்டை அடிப்பது போல அடித்து நொறுக்கினார்கள். அதையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கக் கூடிய ஒரு சூழலில்  நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இவ்வளவு போராட்டம் அவசியமில்லை, அஸ்ஸாம் பற்றிய எரிய வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு கொந்தளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவில் இந்த சட்டத்தை எதிர்க்கிறோம் என்று முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக நின்று போராடுகிறார்கள். மேற்கு வங்காள மண்ணில் இந்த சட்டத்தை நுழைய விட முடியாது என்று மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.  தளபதி அவர்கள் இந்த சட்டத் திருத்ததுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கக் கூடிய சூழல். இதெல்லாமே தேவை யில்லை.

நாம் தெரியாத்தனமாக ஓட்டுப் போட்டு சில பேரை மாநிலங்களவைக்கு அனுப்பினோம் அல்லவா? யாரை, அதிமுக உறுப்பினர்களை.  அந்த எம்பிக்கள் நினைத்திருந்தால் இந்த சட்ட மசோதாவைத் தோற்கடித்திருக்க முடியும். செய்யவில்லை. ஆதரித்து வாக்களித்தார்கள்.  அன்புமணி ராமதாஸ்.. அவரை மாநிலங்களவையில் யாரும் பார்த்ததே கிடையாது. ஆனால் அன்று வாக்களிப்பதற்காக வந்து தனது ஒரே ஒரு ஓட்டை இந்த குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக போட்டுவிட்டுப் போயிருக்கிறார்.  நான் கேட்கிறேன்... இது  இலங்கைத் தமிழர்களுக்கும், அவர்களுக்குத் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்று கருதும் தமிழர்களுக்கும் செய்த துரோகம் இல்லையா? இஸ்லாமியர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லையா? இந்திய மக்கள் இல்லையா? 
இலங்கைத் தமிழர்களையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கேயே பிறந்து எனக்கு தெரிந்த நாடு என்றால் அது  இந்தியாதான் என்று இருக்கக் கூடிய எத்தனை பேர்கள் இங்கே இருக்கிறார்கள். எத்தனை இளம்பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த நாட்டையே பற்றி எரிய வைக்கக் கூடிய மசோதாவை வெற்றிபெற செய்வதற்கு கைகூலிகளாக செயல்பட்டவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இனிமேல் தமிழ்நாட்டில் தெருவில் இறங்கி எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும் உரிமை கூட கிடையாது அவர்களுக்கு.  
பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக இப்படிப்பட்ட சட்டங்களை ஒரு ஜனநாயக நாட்டில்   ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று சனிக் கிழமை அவர்கள் நினைப்பார்கள், அதற்காக ஞாயிற்றுக் கிழமை ஒரு மீட்டிங் போடுவார்கள். கேபினட் மீட்டிங்.  திங்கள் கிழமை அந்த பில்லை அறிமுகம் செய்வார்கள். யாருக்கும் சர்க்குலேட் செய்ய மாட்டார்கள்.  அந்த பில் பாஸ் ஆகிவிடும். இதேதான் அவர்களின் நடைமுறையாக இருக்கிறது. 
இந்த மசோதாவிலும்  நினைத்தார்கள், ஒரு கேபினட் மீட்டிங் நடத்தப்பட்டது,  அந்த மீட்டிங்கில் இந்த பில்லை கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். திங்கள் கிழமை காலை அந்த மசோதா கொண்டுவரப்படுகிறது, விவாதிக்கப்பட்டு இரவு 12 மணிக்கு நிறைவேற்றப்படுகிறது.

சில முக்கியமான சட்டங்கள், சட்ட திருத்தங்கள் என்றால் இரவு 12 என்ன  2 மணிக்கு கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது, இல்லையென்று சொல்லவில்லை. இதற்கு என்ன அவசரம்?  மக்களவையில் இரவு 12 மணிக்கு நிறைவேற்றப்படுகிறது. அடுத்த நாள் மாநிலங்களவைக்கு எடுத்து செல்லப்படுகிறது. மாலை  6 மணிக்கு அங்கே வாக்கெடுப்பு.  இரவு 12 மணிக்கு இந்த நாட்டின் ஜனாதிபதி கையெழுத்து போடுகிறார். அப்படி என்ன அவசரம்? இந்த நாட்டை துண்டாடுவதற்கு ஆளக்கூடிய பிஜேபிக்கு அப்படி என்ன அவசரம்? 
நான் கேட்கிறேன் பாராளுமன்றத்தை ஒதுக்கக் கூடிய, துச்சமாக மதிக்கக் கூடிய நிலை மக்களுடைய உணர்வுகளைத் தூக்கி எறியக் கூடிய ஒரு நிலை  நீடிக்குமென்றால், உங்களுக்கு பாராளுமன்றத்திலே பெரும்பான்மை இருக்கலாம்.  மத்திய அரசின் நிறுவனங்கள் எல்லாம் உங்கள் கைக்குள் இருக்கலாம். ஆனால் மக்கள் உங்கள் கைகளுக்குள் இருக்க மாட்டார்கள். வீதிகளில் வந்து போராடுவோம், இந்தப் போராட்டம் தொடரும். இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்”  என்று கண்டன உரையை நிறைவு செய்தார் கனிமொழி எம்.பி.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo