திமுக எம்.பி. திருச்சி சிவா மகன்,சூர்யா சிவா, திருச்சியில் இன்று கைது
திருச்சி 2022 ஜூன் 23 ;திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், அண்மையில் பாஜகவில் இணைந்த மாநில ஓபிசி பிரிவு செயலாளருமான சூர்யா சிவா, திருச்சியில் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பணம் கேட்டு மிரட்டி பேருந்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது நடவடிக்கைக்கு சற்று நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து, தன்னை போலீஸார் கைது செய்யவுள்ளதாக தெரிவித்த சில நிமிடங்களில் அவர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டியின்போது அவர் கூறுகையில்,கடந்த 11ஆம் தேதி உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் (கள்ளக்குறிச்சி காவல் நிலைய சரகம்) நின்றிருந்த தனது கார் உள்ளிட்ட 3 வாகனங்கள் மீது, பின்னால் வந்த ஒரு ஆம்னி பேருந்து மோதியதில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக கள்ளக்குறிச்சியில் புகார் தெரிவித்து சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்குப் பதிவு செய்ய வேண்டாம், கார் பழுதுநீக்க ஆகும் செலவை தந்து விடுவதாக பேருந்து உரி்மையாளர் தெரிவித்ததால் மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்யவில்லை.
அதன் பின்னர் 10 நாள் கழித்தும் பணம் வராததால் மோதிய பேருந்து நிறுவனத்தின் மற்றொரு பேருந்தை, திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியிலிருந்து எடுத்து வந்து ஒரு பெட்ரோல் பங்க்கில் நிறுத்திவிட்டு, பணத்தை கொடுத்துவிட்டு பேருந்து எடுத்துச் செல்லலாம் என கூறியிருந்தேன். அப்போது பேருந்தை எடுத்து வந்தது கூட அவர்கள் ஓட்டுநர்தான். பேருந்துக்கு ஆர்சி பர்மிட், காப்பீடு, வரி என எதுவுமே செலுத்தாமல் உள்ளதால், வழக்கு வேண்டாம் எனக்கூறினார்கள். அதற்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளன. இந்நிலையில் புதன்கிழமை இரவு திடீரென வழக்குப் பதிவு செய்து என்னை கைது செய்யும் நடவடிக்கையில் உள்ளனர்.
இதற்கு முழு காரணம் விழுப்புரம் மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்கள்தான். நான் சிறை சென்று வெளியே வந்ததும் அவர்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை தெரிவிப்பேன். இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நேரடியாக மோதலாம். அதைவிடுத்து இப்படி காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுப்பது தேவையற்ற செயல். பாஜகவை பொறுத்தவரை சட்டத்துக்கு உட்பட்டே அனைத்து வேலைகளையும் செய்து வரும் நிலையில், காழ்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்றார்.
பேட்டியின் போது பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், நிர்வாகிகள் இல.கண்ணன், காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.