Onetamil News Logo

காணாமல் போன முகிலன் குறித்த துப்பு ;சிபிசிஐடி சார்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை

Onetamil News
 

காணாமல் போன முகிலன் குறித்த துப்பு ;சிபிசிஐடி சார்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை 


சென்னை 2019 ஜூன் 6: சமூக ஆர்வலர் முகிலன் தொடா்பான வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.                                                                                                   ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் முகிலன் இவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். செங்குந்தர் மேநிலைப்பள்ளியில் படிப்பை முடித்து, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் என்ஜினியரிங் படித்தார்.தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் பணியில் இருந்தார். நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு,அவர் சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் கண்டு பொறுக்க முடியாமல் அரசுப் பணியைத் துறந்தார்.,                                                                                                                    ஈரோட்டின் சாயப்பட்டறைகள் நொய்யல் நதியில் சாயக் கழிவுநீரைத் திறந்து விடுவதற்கு எதிரான போராட்டமாகத் துவங்கியது அவருடைய பொதுவாழ்க்கை. ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி, அரசின் மீது நிர்ப்பந்தம் செலுத்தி ஆலையை மூடச் செய்தார். அதன் பிறகு மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் நடத்தினார்.லைசென்ஸ் பெறாமலே மணல் அள்ளுதல், அனுமதி பெற்ற பிறகு அனுமதித்த அளவுக்கும் மேலே திருடுதல் என மணல் கொள்ளையர்கள் பின்பற்றும் வழிகள் பலவிதம். அரசின் பொதுத்துறை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இதில் உடந்தை. காவிரிப் படுகையில் மட்டும் ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வியாபாரம் இதில் நடக்கிறது.
ஆற்றில் மணல் அள்ளுவதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று விதிகள் உள்ளன. ஆனால் பிரம்மாண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது உலகறிந்த ரகசியம். நாளுக்கு சுமார் 6000 டிரக் மணல் அள்ளப்படுகிறது என்று கணக்குச் சொல்கிறது அரசு. ஆனால் உண்மையில் சுமார் ஒரு லட்சம் டிரக் மணல் அள்ளப்படுகிறது.சந்தை விலை 7000-8000 ரூபாய் எனச் சொல்கிறது பொதுப்பணித்துறை. ஆனால் உண்மை விலை 30 ஆயிரம் வரை போகிறது. நூறு ஆண்டுகளில் எடுக்கக்கூடிய மணல் இப்போதே அள்ளப்பட்டு விட்டது. இப்படியே போனால் இன்னும் சில காலங்களில் காவிரி டெல்டா பகுதியே இருக்காது. தொடர்ந்த மணல் கொள்ளையின் காரணமாக தமிழகத்தின் அனைத்து நதிப்படுகைகளும் பத்து மீட்டர் கீழே போய்விட்டன.
நிலத்தடி நீர்மட்டமும் கீழே போய்க்கொண்டே இருக்கிறது. 2014இல் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளைக்கு எதிராக ஒரு நூலை வெளியிட்டார் முகிலன். எதிரிகளின் பட்டியல் இன்னும் அதிகரித்து விட்டது. சமூக ஆர்வலரான இவர் கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிரான போராட்டம், சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டம்,கூடங்குளம் அணுவுலை ,நியூட்ரினோ, ஸ்டெர்லைட்,ஆற்று மணல் கொள்ளை,தாது மணல் கொள்ளை, Pepsi, coke நீர் கொள்ளை,நிலத்தடிநீர் கொள்ளை,கிரானைட் கொள்ளை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் ,ஷெல் கேஸ்,இப்படி பல்வேறு சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்தார்.அதனால் தான் இந்த அரசாங்கம் அவரை 300 நாட்கள் சிறைப் படுத்தியது.
                                                                                                                                 கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி, சமூக ஆர்வலர் முகிலன் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். இதையடுத்து சென்னையில் இருந்து மதுரை செல்வதாக கூறிவிட்டு, எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலன், அதன் பின்னர் மாயமானார்.
அவரது செல்போன் திண்டிவனம் அருகேயுள்ள கூடுவாஞ்சேரி-உலக்கூர் பகுதியில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மாயமான சம்பவம் குறித்த வழக்கு போலீசில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது  இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் தனித்தனி குழுக்களாக ஈரோடு, நாமக்கல், சேலம், மதுரை, சென்னை, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முகிலன் மாயமாகி இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது. அவரை கண்டுபிடித்து தரக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை கடந்த மார்ச் 4ம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் முன்பு சிபிசிஐடி சார்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், முகிலன் தொடா்பான வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிசிஐடியின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணை தொடா்பான அடுத்தக்கட்ட அறிக்கையை 3 வார காலத்தில் சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo