Onetamil News Logo

16 பிள்ளைகள் பெற்ற சதீரத்னம்- ராமகிருஷ்ணன் நாயர் தம்பதிகள் ;அதிசயம் ஆனால் உண்மை 

Onetamil News
 

16 பிள்ளைகள் பெற்ற சதீரத்னம்- ராமகிருஷ்ணன் நாயர் தம்பதிகள் ;அதிசயம் ஆனால் உண்மை 


பதினாறு விதமான செல்வங்களுக்கு பதிலாக, 16 மக்கட் செல்வங்களை பெற்றிருக்கிறார்கள். அதில் பத்து ஆண்கள், 6 பெண்கள். இவர்கள் அனைவரும் வீட்டில் ஒன்றுகூடிவிட்டால் வீடே கலகலப்பாகிவிடுகிறது.
ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கவே தாய்மார்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சதீரத்னம் எப்படி 16 பிள்ளைகளை பெற்று வளர்த்தார்? எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருப்பார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவரிடமிருந்து ஒரே பதில்தான் அழுத்தம் திருத்தமாக வருகிறது. “இவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள்.. இவர்களை தெய்வம் காக்கும்.. என்று நம்பினேன். அந்த நம்பிக்கை ஜெயித்திருக்கிறது..” என்கிறார்.
சதீரத்னம் மிக எளிமையாக காட்சி தருகிறார். கூந்தலில் முதுமை வெள்ளிக்கோடுகளாய் நிறைந்திருக்கிறது. கழுத்தில் ஒற்றைச் சங்கிலி, நெற்றியில் சந்தன குறியுடன், அவரது முகத்தில் மாறாத புன்னகை வீசுகிறது. கேரளாவில் துப்பநாடு ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் விசாலமான வீட்டில் அவர் வசிக்கிறார். கணவர் இறந்து போனார்.
“எனக்கு 16 வயதில் திருமணம் நடந்தது. அப்போது என் கணவருக்கு 26 வயது. அவர் போத்தநோடு என்ற இடத்தில் உள்ள எஸ்டேட்டில் மானேஜராக இருந்தார். யானை, புலி, பன்றி போன்றவை எல்லாம் அவ்வப்போது காடு இறங்கி வரும். அந்த காலத்தில் காட்டு மிருகங்கள் மனிதர்களிடம் அவ்வளவு கொடூர மாக நடந்துகொண்டதில்லை. இருட்டில் எல்லா மிருகங்களையும் பார்க்கலாம்.” என்று பழைய கால எஸ்டேட் வாழ்க்கையை ரசித்து சொல்கிறார், சதீரத்னம்.
இவரது மூத்த மகள் ரஜினியும், அடுத்த மகள் ராதிகாவும் அம்மா அடுத்தடுத்து பெற்றெடுத்த குழந்தைகளை, அம்மாவோடு சேர்ந்து வளர்த்திருக்கிறார்கள். ரஜினி நர்சிங் படிக்க வெளியூர் சென்ற பின்பு சகோதர சகோதரிகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு ராதிகாவை சேர்ந்திருக்கிறது. அதனால் சகோதர சகோதரிகள் அவரை சிறு வயது பருவத்தில் அம்மா என்றே அழைத்திருக்கிறார்கள்.
ரஜினி கோவை மருத்துவக் கல்லூரியில் வேலை பார்க்கிறார். “முதல் இரண்டு பிரசவத்திற்கு மட்டும் அம்மா, எங்கள் பாட்டி வீட்டிற்கு போயிருக்கிறார். பின்பு எல்லா பிரசவத்தின் போதும் தாத்தாவும், பாட்டியும் எங்கள் வீட்டிற்கு வந்து பிரசவம் பார்த்தார்கள். கடைசி தம்பிகளான ராகுல் (வயது 25), ரஞ்சித் (23) ஆகிய இருவரையும் அம்மா பாலக்காடு மருத்துவமனையில் பிரசவித்தார். அவர்களை பிரசவித்தபோது நான் அதே மருத்துவமனையில் நர்ஸ் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு 23 வயது. அந்த காலகட்டத்தில் நானும், அம்மாவும் ரோட்டில் நடந்துசென்றால் யாரும் எங்களை தாய், மகள் என்று சொல்லமாட்டார்கள். நாங்கள் அப்படி உண்மையை சொன்னாலும் நம்பமாட்டார்கள். வேறுவழியில்லாமல் அக்காள், தங்கை என்று கூறி எங்களுக்குள் சிரித்துகொள்வோம். தந்தையின் பெயர் ‘ஆர்’ என்ற எழுத்தில் தொடங்குவதால் எங்கள் அனைவருக்கும் அதே எழுத்தில் தொடங்குவது போல் பெயர் சூட்டினார்கள்..” என்கிறார், ரஜினி.
சதீரத்னம் ஐந்தாவது பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். அதில் ஒன்றை ரஜினியும், இன்னொன்றை ராதிகாவும் ஆளுக்கொன்று என்று சொந்தம் கொண்டாடி வளர்த்திருக்கிறார்கள். இரண்டு தொட்டில்களில், தனித் தனியாக குழந்தைகளை தூங்கவைத்து பராமரித்திருக்கிறார்கள். குழந்தை அழும் சத்தம் கேட்டால், ஓடி வந்து யாருடைய குழந்தை என்று பார்த்து, அவரவர் வளர்க்கும் குழந்தையை அமைதிப்படுத்து வார்களாம். எட்டாவது பிரசவத்திற்கு சதீரத்னம் தயாரானபோது பரிசோதித்த டாக்டர், இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக் கிறார். ஆனால் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் என்பது ஆபத்தானது என்று யாரோ, எப்போதோ சதீரத்னத்தை பயமுறுத்தி யிருக்கிறார்கள். அந்த ஆபரேஷன் செய்தால் தனக்கு ஆபத்து ஏதாவது ஆகிவிடும் என அவர் பயந்திருக்கிறார். தனக்கு ஆபத்து நேர்ந்துவிட்டால் அத்தனை குழந்தைகளையும் யார் பராமரிப்பார்கள் என்று அச்சம்கொண்டு, ஆபரேஷனுக்கு மறுத்திருக்கிறார். இப்போது சதீரத்னத்திற்கு 65 வயது.
“வயது பெரிதான பின்புதான் அம்மா மீண்டும் தாய்மை யடைந்திருக்கிறார் என்பது தெரியவரும். நிறைமாதம் ஆன பின்பும் பசுக்களை மேய்ப்பார். தன்னால் இயலாதபோதுதான் பாட்டியிடம் சொல்வார். அப்பா சீரக தண்ணீரும், ஒரு ஆயுர்வேத மாத்திரையும் கொடுத்துவிட்டு ஆற்றிங்கல் அம்மச்சி என்ற அனுபவ வைத்தியரான பெண்மணியை அழைத்து வருவார். அவர்தான் பிரசவம் பார்ப்பார். அதை அருகில் இருந்து பார்த்து பின்பு எங்கள் பாட்டியே தொப்புள் கொடி வெட்டவும் தெரிந்துகொண்டார். ஒரு முறை மக்கள் தொகை கணக்கு எடுக்கும் ஒருவர் வந்தார். அம்மா அப்போது பிரசவவலியில் இருந்தார். ஆனாலும் எல்லா விவரங்களையும் அவரிடம் சொன்னார். அவர் தகவல்களை எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதும் வீட்டிற்குள் அடுத்த குழந்தை அழுகை சத்தத்தோடு பிறந்தது. அப்போது பிரசவம் அவ்வளவு எளிதாக இருந்தது..” என்கிறார், 9-வது மகளான ரமணி.
இத்தனை குழந்தைகளை பெற்றுவளர்க்க சதீரத்னம் ரொம்ப சிரமப்படவே செய்திருக்கிறார். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது காலை உணவை இரவிலே தயார் செய்துவைத்துவிடு வாராம். மூன்று குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்தால் மூவருக்கும் சேர்த்து ஒரே பாத்திரத்தில் கொடுத்து அனுப்பியிருக்கிறார். இப்படி மூன்று, நான்கு குழந் தைகளுக்காக உணவை ஒரே பாத்திரத்தில் வைத்து பள்ளிக்கு கொடுத்து அனுப்புவதால் இவர் வேலை குறைந்திருக்கிறது. மோர் குழம்பு, ஊறுகாய் இரண் டையும் எப்போதும் தயாராக வைத்திருப்பாராம். அதனால் குழந்தைகளுக்கு பசிக்கும் போதெல்லாம் சாதம் வடித்து உணவளிக்க முடிந்திருக்கிறது. இவர்களுக்கு உடை பிரச்சினை பெரிய அளவில் ஏற்பட்டிருக்க வில்லை.
மூத்த சகோதரர் அணிந்த உடைகளை பின்பு தம்பிகள் பயன் படுத்தியிருக்கிறார்கள். அப்படி சகோதரர்கள் எல்லாம் பயன்படுத்தும் விதத்தில் தரமான துணிகளை ஒரே நேரத்தில் நிறைய வாங்கியிருக்கிறார்கள். வீட்டில் எல்லோரும் இருக்கும்போது 5 கிலோ அரிசி, 5 கிலோ மீன், 15 கிலோ கோழி இறைச்சி வாங்குவார்களாம். காலை உணவு குழந்தைகளுக்கு பெரிய பிரச்சினையாக இருந்திருக்க வில்லை. ஒவ்வொருவரும் இரண்டு கப் நிறைய டீ பருகு வார்களாம். அதன் பின்பு 11 மணிக்கு மேல்தான் அவர்களுக்கு பசி உருவாகுமாம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக டீ தயாரிக்க வேண்டுமாம். பிள்ளைகளின் சுவை அறிந்து அவர்களுக்கு தக்கபடி சதீரத்னம் டீ தயாரித்து வழங்கியிருக்கிறார். தங்கள் குடும்பத் தேவைக்கு வீட்டுத் தோட்டத்திலேயே காய்கறிகளை வளர்த்து பயன்படுத்தி யிருக்கிறார்.
சதீரத்னத்தின் பிள்ளைகளில் பெரும்பாலானவர்களுக்கு திருமணமாகிவிட்டது. எல்லோரும் அவரவர் தகுதிக்கு தக்கபடியான வேலைகளை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் ஒன்று சேரும்போது வீட்டில் திருவிழா கூட்டம்போல் ஆகிவிடுகிறது. அதை பார்த்து பாட்டி சதீரத்னம் மகிழ்ச்சியடைகிறார். அவர் இப்போதும் ஆரோக்கியமாகவே காணப்படுகிறார்.
‘உங்கள் அம்மா, உங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் முக்கிய விஷயம் என்ன?’ என்று பிள்ளைகளிடம் கேட்டால் அவர்கள் தரும் பதில் சிந்திக்கத்தகுந்ததாக இருக்கிறது.
“நிறைய படிக்கவேண்டும் என்றோ, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றோ அம்மா எங்களுக்கு சொல்லித்தரவில்லை. அதிகமாக அன்பு செலுத்தவேண்டும்.. நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொல்லித்தந்திருக்கிறார்..” என்கிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo