Onetamil News Logo

சபரிமலை, சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு ;மறியலில் ஈடுபட்ட 200 பக்தர்கள் மீது வழக்கு பதிவு 

Onetamil News
 

சபரிமலை, சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு ;மறியலில் ஈடுபட்ட 200 பக்தர்கள் மீது வழக்கு பதிவு 


திருவனந்தபுரம் 2018 அக்டோபர் 21 ;சபரிமலை, சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு ;மறியலில் ஈடுபட்ட 200 பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இருந்து வந்த இந்த நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் பெண்களை அனுமதிப்பது அய்யப்பன் கோவிலின் ஆச்சார விதிகளை மீறுவதாகும் என்று கூறி பல்வேறு இந்து அமைப்புகளும், பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி (புதன்கிழமை) அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சாமி தரிசனத்துக்கு வந்த பெண்களை ஆங்காங்கே அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் சில இடங்களில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து சபரிமலை, சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
நேற்று முன்தினம் கொச்சியைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா என்பவரும், ஆந்திராவைச் சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் போலீசாரின் உதவியுடன் கோவில் சன்னிதானம் வரை சென்றனர். அவர்கள் நடைபந்தல் பகுதியில் சென்ற போது, அங்கு பக்தர்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் 18-ம் படி அருகே கீழ்சாந்திகள் எனப்படும் அர்ச்சகர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ரெஹானாபாத்திமாவும், கவிதா கோஷியும் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் திருப்பி அனுப்பப்பட்டார்.
கோவில் சன்னிதானம் அருகே பதற்றமான சூழ்நிலை நிலவியதால் கோவிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு, “சன்னிதானத்தில் பெண்கள் நுழைய அனுமதித்தால் வன்முறை ஏற்படுவதை தடுக்கும் வகையில் கோவில் நடையை மூடி சாவியை ஒப்படைத்து விடுவோம்” என்று போலீசாரிடம் கூறினார்.
அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியதால் 22-ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கோரி சன்னிதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சபரிமலை போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பதினெட்டாம் படி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்களுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் கூறியதாவது:- 
சபரிமலை சம்பவத்தில் உண்மை நிலை என்ன என்பதை அறிந்த பின்னரும் தந்திரியும், பந்தளம் ராஜ குடும்பத்தினரும் அரசியல் சாயம் பூச பார்க்கிறார்கள். எதிர்ப்பாளர்களான சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக அவர்கள் இயங்குவது போல் தோன்றுகிறது.
அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு. அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு தந்திரிக்கும் உண்டு. தேவைப்படும் போது நடையை திறப்பதும், மூடுவதும் தந்திரியின் வேலை அல்ல. நடையை அடைத்து விடுவேன் என்று கூறுவது பக்தர்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகும். பூஜைகளில் மேல்சாந்திகளுக்கு உதவுவதற்காகத்தான் கீழ்சாந்திகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். படி இறங்கி போராட்டம் நடத்துவது அவர்கள் வேலையல்ல. போராட்டம் நடத்திய கீழ்சாந்திகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இளம்பெண் ரெஹானா பாத்திமா சபரிமலைக்கு வந்ததன் பின்னணியில் சதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த லதா என்ற பெண் இருமுடி கட்டி தனது கணவர் மற்றும் மகனுடன் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்தார். அவர் பதினெட்டாம் படி ஏற முயன்ற போது அங்கு கூடி இருந்த அய்யப்ப பக்தர்கள், அவரை மேலே செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே போலீசார் லதாவிடம் இருந்த அடையாள அட்டையை வாங்கி பார்த்தனர். அதன்மூலம் அவருக்கு 52 வயது ஆகி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, லதா சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் படி ஏறி சென்று சாமி தரிசனம் செய்தார்.
இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வந்தால், சபரிமலை கோவிலுக்கு செல்ல அவர் களை அனுமதிக்க முடியாது என்று கேரள தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் ஏற்கனவே கூறி உள்ளார். இந்த நிலையில், கொல்லம் மாவட்டம் கருணாகபள்ளி அருகே உள்ள சட்கனூரைச் சேர்ந்த தலித் மகளிர் பேரவையின் தலைவரான மஞ்சு (வயது 36) என்ற பெண் நேற்று சபரிமலைக்கு வந்தார். தான் அய்யப்பன் கோவில் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய விரும்புவதாகவும், எனவே தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் போலீசாரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு போலீசார், சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், மழை பெய்வதால் மலைப்பாதையில் செல்வது சிரமம் என்பதாலும் உடனடியாக பாதுகாப்பு வழங்க இயலாது என்றும், விருப்பப்பட்டால் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை வரை காத்திருக்குமாறும் மஞ்சுவிடம் கூறினார்கள். இதனால் அவர் கோவிலுக்கு செல்லும் முயற்சியை கைவிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் தனது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றார்.
இந்த தகவலை பம்பையில் நிருபர்களிடம் கூறிய ஐ.ஜி. ஸ்ரீஜித், அந்த பெண்ணின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. இதுபற்றி சன்னிதானம் பகுதியில் கூடி இருக்கும் பக்தர்கள் கூறுகையில், கோவிலுக்கு சில பெண்கள் வர முயற்சிப்பதாக தகவல் கிடைத்து இருப்பதாகவும், அவர்களை அனுமதிக்க முடியாது என்றும், அமைதி வழியில் அதற்கு எதிர்ப்பு காட்ட இருப்பதாகவும் தெரிவித்தனர்.
போலீஸ் தடை உத்தரவை மீறி நிலக்கல் என்ற இடத்தில் நேற்று மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கேரள மாநில பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் ஏ.என். ராதாகிருஷ்ணன், செயலாளர் வி.சிவன்குட்டி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். எருமேலியில் பாரதீய ஜனதா சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசுகையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தால் அதற்கு அரசு தடையாக இருக்காது என்றும், சுதந்திரமாக முடிவு எடுக்க தேவஸ்தானத்திற்கு உரிமை உள்ளது என்றும் கூறினார்.
தேவஸ்தானத்தின் கொள்கை முடிவில் அரசு தலையிடாது என்று கூறிய அவர், சபரிமலையில் போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.
பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் நூகு பம்பையில் நிருபர்களிடம் கூறுகையில், பெண்ணியவாதிகள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும், அய்யப்பசாமி மீது நம்பிக்கை உள்ள இளம்பெண்கள் தரிசனம் செய்ய சன்னிதானத்தில் தடை இல்லை என்றும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo