தினசரி சந்தை கட்டண வசூலை வரைமுறைப்படுத்த வேண்டும். நுவர்வோர், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை
கோவில்பட்டி 2019 டிசம்பர் 2 ;தினசரி சந்தை கட்டண வசூலை வரைமுறைப்படுத்த வேண்டும். நுவர்வோர், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை கட்டண வசூலை வரைமுறைப்படுத்த கோரி நகராட்சி அலுவலகத்தை 5-ம் தூண் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு 5-ம் தூண் அமைப்பு நிறுவனர் அ.சங்கரலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் க.தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ராஜசேகர், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் எஸ்.செல்வம் உள்ளிட்டோர் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.அவர்கள் தாம்பூல தட்டில் கோரிக்கை மனுக்களை வைத்து, நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரனிடம் வழங்கினர். மனுவில், கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலையில் தனியார் கேஸ் கம்பெனிக்கு எதிர்புறம் உள்ள காலிமனையில் தனிநபர் ஒருவர் பெட்ரோல் பங்க் அமைக்க உள்ளார் என தெரிய வருகிறது. இந்த இடம் 24 மணி நேரமும் பொதுமக்களும், வாகனங்களும் செல்லும் மிக குறுகலான சாலையாகும். மேலும், இந்த இடம் பெட்ரோல் பங்க் அமையக்கூடிய அளவுக்கு போதுமானதாக இல்லை. எனவே, இந்த இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி கொடுக்க கூடாது, என தெரிவித்துள்ளனர்.
இதே போல் அவர்கள் வழங்கிய மற்றொரு மனுவில், கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை தொடங்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளாகிறது. இந்த சந்தையில் கடந்த 8 ஆண்டுகளாக முறையாக குத்தகை மற்றும் பராமரிப்பு இல்லாமல் நுகர்வோர் பயன்பாட்டுக்கு லாயக்கற்றது போல் உள்ளது. சந்தைக்கு வரும் பொருட்களுக்கு வசூலிக்க வேண்டிய கட்டண பட்டியல் விபரம் இரு வாசலிலும் வைக்க வேண்டும். சந்தையில் உள்ள போக்குவரத்து பாதையில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்ய அனுமதிக்கக்கூடாது.இங்கு சேகரமாகும் குப்பைகள் நடைபாதையில் கொட்டப்படுவதால் சந்தை முழுவதும் சுகாதார கேடாகவே காட்சியளிக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
சந்தையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததின்பேரில், அப்போதைய நகராட்சி ஆணையர் நிரந்தர கட்டட பகுதியில் இருந்து 3 அடி மட்டும் தற்காலிக ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து கொள்ளலாம். எக்காரணம் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்ய கூடாது என வாய்மொழி உத்தரவிட்டார். ஆனால் தற்போது அவர்கள் 6 அடிவரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இதே போல் நிரந்தர கடை வாடகைதாரர்களும் தங்கள் பங்குக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.தினசரி சந்தை கட்டண வசூலை வரைமுறைப்படுத்த வேண்டும். நுவர்வோர், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் ஆணையர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.