என் இனம் சார்ந்த கன்னடர்களை எவராவது திராவிடன் என்று அழைத்தால் அவர்களை நான் செருப்பால் அடிப்பேன். – கர்நாடக முதல்வர் சித்தராமையா”
கடந்த 10ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் இன்று (மே, 20) பதவி ஏற்றுள்ளனர்.
பெங்களூரில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சித்தராமையா திராவிடம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அப்பதிவில், “என்னை திராவிடன் என்று யாராவது சொன்னால் அவர்களை செருப்பால் அடிப்பேன் – கர்நாடக முதல்வர் சித்தராமையா.. நான் கன்னடன், கன்னடன் மட்டுமே. திராவிடன் என்று ஒரு இனம் இருந்ததாக நான் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. ஆகவே என்னை மட்டுமல்ல, என் இனம் சார்ந்த கன்னடர்களை எவராவது திராவிடன் என்று அழைத்தால் அவர்களை நான் செருப்பால் அடிப்பேன். – கர்நாடக முதல்வர் சித்தராமையா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்தராமையா திராவிடம் குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்ற கீ வேர்டுகளை கொண்டு இணையத்தில் தேடினோம். 2022, மே மாதம் சித்தராமையா 10ம் வகுப்புக்கான திருத்தப்பட்ட கன்னட பள்ளி பாடப்புத்தகங்களில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க (RSS) நிறுவனர் ஹெட்கேவார் உரையின் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்நிகழ்வில் அவர் பேசியது குறித்து ‘இந்தியா டுடே’ 2022, மே மாதம் 27ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “ஆர்.எஸ்.எஸ். காரர்கள் – பூர்வீக இந்தியர்களா? இதுபோன்ற விஷயங்களை நாங்கள் விவாதிக்க விரும்பவில்லை. ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா? அவர்கள் திராவிடர்களா? நாம் நமது வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும்” என சித்தராமையா கூறியுள்ளார்.
சித்தராமையா இவ்வாறு கூறியது தொடர்பாக அப்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. “அவர் கூறியதற்கு (சித்தராமையா) நான் பதிலளிக்கும் முன்னர், அவர் முதலில் திராவிடரா அல்லது ஆரியரா என்பதை அறிவிக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சித்தராமையா, “ஆரியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மத்திய ஆசியாவில் இருந்து வந்து, இங்கு வாழ்ந்து இந்தியர்களாக மாறினார் என நான் கூறியிருந்தேன். ஆனால் நான் திராவிடப் பிரிவைச் சேர்ந்தவன். அதில் என்ன தவறு?“ எனப் பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா தன்னை ஒரு திராவிடன் எனக் கூறியது தொடர்பாக ‘தி இந்து’, ‘Deccan Herald’ போன்ற ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பசவராஜ் பொம்மை மற்றும் சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வீடியோவினை ‘Public TV’ என்னும் யூடியூப் பக்கத்தில் செய்தியாக பதிவிடப்பட்டுள்ளது.
மாறாக, சித்தராமையா தன்னை திராவிடன் என சொன்னால் செருப்பால் அடிப்பேன் எனக் கூறவில்லை என்பதை நமது தேடலில் அறிய முடிகிறது.