ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி ஆந்திராவை சேர்ந்த பாகதி கவுதம்- கேரளாவை சேர்ந்த அஸ்வதி இவர்களின் திருமணம் கேரளாவில் காதலர் தினத்தன்று நடந்தது.
கேரளா 2019 பிப்ரவரி 16 ;பெங்களூரு அருகே உள்ள தாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி காதலர் தினத்தில் திருமணம் செய்து கரம்பிடித்தனர். இவர்களின் திருமணம் கேரளாவில் நடந்தது.
தாவணகெரே மாவட்ட கலெக்டராக இருந்து வருபவர் பாகதி கவுதம். தாவணகெரே மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் அஸ்வதி. இவர்கள் 2 பேரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவார்கள்.
ஆந்திராவை சேர்ந்த பாகதி கவுதம் டாக்டருக்கு படித்துள்ளார். இவர், கடந்த 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆக பணிக்கு சேர்ந்தார். எம்.பி.ஏ. படித்து முடித்துள்ள கேரளாவை சேர்ந்த அஸ்வதி, கடந்த 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்கள் தங்களின் காதல் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் 2 பேரின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்தனர். பாகதி கவுதம்-அஸ்வதியின் திருமணத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, பாகதி கவுதம்-அஸ்வதியின் திருமணம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடுவில் நடந்தது. மணமகன் பாகதி கவுதம், அஸ்வதியின் கழுத்தில் தாலி கட்டினார். திருமண விழாவில் கலந்துகொண்டவர்கள் புதுமணஜோடிக்கு அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 17-ந் தேதி ஆந்திராவில் நடக்கிறது.