Onetamil News Logo

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா சமூகநீதிக்கு எதிரானது! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்!

Onetamil News
 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா சமூகநீதிக்கு எதிரானது! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்!


சென்னை 2018 ஜனவரி 10 ;பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா சமூகநீதிக்கு எதிரானது! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்! தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில்  சென்னையில் உள்ள தலைமையகத்தில், தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.அப்துல் கரீம், மாநில பேச்சாளர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.   
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறியதாவது;-
இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிவரும் பாஜக அரசு, ஐந்து மாநில தேர்தலில் கண்ட பெரும் தோல்வி, நான்கரை ஆண்டுகளில் கொண்டுவந்த மக்கள் விரோத திட்டங்கள் போன்றவை காரணமாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அரசு மீதான மக்களின் வெறுப்பு போன்றவற்றை மடைமாற்றும் முயற்சியாக வகுப்புவாத பிளவுகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகின்றது. வடமாநிலங்களில் ராமர் பெயரால் மதவாத பிரச்சினைகளை உருவாக்கியும், தென்மாநிலங்களில் சபரிமலை விவகாரத்தை முன்னிறுத்தியும் பிளவு அரசியலை முன்னெடுத்து வருகின்றது.
இந்த சூழலில் தான் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான பாஜக, மகாராஷ்டிராவில் உயர்வகுப்பு மராத்தாக்களின் வாக்குவங்கியை குறிவைத்து 12 சதவீத இடஒதுக்கீடும், உயர்வகுப்பு சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளது. இது எதிர்வரும் மக்களவை தேர்தலில், தனது தோல்விகளை மக்களிடமிருந்து மறைக்க மேற்கொண்ட ஒரு அரசியல் யுக்தியாகும்.
அதிமுக மக்களவை உறுப்பினர் சுட்டிக்காட்டியது போல, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், எதற்காக பொருளாதார ரீதியில் தனியாக இட ஒதுக்கீடு என்ற கேள்வி எழுகிறது.
இதன்மூலம் ஒவ்வொரு சமூகமும் இனி தங்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க போராட்டங்களை மேற்கொள்ளும். அதன் மூலம் ஜாதி ரீதியிலான பிரச்சினைகள் தலையெடுக்கும். அதை நோக்கியே தான் மத்திய அரசின் இந்த செயல்பாடு அமைந்துள்ளது.
இடஒதுக்கீடு என்பது வெறும் பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதல்ல. சமூக ரீதியான பாகுபாடுகளால் புறக்கணிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட சமூகத்தை உயர்த்தும் சமத்துவ நோக்கில் கொண்டுவரப்பட்டதாகும்.  ஆனால், இடஒதுக்கீடு தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளுக்கு எதிராக பொருளாதர ரீதியில் இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது மட்டுமின்றி, இட ஒதுக்கீட்டின் அடிப்படையை தகர்த்து அதனை இல்லாமலாக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கமும் கொண்டதாகும்.
ஒருங்கிணைந்த முயற்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதன் அடிப்படையிலேயே இந்த இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இது சமத்துவத்துக்கான ஒரு நகர்வாகும் என்று இந்த இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இங்கு நாங்கள் கேட்பது என்னவென்றால், பாஜக அரசின் சமூக சமத்துவப் பார்வை முஸ்லிம்களின் விசயத்தில் மட்டும் விலகியிருப்பது ஏன்? என்பதுதான்.
முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பழங்குடியின மக்களை விட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாகவும் ஆகவே, முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி சச்சார் கமிஷன், மிஸ்ரா கமிஷன், குண்டு கமிஷன் என பல கமிஷன்கள் அரசுக்கு பரிந்துரைகளை அளித்துள்ளன.  ஆனால் அந்த அறிக்கையின் பரிந்துரைகளை கூட கடந்த ஆட்சியின் போது நிறைவேற்ற பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தான் சமூக சமத்துவம் என்ற பெயரில் உயர் வகுப்பினருக்கு பொருளாதார ரீதியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு அளித்துள்ளது. ஆகவே, இது முற்றிலும் தேர்தல் ஆதாயத்திற்கானது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடப்பு கூட்டத்தொடரிலேயே கொள்கை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் நிலைபாட்டையும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவையும் மட்டுமே கவனத்தில் கொண்டு ஆலையை திறக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுற்றுப்புறச் சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பெரும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத செயல்களையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் தொடர் போராட்டத்தையும், தமிழக அரசின் அரசாணையையும் கவனத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை உத்தரவு என்பது வலுவில்லாத ஒன்று. அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதிமன்றம் சென்றால் அந்த அரசாணை பலனற்றுப்போகும் என சட்டவல்லுநர்கள் உட்பட பலரும் தெரிவித்தனர். அரசாணையை விட கொள்கை முடிவு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். 
ஆனால், அதனை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்தது. அதன் விளைவுதான் இன்றைக்கு ஆலையை திறக்க நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளன.
ஆகவே தமிழக அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் நடப்பு கூட்டத்தொடரிலேயே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் கொள்கை தீர்மானத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo