கேரளாவில் அன்னாசிப்பழத்தில் பட்டாசை மறைத்து யானைக்கு உணவூட்டிய மர்ம மனிதர் ; யானை உண்டதால் வாய் வெடித்து ,தண்ணீரில் நின்று யானை சாவு
கேரளா 2020 ஜூன் 4 ; கேரளாவில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாச்சி பழத்தை 15 வயது யானை உண்டதால், வாயில் படுகாயம் ஏற்பட்டு தன்னாலேயே தண்ணீரில் நின்று சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழந்தது.
கேரளாவில் ஒரு கர்ப்பமடைந்த காட்டு யானை காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றது. அங்கு கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர்.
ஆனால் சில விஷமிகள், சமூக விரோதிகள் அன்னாச்சி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அதை யானை சாப்பிட்ட போது பட்டாசு வெடித்து சிதறியது. மிகவும் சக்தி வாய்ந்த அந்த பட்டாசு யானையின் வாயில் வெடித்துள்ளது.. இதில் யானையின் நாக்கு மற்றும் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியில் அலறி துடித்த கருவுற்ற யானை அங்கும் இங்கும் ஓடி, அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. வாயில் ஏற்பட்ட காயங்களால் யானையால் எதுவும் சாப்பிட முடியவில்லை, கிராமம் முழுக்க வலியிலும் பசியிலும் சுற்றித்திரிந்து இறுதியாக நதியை அடைந்தது. ஒருவேளை தாங்க முடியாத வலியிலிருந்து நிவாரணம் பெறவேண்டியோ அல்லது காயங்களில் ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளைத் தவிர்ப்பதற்காக வேண்டியோ அது தண்ணீரில் நின்றிருக்க வேண்டும்.
யானையை மீட்க அதிகாரிகள் பல மணிநேரம் முயற்சி செய்த பின்பும் மே 27 மாலை 4 மணியளவில் அந்த யானை தண்ணீரில் நின்று கொண்டே இறந்துவிட்டது..யானை மீண்டும் ஒரு லாரியில் காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு அங்கு வன அதிகாரிகளால் தகனம் செய்யப்பட்டது..
அவ்வளவு வலியில் கிராமத்தில் சுற்றித்திரிந்த போதிலும் அந்த ஐந்தறிவு ஜீவன் பொது மக்களுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்கவில்லை.. இங்கு மனிதனே மிருகமானான்!