அபாயகரமான தொழிற்சாலைகள்! பொதுமக்கள் எதிர்ப்பு!! குன்றத்தூரில் பரபரப்பு!!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகராட்சியில் CMDA அனுமதி பெற்ற குடியிருப்பு பகுதிகளுக்குள் அத்துமீறி அனுமதியின்றி 34 தொழிற்சாலைகள் அமைந்துள்ளதாகவும் அதனை அப்புறப்படுத்த கோரி இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மற்றும் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி தலைமையில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது தாங்கள் வசிக்கும் பகுதி சிஎம்டிஏ அப்ரூவல் பெற்ற குடியிருப்பு பகுதியாகும் தங்கள் வசிக்கும் பகுதிக்குள் அனுமதியற்ற அபாயகரமான தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும் அந்த தொழிற்சாலைகளின் மூலம் காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் மாசுபாடு,இயல்புக்கு மாறான ஒலி எழுப்பப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
மேலும் அனுமதியற்ற தொழிற்சாலைகள் திட்ட அனுமதிக்கு மாறாக பக்க திரவிடங்கள், தீ பாதுகாப்பு வழிமுறைகள் என எதையும் பின்பற்றாமல் தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலையை உருவாக்குவதோடு அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருக்கும் அபாயகரமான சிலிண்டர்களால் எந்நேரமும் தீ விபத்து ஏற்படலாம் என்றும் அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் தங்கள் குடியிருப்பில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பெரும் உயிர் சேதம் ஏற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தகவல் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கவில்லை என்று நகராட்சி நிர்வாகம் தகவல் அளித்திருப்பது பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ஆகவே அரசு அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயல்களை கண்டித்தும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்தும் பொதுமக்கள் கழுத்தில் கருப்பு துண்டு அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து மனு அளித்தனர்.