ஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமனித ஒழுக்கம் தனி மனிதனை நேராக்கும். குடும்பங்களை சீராக்கும். சமூகத்தை வளமாக்கும், நாட்டை நலமாக்கும். அதுவே நல்ல வாழ்வுக்கான பாதைக்கு அழைத்துச் செல்லும்
மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்ற சொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப்பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கதிற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கதிற்குள் தீய பழக்கம் வராது. கள்ளுண்ணல் முதலிய குற்றங்கள் தீயபழக்கங்கள் இந்தக் குற்றங்கள் ஒழுக்கக் கேடுகள் அல்ல.
ஒழுக்கம் – ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது – வாழ்வது ஒழுக்கமுடைமை. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு. மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்வனவெல்லாம் தீய பழக்கம். ஒழுக்கக்கேடு தவிர்க்கத்தக்கது. மனிதனைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வனவெல்லாம் ஒழுக்கமுடைமை.
"உலகம் வேண்டுவது ஒழுக்கமே! சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!"
என்றார் விவேகானந்தர். சுயநலம் தீய ஒழுக்கம். பொது நலத்திற்கு எதிரான சுயநலம் தீய ஒழுக்கம், பொது வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம்.
நாம் தமிழர்கள், நாம் இந்தியர்கள், நாம் மனிதர் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. தமிழர்களாகவும் இந்தியர்களாகவும் மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கம்.
நாடுகள் சுதந்திரம் பெற்றபின் "குடிமைப் பயிற்சி" என்பது மலிந்து வருகிறது. குடிமைப் பண்பு என்றால் என்ன? ஒருவர் வாழும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு. இனம், மொழி, சாதி, மதச் சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும். எல்லோரும் ஒரு குலம்; எல்லோரும் ஓர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும்.
நல்லொழுக்கம் நாட்டின் குடிகளைத் தழீஇயதாக விளங்கும். நல்லொழுக்கத்தை ஒருமைப்பாடு என்று கூறினாலும் கூறலாம். மனிதகுல ஒருமைப்பாடே நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.
குடிமைப் பண்பிலாதார்,ஒருமைப்பாட்டுணர்வு இலாதார். உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன்? அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.
ஒன்றே குலம்; எல்லோரும் ஒருகுலம்; எல்லோரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல், உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் – இதுவே ஒழுக்கம்.
இந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல். உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.
இந்த நல்லொழுக்கதிற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.
ஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்! வாழும்!
ஒரு விதையைப் பார்த்ததும், அது மண்ணில் விதைக்கப் பட்டபின் எத்தனை கனி கொடுக்கும் ? எவ்வளவு சுவையான கனி கொடுக்கும், எத்தனை காலம் கனி கொடுக்கும் என்பதையெல்லாம் சொல்லி விட முடியாது. விதையின் தரத்தையும், நிலத்தின் உரத்தையும், இயற்கையின் வரத்தையும் வைத்தே அதன் வளர்ச்சி இருக்கும்.
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதை. சமூகத்தில் அவன் நல்ல கனி கொடுக்க வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு. அதற்கு ஒவ்வொரு மனிதனும் நல்ல ஒழுக்கங்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
ஒரு பெருமழையின் துவக்கம் சிறிய துளியில் தான். ஒரு நெடும் பயணத்தின் துவக்கம் சிறு சுவடில் தான். ஒரு சிறு பொறியில் தான் ஒரு பெருங்காட்டின் உஷ்ணம் ஒளிந்திருக்கும். அப்படித் தான் ஒரு தனி மனிதனில் தான் ஒரு மிகப்பெரிய மாற்றம் துவங்குகிறது.
மெழுகுவர்த்தியில் ஏற்றப்படும் நெருப்பு மெழுகுவர்த்திக்கு மட்டும் வெளிச்சம் கொடுப்பதில்லை. வீட்டில் ஓடும் மின் விசிறி அதற்கு மட்டும் காற்று கொடுப்பதில்லை. அதே போல தான் ஒரு தனிமனிதனின் செயல்கள் அவனுக்கு மட்டுமாய் இருப்பதில்லை. அவனுடைய ஒழுக்கமும், ஒழுக்கக் கேடும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஒரு அன்னை தெரசாவின் பணி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்பின் பணி செய்ய தூண்டுகோலாய் இருந்தது. ஒரு ராஜபக்ஷேயின் தமிழ் இன விரோத சிந்தனை அவரைச் சுற்றிய அத்தனை ராணுவ வீரர்களிடமும் இன அழிப்பு சிந்தனையை தூண்டி விட்டது.
ஒரு மனிதன் என்பவன் சமூகத்தின் அங்கம். ஒரு உறுப்பில் ஏற்படும் புற்று நோய் ஒரு உடலையே அழிப்பது போல, ஒரு தனி மனிதனிடம் இருக்கும் ஒழுக்கக் கேடு சமூகத்தையே அழித்து விடும் ஆற்றல் படைத்தது. எனவே தான் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
கிறிஸ்தவம் ஒழுக்கமின்மையைப் பாவம் என்கிறது. பாவமற்ற வாழ்க்கையே கிறிஸ்தவம் போதிக்கும் மிக முக்கியமான போதனை. எல்லாப் போதனைகளுக்கும் அடிப்படை என்று சொல்லலாம். அந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வந்தவரே இறை மகன் இயேசு.
ஆன்மீக வெளிச்சத்தில் இந்த தனிமனித ஒழுக்கம் எதைப் பேசுகிறது ?
பார்வையின் ஒழுக்கம் ;பாவத்தின் தூண்டில் கண்களில் இருக்கிறது. ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கும் எவனும் அவளோடு விபச்சாரம் செய்கிறான் என்கிறார் இயேசு. பார்வையும், நெருப்பும் ஒன்று. இரண்டின் பசியும் அடங்குவதில்லை. பார்வை தான் பாவத்துக்கான பாதையை நமக்குக் காட்டுகிறது. அந்தப் பார்வையின் ஒழுக்கம் மனிதனின் முதல் தேவை.
ஒரு கனிவான பார்வை துயரங்களை ஆற்றிவிடும். ஒரு ஆறுதலான பார்வை தனிமையை விரட்டிவிடும். ஒரு அன்பான பார்வை உடைந்த உறவுகளை இணைக்கும். நமது பார்வை சரியாகும் போது நமது கிறிஸ்தவ வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகிறது. இறைவனின் பார்வை போல இனிதாகும் போது வாழ்க்கை முழுமையடைகிறது.
சிந்தனையின் ஒழுக்கம் ; ஒரு மனிதன் தொடர்ந்து எதைச் சிந்திக்கிறானோ அதுவாகவே மாறிப்போகிறான் என்கிறது அறிவியல். ஒரு மனிதன் சிலைகளைச் செய்து அதில் நம்பிக்கை கொண்டால் அவன் சிலைகளைப் போல ஆகிறான் ( சங்கீதம் 115.8 ) என்கிறது பைபிள். அறிவியலும் பைபிளும் ஒரே விஷயத்தை இருவேறு விதமாய் சொல்கின்றன.
இனிப்பான தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை அசைத்தால் அதிலிருந்து இனிப்பான தண்ணீர் தான் சிந்தும் என்கிறார் ஏமி கார்மைக்கேல். நமது இதயம் நல்ல சிந்தனைகளால் நிரம்பியிருக்கும் போது நமது செயல்களும் நல்லவையாய் மாறிவிடுகின்றன. எனவே சிந்தனையின் ஒழுக்கம் மிக மிக முக்கியமானதாகி விடுகிறது.
இதைத் தான் இயேசு போதித்தார். விபச்சாரத்தைப் போல, பாலியல் சிந்தனையும் தவறு என்றார். கொலையைப் போல கோபம் கொள்தலும் தவறு என்றார். செயல்களை மட்டுமல்ல, அந்த செயல்களின் துவக்கப் புள்ளியையும் சரிசெய்ய வேண்டும் என்றார் இயேசு. “கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார் ( 2 திமோ 1 :7 ).
செயல்களின் ஒழுக்கம்.
ஒரு மனிதனின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இயேசு தனது செயல்களின் மூலமாக செய்து காட்டினார். முப்பது வயதுவரை பெற்றோருக்கு உதவுகின்ற பிள்ளையாய், அதன் பின் “தந்தையே என் சித்தமன்று, உமது சித்தமே ஆகட்டும்” என விண்ணகத் தந்தையின் பிள்ளையாய் வாழ்ந்தார்.
நம்மைப் போல அனைத்து விதங்களிலும் சோதிக்கப்பட்டும் பாவம் செய்யாமல் வாழ்ந்தார் என்கிறது வேதாகமம். இயேசுவின் செயல்கள் அன்பின் செயல்களாக இருந்தன. அவை சட்டத்தின் செயல்களாக இருக்கவில்லை. விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசு ஒழுக்கமற்றவள் என குற்றம் சாட்டவில்லை. மன்னித்து மறுவாழ்வு கொடுத்தார்.
“கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். ( ரோமர் 12 :1 )” என்கிறது பைபிள்.நமது செயல்களும் இயேசுவின் செயல்களைப் போல அன்பினால் வெளிப்பட வேண்டும். அப்போது நமது செயல்கள் ஒழுக்கமானவையாய் மாறிவிடும்.
வார்த்தைகளின் ஒழுக்கம். மனிதன் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்கு கொடுக்க வேண்டும் என்கிறது வேதாகமம். வீணான வார்த்தைகளைப் பேசுபவர்கள் பாவத்தை வலைவீசி இழுக்கிறார்கள். அளவாகப் பேசுபவர்கள், அன்பாகப் பேசுபவர்கள் உறவுகளை கட்டி எழுப்புகிறார்கள்.
ஒரு வார்த்தையைப் பேசும் முன் அது தேவையானதா, அடுத்த நபரைக் காயப்படுத்துமா ? அந்த வார்த்தையால் ஏதேனும் பயன் உண்டா போன்ற விஷயங்களை சிந்தித்துப் பேசவேண்டும். அப்போது நமது வார்த்தைகள் வலிமையாகும். அவசரமாய்ப் பேசிவிட்டு நிதானமாய் வருந்துவதை விட, நிதானமாய்ப் பேசி நிம்மதியாய் இருப்பதே நல்லது.
அவதூறுகள், புறணிகள், பெருமைகள், ஈகோ, கர்வம் போன்றவையெல்லாம் வார்த்தைகளில் வெளிப்படும்போது விஷப் பாம்புகளாகின்றன. குறிவைத்துத் தாக்கப்படும் குத்தல் பேச்சு இயேசுவால் வெறுக்கப்பட்டது. எனவே நமது வார்த்தைகளை ஒழுக்கமாக்குவோம்.
இந்த சூழலில் இயேசு இருந்தால் என்ன பேசுவோம் என யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும் பேசினால் வார்த்தைகள் ஒழுக்கமாகிவிடும்.
மௌனத்தில் ஒழுக்கம்.
மௌனம் சில வேளைகளில் நல்லது, சில வேளைகளில் கெட்டது. நல்லது செய்ய திராணியிருந்தும் ஒருவன் அதை செய்யவில்லையேல் அது பாவம். நல்லது பேச ஒருவனுக்கு தெரிந்திருந்தும் அதை அவன் பேசாவிட்டால் பாவம்.
“நான் உண்டு என் வேலையுண்டு” என இருப்பது பாவம். மௌனத்தில் ஒழுக்கம் வேண்டும். ஒரு பிரச்சினை உருவாகாமல் நமது மௌனம் தடுக்குமெனில் மௌனம் நல்லது. ஒரு ஏழையை, எளியவனை ஆதரிக்க வேண்டிய சூழலில் நாம் மௌனத்தை அணிந்து கொண்டால் அது பாவம்.
ஏழைகளை ஒடுக்கியவர்களை இயேசு எதிர்த்துக் குரல் கொடுத்தார். தன்னை அடித்தவர்களை அமைதியாய் அனுமதித்தார். பாதிப்பு நமக்கெனில் அமைதி காக்கலாம், பாதிப்பு பிறருக்கெனில் குரல் கொடுப்பதே மௌனத்தின் ஒழுக்கம்.
சரி, நம்மை எதற்காக ஒழுக்கமுடையவர்களாக மாற்றிக் கொள்ளவேண்டும் ?
பதர்கள் பயிர்களை விளைவிப்பதில்லை. விதைகள் வலிமையானவையாக, சத்து நிரம்பியவையாக, உயிர் உறைந்தவையாக இருக்க வேண்டும். அப்போது தான் கனிகொடுக்க முடியும். கனி கொடுப்பதற்காக நாம் தனிமனித ஒழுக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
நாம் விண்ணகம் செல்ல வேண்டுமெனில் பாவத்தை விலக்கி, தனி மனித ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். விண்ணகக் கனவு நம்மை ஒழுக்கமுடையவர்களாய் வாழ உந்த வேண்டும்.
வாழும் இறைவன் வாழ்ந்த வாழ்க்கை நம்மை ஒழுக்கத்தில் நடக்க உந்த வேண்டும். அவருடைய தூய ஆவியானவரின் வழிகாட்டுதல் நம்மை ஒழுக்கமுடையவர்களாய் நடக்க தூண்ட வேண்டும்.
இரட்சிப்பு எனும் வார்த்தை நம்மை ஒழுக்கத்திற்குள் கொண்டு வர வேண்டும். புனிதமான வாழ்க்கை வாழ்வதே இறைமகன் விரும்பியது. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து, மீட்பை அடைய வேண்டும். அந்த உற்சாகம் நம்மை ஒழுக்கத்தில் நடத்த வேண்டும்.
ஒழுக்கமாய் வாழ வேண்டும் எனும் சிந்தனையே ஒரு மாற்றத்துக்கான முதல் படி. அந்த படி இல்லாமல் புனிதத்தின் நிலைகளில் வளர முடியாது. ஒழுக்கமாய் மாறுவது என்பது ஒரு மழையிரவில் முளைக்கும் ஈசல் போல எளிதானதல்ல. அது தொடர்ச்சியான ஒரு பயணம்.
ஒழுக்கமாய் வாழ்வது எளிதல்ல. சமூக சூழலும், நெருக்கும் சந்தர்ப்பங்களும், தீய நட்புகளும் உங்களை எல்லா பக்கமும் இழுக்கும். அதை விடுத்து, இயேசுவை எடுத்தல் எளிதல்ல. அதற்கு கடின உழைப்பும், உறுதியான மனமும் அவசியம்.
ஒழுக்கமாய் வாழ்வது இறைவனின் கிருபையினால் நடப்பது. இறைவனின் கிருபை கிடைக்காத ஒருவர் பாவத்தை விட்டு வெளியே வர முடியாது. எனவே கிருபையின் நிழலில் வாழ்தல் மிகவும் அவசியம்.
நம்மை மட்டுமல்ல, நமது குழந்தைகளை ஒழுக்கமாய் வளர்ப்பதும் நமது கடமை என்கிறது விவிலியம். எனவே குழந்தைகளையும் சிறு வயது முதலே ஒழுக்கத்தின் பாதையில் பாதம் பதிக்கச் செய்ய வேண்டியதும் அவசியம்.
நாம் உடலிலும் உள்ளத்திலும் மாசு எதுவுமின்றி நம்மையே தூய்மைப்படுத்துவோம். கடவுளுக்கு அஞ்சித் தூயவாழ்வில் நிறைவடைவோம்.
தனிமனித ஒழுக்கம் தனி மனிதனை நேராக்கும். குடும்பங்களை சீராக்கும். சமூகத்தை வளமாக்கும், நாட்டை நலமாக்கும். அதுவே விண்ணக வாழ்வுக்கான குறுகிய பாதையில் நம்மை கொண்டு செல்லும்.
எந்த படிப்பையும், ‘நன்றாக கற்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு கற்க வேண்டுமே தவிர, ‘படித்து முடித்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்’ என்ற எண்ணத்துடன் அல்ல! ஒழுக்கம் இருந்தால் கல்வி தானாக வரும். ஒழுக்கமும், கல்வியும் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்!