மனதை ஒருநிலைப் படுத்தி தர்ம சிந்தனையை தரும் கோலங்கள்
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மனதை ஒருநிலைப் படுத்தி தர்ம சிந்தனையை தரும் கோலங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இன்னர் வீல் கிளப் ஆப் திருச்சி மலைக்கோட்டை தலைவர் கவிதா நாகராஜன் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்து பேசுகையில்,மனதை ஒருநிலைப் படுத்தி தர்ம சிந்தனையை தருகின்றது கோலங்கள்.,கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்க்கே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் மக்கள் வாழ்வியல் அழகானது அர்த்தமுள்ளது ஆகும். அவ்வகையில் வீட்டினையும் வீட்டு வாசலையும் தூய்மை செய்து வாசலில் அரிசி மாவினால் கோலமிடும் தர்ம சிந்தனை பண்பு தமிழர்களிடம் உண்டு.
நாம் தினமும் போடும் கோலம் நமது மனநிலையை ஒரு நிலைப் படுத்தும்.
நமது மனம் அமைதியாக ஆனந்தமாக இருந்தால் நேர்த்தியாக கோலமிடுவோம் என்றார்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார் பேசுகையில்,
“நமது உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நாம் செய்யும் செயலில் முழுமையும், திருப்தியும் ஏற்படும். அதுபோல் அழகான கோலமிடுகையில் உடலும், மனதும் ஒருங்கிணைந்து செயல்டுகிறது. அதிகாலை வேளையில் எழுந்து கோலம் போட்டுவிட்டு அதன் பிறகே அன்றைய பணிகளை தொடங்கினால் மனம் ஒருநிலைப்பட்டிருக்கும். உடல் புத்துணர்வோடும், மனம் புத்திக்கூர்மையுடனும் செயல்படும்.
கோலம் கணிதத்தின் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டுள்ளது புள்ளிக்கோலம், நெளிக்கோலம், கிழமை கோலம், சிக்கு கோலம், கம்பி கோலம், ரங்கோலி கோலம் என பல வகை உள்ளது.
கோலங்ளில் புள்ளிகள் வைத்து அதில் கோடுகள் போட்டு இணைத்து, அழகிய கோலமிடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
அதுமட்டுமின்றி ஜீவராசிகளுக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அரிசிமாவினால் கோலமிடும் பொழுது தர்மங்களையும் செய்கின்றனர். இதனால் தர்ம சிந்தனை ஓங்குவதோடு மனமும் ஒரு நிலை படுகிறது என்றார்.
அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தரையில் கோட்டுருக்கள் அல்லது கோலங்களை வரைந்து அதற்குப் பல்வேறு நிறப் பொடிகள் கொண்டு நிறமூட்டி அழகுபடுத்தினர். சிறப்பாக கோலமிட்ட மாணவ மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்