நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் கோச் தகவல் பலகை அமைக்க ஒப்பந்தபுள்ளி கோர தயார் நிலை கோட்ட அதிகாரி தகவல்
நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் நாகர்கோவில் சந்திப்பு (கோட்டார்) ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் பயணிக்கும் போது 5 கிமீ தொலைவில் உள்ள சிறிய எச்ஜி-1 பிரிவு ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தின் 2019-20ம் ஆண்டு வருவாய் 2,65,86,085 ஆகவும், தினசரி இந்த ரயில் நிலையம் வழியாக சராசரியாக 535 பயணிகள் பயணம் செய்தி தினசரி வருவாயாக 72,839 கிடைக்கின்றது. இந்த ரயில் நிலையம் வழியாக ரயில் நிலையம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்களாக திருநெல்வேலி – பிலாஸ்பூர், திருநெல்வேலி – ஜாம்நகர்,திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் ஆகிய ரயில்கள் நின்று செல்கிறது.
இந்த ரயில் நிலையம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிராசிங் நிலையமாக மாற்ற பணிகள் துவங்கப்பட்டது. குறைந்த நிதி ஒதுக்கீடு,மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 10 ஆண்டகளாக நடைபெற்று வந்த பணிகள் ஓரளவுக்கு முடிவு பெற்று கடந்த பெப்ரவரி மாதம் 22-ம் தேதி நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் உள்ள புதிய கட்டிடம்,பயணசீட்டு அலுவலகம், தரம் உயர்த்தப்பட்ட நடைமேடை பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. தற்போது அனைத்து ரயில்களும் முன்பதிவு உள்ள ரயில்களாகவே இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் தங்கள் முன்பதிவு செய்யுள்ள ரயில்பெட்டிகள் எந்த இடத்தில் வருகின்றது என்பதை கண்டறிய முடியாமல் ரயில் வந்து நின்ற பிறகு அங்கும் இங்குமாக ஓடி ரயிலில் ஏறவேண்டியுள்ளது. இதிலும் வயதானோர், ஊனமுற்றோர், குழந்தைகள் மற்றும் நெடுற்தூரத்துக்கு பயணம் செய்ய உடமைகள் கொண்டு வரும் பயணிகளின் கடும்சிரமத்துக்குள்ளாகுகின்றனர்.
ஆகவே நடைமேடைகளில் ரயில் பெட்டிகளின் நிலவரம் அறியும் தகவல் பலகை அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு பதிலளித்து உள்ள திருவனந்தபுரம் கோட்ட முதுநிலை கோட்ட வணிக மேலாளர் அவர்கள் ரயில் பெட்டிகளின் நிலவரம் அறியும் தகவல் பலகை டிஜிட்டல் மற்றும் சதாரண தகவல் பலகை என இரண்டு வகையாக தகவல் பலகை வைப்பதற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்படும் பணிகள் நடைபெறுவதாகவும் இந்த பட்டியிலில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் உள்ளதாகவும் குமரி மாவட்ட பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம்க்கு அனுப்பபட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை:
திருவனந்தபுரம் கோட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராசிங் ரயில் நிலையங்களான இரணியல், நாகர்கோவில் டவுண்,குழித்துறை,ஆரல்வாய்மொழி,வள்ளியூர்,நான்குநேரி ஆகிய ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் ரயில் பெட்டிகளின் நிலவரம் அறியும் தகவல் பலகை வைக்க வேண்டும். மீதமுள்ள சிறிய ரயில் நிலையங்களான ஆளுர், பள்ளியாடி,குறித்துறை மேற்கு,தோவாளை,பணக்குடி, மேலபாளையம்,செங்குளம்,காவல்கிணறு ஆகிய ரயில் நிலையங்களில் சதாரண பெயின்ட் மூலம் எழுதப்பட்ட பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் சந்திப்பு, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலயங்கள் ரயில்கள் புறப்படும் ரயில்நிலையமாக இருப்பதால் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ரயில் அறிவிப்பு டிஜிட்டல் தகவல் பலகை வசதி ஏற்படுத்த வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.