Onetamil News Logo

காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல;உலகப் பிரச்சினை ;பாராளுமன்றத்தில் வைகோ எம்.பி ஆவேச பேச்சு 

Onetamil News
 

காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல;உலகப் பிரச்சினை ;பாராளுமன்றத்தில் வைகோ எம்.பி ஆவேச பேச்சு 


                                                      
டெல்லி  2019 ஆகஸ்ட் 5 ;காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை"  இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக் கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன்" :நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசமாக பேசினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி மாநில அந்தஸ்தை பறித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்றும், லடாக் யூனியன் பிரதேசம் என்றும் பிரித்து, மாநில அந்தஸ்தையே பறித்துவிட்ட மசோதாவை எதிர்த்து மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் உறுப்பினர்களும், எதிர்க் கட்சி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுட்டனர்.
வைகோ எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து மசோதாவை எதிர்த்து முழக்கம் எழுப்பிவிட்டு, தன்னுடைய இருக்கைக்குச் சென்று, நான் இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியோடு மாறுபடுகிறேன். நான் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார்.
தொடர்ந்து பலமுறை கேட்டபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து, வைகோவை பேச அனுமதியுங்கள். அவர் கருத்தை நாங்களும் கேட்க விரும்புகிறோம் என்றார்.
பின்னர் வைகோ பேசுகையில்:- “இந்திய அரசியல் நிர்ணய சபையில், அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு நிறைவேற்றப்பட்டபோது, தலைசிறந்த பாராளுமன்றவாதியான எச்.வி.காமத் அவர்கள் எழுந்து, “இந்த நாள் வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரிய நாள்” என்றார். அதேபோலத்தான் இந்திய ஜனநாயக வரலாற்றில் 2019 ஆகஸ்ட் 5 ஆம் நாள் இரத்தக் கண்ணீரை வடிக்கச் செய்த நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள்.
1947 நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான் ஆதரவோடு, பக்டூனிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்த நேரத்தில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் அவர்கள், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
அந்த ஒப்பந்தத்தின்படி, எதிர்காலத்தில் காஷ்மீர் தனி அரசமைப்போடு விளங்கும். தனி அரசியல் நிர்ணய சபை, அரசியல் சட்டத்தை உருவாக்கும். அந்த மாநிலத்திற்கு என்று தனி கொடி, தனி பிரதமர் இருப்பார்.
இந்த ஒப்பந்தத்துக்கு காஷ்மீர் மக்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த ஷேக் அப்துல்லா முழு ஆதரவு தந்தார். காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பண்டித ஜவஹர்லால் நேரு உறுதிமொழி அளித்தார். 1948 லும், 1950 களிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வந்தார்.
நான் ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த மரியாதை கொண்டவன். அவர் எழுதிய நான் கண்ட இந்தியா, உலக சரித்திரத்தின் ஒளிக் கதிர்கள் என்ற இரு நூல்களும் ஈடு இணையற்றவை. அதற்கு நிகரான ஒரு வரலாற்று நூல் உலகிலேயே இல்லை. ஆனால், காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லாவை 1950 களில் கைது செய்து, தமிழ்நாட்டின் கொடைக்கானலில் சிறை வைத்தது வரலாற்றுப் பிழை ஆகும்.
1980 ஆம் ஆண்டு, என் இனிய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவை நான் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். அப்பொழுது ஷேக் அப்துல்லா அவர்கள் என்னிடம் கூறிய சொற்கள் மறக்க முடியாதவை.
“என் தமிழ்நாட்டு இளைய நண்பனே! காங்கிரஸ் கட்சியின் அரசியல் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடம் இல்லை” என்றார்.
காங்கிரஸ் கட்சியோடு பரூக் அப்துல்லா கூட்டணி வைத்தபோது, அவர் தந்தையாரின் வார்த்தைகளை நினைவுபடுத்தினேன். அதன் விளைவாக ஒரு நாள் காலை முதலமைச்சர் பரூக் அப்துல்லா தேநீர் அருந்திக்கொண்டு இருந்தபோது, அவரது ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசு கவிழ்த்தது என்ற செய்தி வந்தது.
காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்சினை இப்படி வெடிப்பதற்கே காங்கிரஸ் கட்சிதான் காரணம். பண்டித நேரு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
1960 களின் தொடக்கத்தில், ஐ.நா.வின் இந்தியத் தூதராக இருந்த எம்.சி.சாக்லா, ஐ.நா. சபையில் கூறினார், “காஷ்மீரில் மூன்று பொதுத்தேர்தல் நடத்திவிட்டோம். அதுதான் பொது வாக்கெடுப்பு” என்றார். இதைவிட ஒரு பெரிய மோசடி உலகில் எங்கும் நடக்கவில்லை.
கார்கில் யுத்தம் வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் சரவணன் உள்ளிட்ட இளைஞர்கள் உயிரைத் துச்சமாக மதித்து வீரத்துடன் போராடி, இரத்தம் சிந்தி மடிந்தனர்.
அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமை அமைச்சராக இருந்தார். என் உயிர் நண்பர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இராணுவ அமைச்சராக இருந்தார். இன்றைக்கு உள்ள நிலைமை என்ன?
பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க. உறுப்பினர் அவரைத் தாக்கினர். நாசீர் அகமதுவை மாநிலங்கள் அவை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர். இந்தப் பிரச்சனையில் அவர் இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக் கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன். நான் இந்திய அரசியல் சட்டத்தின் இந்தி மொழிப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தியவன்.
நண்பர் சிதம்பரம் காங்கிரஸ் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “தி.மு.க.வினர் கோழைகள், அரசியல் சட்ட வாசகத்தை தாளில் எழுதித்தான் கொளுத்தினோம் என்று நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தந்தவர்கள்” என்றார்.
நான் குறுக்கிட்டுப் பேசினேன், “இல்லை. நான் அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தினேன் என்று நீதிமன்றத்திலேயே பிரமாண வாக்குமூலம் தந்தேன். அதனையே இதே மன்றத்திலும் சொன்னேன். என் எம்.பி. பதவி பறிக்கப்பட்டாலும் கவலை இல்லை” என்று சொன்னேன்.
இன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்.
ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்கள், மறுபக்கம் பாகிஸ்தனில் அல்கொய்தா அமைப்பினர், ஒரு பக்கம் நம் மீது வெறுப்பு கொண்டிருக்கும் செஞ்சீனா தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது, அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு திறமையான குள்ளநரி. கொசாவோ பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். சூடான் பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். கிழக்கு தைமூர் பிரச்சினை போல் பிரச்சினை ஆகும். ஐ.நா.மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும் தலையிடும்.
தலைசிறந்த நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், மேக்பத் துன்பியல் நாடகத்தில் பின்வருமாறு சொல்வான்:- “ஆயிரம் ஆயிரம் அரேபியாவின் வாசனாதி திரவியங்களாலும், மேக்பத் சீமாட்டியின் கையைச் சுத்தப்படுத்த முடியாது. அதேபோலத்தான் இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்களை வரலாறு மன்னிக்காது.
காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது.
இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்.”- என ஆவேசமாகவும் நெகிழ்ச்சியுடனும் உறையாற்றினார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo