Onetamil News Logo

பிரணாப் முகர்ஜிக்கு  பாரத ரத்னா விருது ; 112 பேருக்கு பத்ம விருதுகள்;  4 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது ;மத்திய அரசு 2019 ம் ஆண்டில் அறிவித்தது 

Onetamil News
 

பிரணாப் முகர்ஜிக்கு  பாரத ரத்னா விருது ; 112 பேருக்கு பத்ம விருதுகள்;  4 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது ;மத்திய அரசு 2019 ம் ஆண்டில் அறிவித்தது 


புதுடெல்லி 2019  ஜனவரி 26 ;சமூகம், பொருளாதாரம், கலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு தேர்ந் தெடுத்து பத்ம விருது வழங்கி கவுரவித்து வருகிறது.இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பத்ம விருதுகள் 112 பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு உள்ளது.விருது பெற்றவர்களில் 21 பேர் பெண்கள். 11 பேர் வெளிநாட்டில் வசிப்பவர்கள். திருநங்கை ஒருவருக்கும் விருது கிடைத்து இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா இந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த பாரதீய ஜனசங்க தலைவர் நானாஜி தேஷ்முக், மறைந்த பிரபல பாடகர் புபேன் ஹசாரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இவர்களில் நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு, மறைவுக்கு பின் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரபல கல்வியாளர் மதன்மோகன் மாளவியா (மறைவுக்கு பின்) ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டில் 3 பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
சத்தீஷ்கார் மாநிலத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் தேஜன்பாய், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் அனில்குமார் மனிபாய் நாயக், நாடக கலைஞர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே, ஆப்பிரிக்க நாடான ஜிபோட்டியைச் சேர்ந்த இஸ்மாயில் உமர் குல்லே ஆகிய 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டு உள்ளது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நாயர் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. நடிகர் மோகன்லால் ‘ஜில்லா’, ‘இருவர்’, ‘உன்னைப்போல் ஒருவன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்து உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ், பிரபல சமூகசேவகி மதுரை சின்னப்பிள்ளை, பிரபல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.வி.ரமணி, டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமசாமி வெங்கடசாமி உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட மதுரை சின்னப்பிள்ளையை கவுரவிக்கும் வகையில் அவரது காலில் விழுந்து ஆசிபெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.பாரத ரத்னா விருது பெற்றுள்ள பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் பின்னர் நடைபெறும் விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குவார்.
பாரத ரத்னா விருது பெற்றுள்ள மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவர் பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசில் நிதி, ராணுவம், வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார். திட்டக்கமிஷன் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார்.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நானாஜி தேஷ்முக் கடந்த பாரதீய ஜனசங்கத்திலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் அங்கம் வகித்தவர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து உள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. நானாஜி தேஷ்முக் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புபேன் ஹசாரியா பின்னணி பாடகர், கவிஞர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ, தாதாசாகேப் பால்கே, அசாம் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர் 2011-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி தனது 85 வயதில் மரணம் அடைந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo