குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும்
பீஜிங் 2021 செப் 1 ;குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
சீனாவின் வீடியோ கேம் ஒழுங்குமுறை ஆணையமான, நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த 2018ல் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு புதிய வீடியோ கேம்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சீனாவின் வீடியோ கேம் நிறுவனங்களான நெட்ஈஸ், டென்சென்ட் (NetEase, Tencent) ஆகியன வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, 2019ல், 18 வயதுக்குக் கீழ் உள்ளோர், வாரநாட்களில் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் மட்டுமே வீடியோ கேம் பயன்படுத்தலாம்; இரவு 10 மணி தொடங்கி காலை 8 மணி வரை வீடியோ கேம் விளையாடக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இன்று (செப்., 1) முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, சீனக் குழந்தைகள் இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும். 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். புதிய சட்டத்தின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 18 வயதுக்குக் குறைவானோர் வீடியோ கேம் விளையாட முடியும். தேசிய விடுமுறை நாட்களில் இதே நேரத்தில் விளையாடலாம்.புதிய விதியின்படி 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் தங்களின் உண்மையான பெயர், விவரங்களை அளித்தால் மட்டுமே வீடியோ கேம் விளையாடு பதிவு செய்துகொள்ள முடியும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.