Onetamil News Logo

தமிழ்நாடு சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் வெளிநடப்பு! 

Onetamil News
 

தமிழ்நாடு சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் வெளிநடப்பு! 


சென்னை 2022 ஜனவரி 9 ;தமிழக சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். கவர்னர் உரையாற்ற தமிழ்நாடு அரசின் சார்பில் அவர் உரையாற்றும் குறிப்புகள் அவருக்கு கொடுக்கப்பட்டு விடும். அதை அவர் சட்ட சபையில் வாசிப்பார். இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது கவர்னருக்கும், தமிழக அரசுக்கும், இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில் இன்று சட்டசபை கூடியது. கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தியபோது அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருந்த சில வாசகங்களை வாசிக்காமல் தவிர்த்து விட்டார். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக இருந்த வாசகம், தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழும் வாசகம், திராவிட மாடல் ஆகிய வாசகங்களை வாசிக்கவில்லை. ஆனால் கவர்னர் உரை நிகழ்த்தியபிறகு சபாநாயகர் அப்பாவு தமிழில் கவர்னர் உரையை வாசித்தபோது அதில் இடம்பெற்றிருந்த அனைத்து வாசகங்களையும் முழுமையாக வாசித்தார். இதன் பிறகு சபை நிறைவடையும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கவர்னர் சில வாசகங்களை வாசிக்காமல் தவிர்த்ததால் அதை சுட்டிக்காட்டும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை சுட்டிக்காட்டி பதிவு செய்யும் வகையில் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- கவர்னருக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன் பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநருடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரச மைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல – அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக் குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே கவர்னர் ஆர்.என்.ரவி தனது உதவியாளரிடம் முதல்-அமைச்சர் என்ன பேசுகிறார் என்று கேட்டார். அதற்கு அவர் முதல்- அமைச்சர் பேசியதை ஆங்கிலத்தில் எடுத்துக்கூறினார். அதை கேட்டதும் அதிருப்தி அடைந்த கவர்னர் உடனடியாக சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பிறகு முதல்- அமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது. முன்னதாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை வாசிக்கும்போதே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சபையை விட்டு வெளியேறிவிட்டனர். இதேபோல் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் தீர்மானத்துக்கு எதிராக கோஷம் போட்டபடி வெளியே சென்றனர். தமிழக சட்டசபையில் கவர்னர் அதிருப்தி அடைந்து பாதியில் வெளியேறியது இதுவே முதல் முறை. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo