சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு தொழில் செய்ய இடம் வழங்க கோரிக்கை
கோவில்பட்டி 2019 பிப்ரவரி 13 ;சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு தொழில் செய்ய இடம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் காலணி தைக்கும் தொழிலாளிகளுக்கு, காலணி தைப்பதற்கான இடம் வழக்க வேண்டும் என சமூக நீதி கூட்டமைப்பினர் நகராட்சியில் மனு வழங்கினர்.
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் ஏ.மேரி ஷீலா, செயலாளர் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் ஏராளமானோர் வந்து, ஆணையாளரிடம் மனு வழங்கினர்.
மனுவில், கோவில்பட்டி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அருந்ததியர் இனத்தை சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளிகள் உள்ளனர். இவர்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் வங்கிகள், அரசு அலுவலகங்கள் பகுதியிலேயே தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் தொழில் செய்யும் இடங்களில் மேற்கூடாரம் கிடையாது. சாலையோரம் அமர்ந்து மழையிலும், வெயிலிலும் துன்பப்பட்டு வருகின்றனர். மேலும், தொழிலுக்கு உரிய கருவிகள் கூட அவர்களிடமில்லை.
தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமை கோட்டுக்கும் கீழ் உள்ள இந்த தொழிலாளர்களுக்கு கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் நல்வழி செய்து கொடுத்தால், தினசரி வாழ்க்கையை சிரமமின்றி வாழும் நிலையில் உள்ளனர். எனவே, காலணி (செருப்பு)தைக்கும் தொழிலாளிகளுக்கு உரிய தொழில் கருவிகள் கிடைக்கவும், அவர்கள் வாடகையின்றி பேருந்து உள்ளிட்ட பகுதிகளில் இடம் ஒதுக்கி தொழில் செய்ய நிழலகம் அமைத்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் க.தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ராஜசேகர், ஐந்தாம் தூண் அமைப்பு நிறுவனர் அ.சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.