Onetamil News Logo

ஐகோர்ட் உத்தரவு 'மெரினாவில் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்படுகிறார். 

Onetamil News
 

ஐகோர்ட் உத்தரவு 'மெரினாவில் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்படுகிறார்.     


   சென்னை 2018 ஆகஸ்ட் 7 ; திமுக தலைவர் கருணாநிதியின் நல்லடக்கத்தை மெரீனாவில் நடத்த சென்னை ஹைகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற, திமுக தரப்பின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அமர்வின் முன்பு திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஹுலுவாடி ரமேஷுடன், எஸ்.எஸ். சுந்தர் இணைந்து விசாரித்தனர். ஹுலுவாடி ரமேஷ் இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் சீனியர் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் ஆஜராகியிருந்தார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினார். வாதம் அதிகாலை 1 மணிக்கு தொடங்கியது. தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அவகாசம் கோரியதையடுத்து விசாரணை இன்று காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலோட்டமாக இந்த வழக்கை அணுக முடியாது என்பதால் எழுத்துப்பூர்வ பதிலை அரசு தரப்பு தாக்கல் செய்ய கோரப்பட்டது. என்ன சட்ட சிக்கல் உள்ளது என்பதை அரசு தெளிவாக தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். காலை 6 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்ய முடியுமா என அரசு தரப்பை நீதிபதிகள் கேட்டபோது, காலை 10.30 வரை நேரம் தருமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். ஆனால் இது உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், காலை 8 மணிக்காவது பதிலை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இன்று காலை தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மெரீனாவில் சமாதி அமைக்க இடம் தர இயலாத நிலை உள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு காந்தி மண்டப வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு சுமார் இரண்டரை மணி நேரம் விவாதிக்கப்பட்டது. விசாரணையின்போது டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர்கள் துரைசாமி, பாமக பாலு ஆகியோர் தங்களது மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் அதை ஏற்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் அரசு கூறி வந்த தடை நீங்கியது. இருப்பினும், பல்வேறு காரணங்களை முன் வைத்து, மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தர தேவையான காரணங்களை வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் காலை 10.45 மணிக்கு தனது தீர்ப்பை வெளியிட்டனர். மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ராஜாஜி ஹாலில் இந்த தகவல் ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்பட்டது. வாழ்க கோஷம் விண்ணை முட்டியது. ஸ்டாலின் கண்களில் நீர் ததும்ப கையெடுத்து கும்பிட்டார்.
 திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியவரும், திராவிட சித்தாந்தத்தின் மிகப் பெரிய தளகர்த்தர்களில் ஒருவருமான பேரறிஞர் அண்ணா சென்னை மெரீனா கடற்கரையில்தான் மீளாத் துயலில் இருக்கிறார். இவருக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவிட வளாகம்தான் அண்ணா சமாதியாகும்.
சென்னை என்றால் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சின்னங்கள் அடையாளமாக இருந்தாலும் அண்ணா சமாதிதான் அதன் முக்கிய அடையாளமாகும். தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா கடந்த 1969-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. எப்படி தி.கவினருக்கு பெரியார் திடலோ, அது போலத்தான் திமுகவினருக்கு அண்ணா நினைவிடம்.
1969ம் ஆண்டு அண்ணா மறைவடைந்தார். அவரது மறைவு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக பின்னர் மாறியது.
அண்ணா மறைந்த பின்னர் அவரது உடல் மெரீனா கடற்கரையில் கூவம் நதிக்கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பகுதி அண்ணா சதுக்கமாக அறிவிக்கப்பட்டது.
இந்த சமாதியானது கடந்த 1996-1998-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது புனரமைக்கப்பட்டது. சுமார் ரூ. 2.75 கோடியில் புனரமைக்கப்பட்டபோது உதயசூரியன் போல் நுழைவு வாயில் வைக்கப்பட்டது.
கடந்த 2001-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த உதயசூரியன் நுழைவு வாயிலை அகற்றினார். தந்தம் போன்ற ஒரு வாயிலை அமைத்தார். பின்னர் சமாதிக்கு செல்லும் பாதைகளை விரிவடையச் செய்து மார்பிள் கற்களை சமாதியில் பதித்தார். மேலும் சமாதியின் அருகே மண்டபங்களையும் அமைத்தார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது அண்ணாவின் சமாதியும் அங்கிருந்த கட்டமைப்புகளும் சேதமடைந்தன. இதையடுத்து அதை 1.33 கோடி ரூபாய் செலவில் சரி செய்யப்பட்டது. மீண்டும் கடந்த 2012-ஆம் ஆண்டு சமாதி ஒன்றரை கோடியில் புனரமைக்கப்பட்டது.
 
கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவரை பற்றிய அருங்காட்சியகமும் உள்ளது. இந்த சமாதி தமிழக அரசின் செய்தித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பொதுப் பணித்துறை பராமரித்து வருகிறது. இந்த இடத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சமாதிகளும் உள்ளன.
மேற்கண்ட சிறப்புகளை பெற்ற அண்ணா சமாதிக்கு அருகில் தனக்கு 6 அடியில் இடம் வேண்டும் என்று கருணாநிதியே உயிருடன் இருந்த போது கேட்டு கொண்டார். ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுக்கிறது.
மெரீனா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. அதாவது திராவிடத் தலைவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு கூறும் காந்தி மண்டபம் பகுதியில் தேசிய கட்சியான காங்கிரஸ் சார்பில் முதல்வர்களாக இருந்த காமராஜர், ராஜாஜி மற்றும் பக்தவத்சலம் ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன. திமுக மெரீனா கடற்கரையை வலியுறுத்திக் கேட்பது இந்தக் காரணத்திற்காகத்தான்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo