பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கேரளா 2021 அக்டோபர் 13 ;பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் கணவன் சூரஜ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா. கணவர் சூரஜ், அடூரை சேர்ந்தவர். கடந்த 2020ம் ஆண்டு மே 7-ம் தேதி தாய் வீட்டில் மாடி ஏ.சி.,அறையில் துாங்கி கொண்டிருந்த உத்ரா பாம்பு கடித்து இறந்தார். உறவினர்களுக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சூரஜ்ஜிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து சூரஜ், பாம்பு வழங்கிய சுரேஷ் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய சுரேஷ்,மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை கொல்ல வேண்டும் என்று கூறி சூரஜ் பாம்பை வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்தார். பாம்பு வேகமாக கடிப்பதற்காக அதை ஏழு நாள் பட்டினி போட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உட்பட 288 ஆதாரங்கள்,40 பொருட்கள்,87 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து கடந்த அக்.,11ல் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூரஜ், குற்றவாளி என நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்தார். அவரின் தண்டனை விவரங்களை இன்று (அக்.,13) வெளியிட்ட நீதிமன்றம், குற்றவாளி சூரஜ்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.