5 கன்டெய்னர் லாரிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டதால் தி.மு.க.வினர் போராட்டம் ;கலெக்டர் விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தல் 6ம் தேதி நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
தொடர்ந்து வாக்குச்சாவடியில் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கும் பணி இரவுபகலாக நடந்தது.
இந்த நிலையில் 5 கன்டெய்னர் லாரிகளில் மேலும் சில வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை பார்த்த தி.மு.க.வினர் இதுகுறித்து லாரிகளில் வந்தவர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் எனவும், ஓட்டுப்பதிவுக்கான கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் எனவும் தெரிவித்து உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த தி.மு.க.வினர் அந்த லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ், போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, 5 லாரிகளில் கொண்டு வரப்பட்ட எந்திரங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானால் மாற்றுவதற்கும், அதுபோல் வாக்குப்பதிவு மையங்களில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் குடோனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.