Onetamil News Logo

காரையாறு சொரிமுத்து ஐயனார் கோவில் தமிழ்நாட்டின் அழகான இடங்களுள் ஒன்று.  பல திரைப்படங்கள் இங்கே படம் பிடிக்கப்பட்டு இருக்கின்றன. 

Onetamil News
 

காரையாறு சொரிமுத்து ஐயனார் கோவில் தமிழ்நாட்டின் அழகான இடங்களுள் ஒன்று. 
பல திரைப்படங்கள் இங்கே படம் பிடிக்கப்பட்டு இருக்கின்றன. 


இரண்டு முறை சென்று இருக்கின்றேன். இன்றும் சென்று வந்தேன்.
அந்தப் பயணம் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.  
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இலட்சக்கணக்கானோருக்குக் குலதெய்வம் சொரிமுத்து ஐயனார். 
அந்தக் குடும்பங்களில், 
சொரிமுத்து, பட்டன், பட்டமுத்து, பேச்சி போன்ற பெயர்களைச் சூட்டுவது வழக்கம். 
பாபநாசத்தைக் கடந்து மேற்கு மலைத் தொடரில் ஏறினால், 
சேர்வலாறு வழியாக காரையாறு போய்ச் சேரலாம். 
பாபநாசத்தில் இருந்து பத்துக் கிலோமீட்டர்கள் இருக்கலாம். 
போகின்ற வழியில் அகத்தியர் அருவி உள்ளது. 
மணிமுத்தாறு, காரையாறு, சேர்வலாறு ஆகிய இடங்களில், பொருநை ஆற்றுத் தண்ணீரைத் தேக்கி வைக்க அணைகள் கட்டி இருக்கின்றார்கள். 
இவை எல்லாவற்றையும் கடந்து மேலே சென்றால், மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். 
காரையாறு சொரிமுத்து ஐயனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா, 
பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கானவர்கள், குடும்பத்தோடு வந்து, குடிசை போட்டுத் தங்கி இருந்து வழிபடுவார்கள். 
முன்பு, ஒரு வாரம், பத்து நாள்கள் வரை அப்படித் தங்கி இருப்பது வழக்கம். 
அது அடர்ந்த காட்டுப் பகுதி. 
கோவிலைத் தவிர, சுற்றிலும் உள்ள பகுதிகளில் 
மின் விளக்குகள் கிடையாது. விலங்குகள் நடமாட்டம் நிறைந்த இடம். 
இந்தப் பகுதி முழுமையும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு விட்டது. 
எனவே, காடுகளில் இருப்பவர்களைப் படிப்படியாக வெளியேற்றி வருகின்றார்கள். 
மாஞ்சோலையில் இருந்து 7500 பேருக்கு மேல் வெளியேறி விட்டார்கள். 
இன்னும் 2500 பேர்தான் இருக்கின்றார்கள். 
அவர்களும் 2028 க்குள் வெளியேறியாக வேண்டும். அதன்பிறகு அங்கே தேயிலை பயிரிடப்பட மாட்டாது. 
அதே புலிகள் காப்பகப் பகுதியில்தான், காரையாறு சொரிமுத்து ஐயனார் கோவிலும் வருகின்றது. 
எனவே, ஆடி அமாவாசைத் திருவிழாவுக்கு ஆண்டுக்கு ஆண்டு, கட்டுப்பாடுகள் கெடுபிடியாகி வருகின்றன. 
இந்த ஆண்டு....
மூன்று நாட்கள் மட்டுமே தங்கி இருக்கலாம்...
தனியார் கார்கள், இரு உருளை ஊர்திகளுக்குத் தடை.
அப்படி வருகின்றவர்கள் அகஸ்தியர்பட்டியில் ஒதுக்கப்பட்டு இருக்கின்ற இடத்தில் அவற்றை நிறுத்திவிட்டு, 
அங்கிருந்து அரசுப் பேருந்துகளில் மட்டும் காரையாறு செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருந்தார். 
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக 300 முதல் 400 ஊர்திகளில் வந்த மக்கள், குடிசை அமைப்பதற்கான பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள். 
அவர்களைக் காவல்துறையினர் தடுத்தார்கள். 
எனவே, பொதுமக்கள் சாலை மறியல் செய்தார்கள். 
கடைசியில் காவல்துறை கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அவர்கள் அங்கே போய், தற்காலிகத் தங்கும் இடங்கள் அமைத்து இருக்கின்றார்கள். 
இன்று காலை 5 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டு, 8 மணி அளவில் அம்பாசமுத்திரம் சென்றேன். 
உடன் பள்ளித்தோழன் திருவள்ளுவர் வந்தார். 
அகஸ்தியர்பட்டி சென்று அங்கிருந்து அரசுப் பேருந்தில் ஏறி, 9 மணிக்கெல்லாம் காரையாறு போய்ச் சேர்ந்தோம். 
வழியில் சோதனைச் சாவடியில், காடுகள் பாதுகாவலர்களும், தன்ஆர்வத் தொண்டர்களும் பேருந்துக்கு உள்ளே ஏறி, பொதுமக்கள் கொண்டு வந்திருந்த கைப்பையைத் திறந்து சோதித்துப் பார்த்தனர். 
சோப்புகள், ஷாம்புகள், பிளாஸ்டிக் உறைகள், 
பீடி, சிகரெட்டுகளைப் பறித்துக் கொண்டனர். 
என் வாழ்நாளில் முதன்முறையாக பிளாஸ்டிக் பைகளைப் பறிப்பதை நேரில் பார்த்தேன். 
அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டேன்.  
பேருந்து நிறுத்தத்தில் இருந்து காட்டு வழியாக ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றோம். 
அந்த வழிநெடுகிலும், புதர்களுக்கு ஊடே மக்கள் தற்காலிகத் தங்கும் இடங்களை அமைத்துப் படுத்துக் கிடக்கின்றார்கள். சமையல் வேலைகள் நடக்கின்றன. குழந்தைகளைத் தொட்டில் கட்டிப் படுக்க வைத்து இருக்கின்றார்கள். 
ஆங்காங்கே தேநீர் கடைகள் மற்றும் 
சிறு சிறு தீவனக் கடைகள். 
கோவிலுக்கு முன்பு, பரந்த வெளியில், முழுமையும் பாறைகளின் மீது பொருநை ஆறு பாய்ந்து ஓடுகின்றது. அவ்வளவு அழகான இடம். தமிழ்நாட்டின் பத்து அழகான இடங்களுள் ஒன்றாக இதை நான் குறிப்பிடுவேன். 
அப்படி ஒரு பட்டியலை ஏற்கனவே பலமுறை இதே தளத்தில் எழுதி இருக்கின்றேன். 
நாங்கள் சென்றபோது 200 அல்லது 300 பேர் இருந்தார்கள்,நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. 11 மணி அளவில் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து குவிந்தனர். 
அதுவரை மகிழ்ச்சியாகக் குளித்தோம். பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக, பிள்ளைகளுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினர். 
கடந்த ஆண்டு 100 கழிப்பு அறைகள் கட்டி இருந்தோம். 
இந்த ஆண்டு 200 கழிப்பு அறைகள் கட்டி இருக்கின்றோம். 
எனவே, யாரும் திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது என கடுமையாக எச்சரித்து இருந்தார்கள். 
அதன்படி, யாரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதைப் பார்க்க முடியவில்லை. 
அந்தக் கழிப்பு அறைகளைப் பார்த்தேன். புதிதாகக் கட்டி இருக்கின்றார்கள். 
தொற்று நோய்கள் பரவாமல், மருந்து தெளித்துக் கொண்டே இருக்கின்றார்கள். 
நாங்கள் நடந்த சாலைகளின் ஓரங்களில் மலக்கழிவுகள் இல்லை. அது ஒரு பெரிய மாற்றம். 
காவல்துறைக்குப் பாராட்டுகள். 
ஆனால், குடிசை அமைத்துப் படுத்துக் கிடப்பவர்கள் எல்லோரும், கழிப்பு அறைகளைப் பயன்படுத்துகின்றார்களா? 
பின்னால் இருக்கின்ற காட்டுக்கு உள்ளே ஊடுருவிச் சென்று மலம் கழிக்கின்றார்களா? என்பது தெரியவில்லை. 
அடுத்தது, 
ஆற்றுத் தண்ணீரை யாரும் குடிக்காதீர்கள்...
பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இருக்கின்றது- அதைக் குடியுங்கள் என காவல்துறையினர் ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். 
காவல்துறையினரை ஏமாற்றி, சோப்பு, ஷாம்பு கொண்டு வந்தவர்கள், வெற்றிப் பெருமிதத்துடன் அவற்றைப் பயன்படுத்தினார்கள்.,அப்போது காவல்துறையினர் வந்து அவர்களை எச்சரித்தார்கள். 
ஆற்றுக் குளியலை முடித்துக் கொண்டு, கோவிலுக்குச் சென்றோம். சொரி முத்து ஐயனார், மகாலிங்கம், சங்கிலிபூதத்தார் சிலைகள் ஒரு இடத்திலும், 
அருகில் மற்றொரு கோவிலில் தளவாய் மாடசாமி, 
தூசி மாடசாமி, கசமாடசாமி, பட்டவராயன், பொம்மக்காள் திம்மக்காள் போன்ற குலதெய்வங்களின் சிலைகள் இருந்தன. 
திடீர் திடீரென ஆவேசம் கொண்டவர்கள் சாமி ஆடினார்கள். 
ஓங்கிக் கூப்பாடு போட்டார்கள். 
அவர்களை பூசாரிகள் கட்டுப்படுத்தினார்கள்,வேடிக்கை என்ன என்றால், சொரிமுத்து ஐயனாருக்கு,சமஸ்கிருதத்தில் வழிபாடு நடக்கின்றது. ஒரு பெண், தன் குடும்பத்தில் இருக்கின்ற பத்துப் பதினைந்து பேர்களது பெயர்களையும் நட்சத்திரங்களையும் வரிசையாகச் சொல்லிக் கொண்டே இருந்தார். 
பூசாரி சமஸ்கிருதத்தில் ஓதினார். 
எங்கே பணம் புரள்கின்றதோ, அங்கே சமஸ்கிருதமும், ஆரியப் பண்பாடும் மிக எளிதில் புகுந்து விடுகின்றன. அதைத்தான் பெருமையாகக் கருதுகின்றார்கள் 
புதுப் பணக்காரர்கள். 
பூசாரியின் தட்டில் 200 ரூபாய் போட்டார்கள்.
அப்படி நான்கு, ஐந்து 200 ரூபாய் நோட்டுகள் கிடந்தன.
ஒரு இடத்தில் புத்தம் புதிய செருப்புகளை ஏராளமாகக் கட்டித் தொங்க விட்டு இருந்தார்கள். வேண்டுதலாம். 
ஆங்காங்கே மக்கள் படுத்துக் கிடந்தார்கள். 
நாளை ஆடி அமாவாசை. 
600 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள் எனச் செய்தி. 
கூட்டம் கடுமையாக இருக்கும் என்பதால், 
இன்றே சென்று வந்து விட்டோம்.
இந்தத் திருவிழாவின்போது, சிங்கம்பட்டி ஜமீன்தார், மன்னர் உடை தரித்து பவனி வருவது வழக்கம். 
அவருடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. 
நான் எழுதிய புத்தகங்களை அவர் படித்து இருக்கின்றார். 
அவருடன் நீண்ட உரையாடல் நிகழ்த்தி,
அவரது வாழ்க்கை வரலாறைக் கேட்டு எழுதிப் பதிவு செய்து இருக்கின்றேன். 
அவர் இலங்கையில் படித்தவர். 
லண்டனுக்குச் சென்று படிக்க ஏற்பாடு செய்தார்களாம். 
ஆனால் ஒரே ஆண் பிள்ளை என்பதால், அவரது தாயாரும், 
பெரியம்மா, சின்னம்மாக்களும், 
லண்டனுக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள் என்று என்னிடம் சொன்னார். 
 
ஆங்கிலப் புலமை மிக்கவர். 
ஆங்கிலத்தில் நூல் எழுதி இருக்கின்றார். 
நான் எழுதிய சங்கரன்கோவில் வரலாறு நூலை,சங்கரன்கோவிலில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், தலைவர் வைகோ  வெளியிட, சிங்கம்பட்டி ஜமீன்தான் பெற்றுக்கொண்டு என்னை வாழ்த்திச் சிறப்பித்தார்கள். 
சென்னைக்கு வந்தால், 
நல்லி சில்க்ஸ் விருந்தினர் விடுதியில்தான் தங்குவார். 
அப்படி மூன்று முறை சென்னைக்கு வந்தபொழுது எனக்குத் தகவல் கொடுத்தார். 
நான் போய்ச் சந்தித்து உரையாடுவது வழக்கம். 
அவர் இப்போது இல்லையே? அவர் பவனி வருவதைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன்,மலையில் இருந்து கீழே இறங்கி வந்தேன்.  
பதிவு 
அருணகிரி 
சங்கரன்கோவில் 
15 ஆகஸ்ட் 2023
FB Arunagiri Sankarankovil
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo