முன்னேற்ற அறிவிப்பு வழங்கியும் சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத கோவில்பட்டி ஶ்ரீ மல்லிகை புட் ப்ராடக்ட்ஸ் என்ற சேமியா கம்பெனியின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து
தூத்துக்குடி 2022 மே 14 ;முன்னேற்ற அறிவிப்பு வழங்கியும் சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத சேமியா கம்பெனியின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து - உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம்,நியமன அலுவலர், டாக்டர்.மாரியப்பன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கோவில்பட்டியில் உள்ள ஶ்ரீ மல்லிகை புட் ப்ராடக்ட்ஸ் என்ற சேமியா தயாரிப்பு நிறுவனத்தை, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் மற்றும் கோவில்பட்டி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸூ ஆகியோர் ஆய்வு செய்த பொழுது, சேமியாவை பாதுகாப்பின்றி திறந்தவெளியில் தரையில் கொட்டி வைத்திருந்ததாலும், பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் இருந்ததாலும், சுகாதாரக் குறைபாடுகளைக் களைய, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, அந்நிறுவனத்திற்கு முன்னேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டது. மேலும், இந்நிறுவனத்திற்கு எதிராக ஒரு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டும், அதனை செலுத்தாமல் இழுத்தடித்து வந்ததுள்ளனர். வரையறுக்கப்பட்ட கால அளவிற்கு பின்னரும் சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தியதாலும், விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்டாத்தினாலும், ஶ்ரீ மல்லிகை புட் ப்ராடக்ட்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்து, உரிமம் வழங்கும் அலுவலரான நியமன அலுவலர் உத்திரவிட்டார். அதனடிப்படையில், அவ்வுத்திரவை சார்பு செய்ய கோவில்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சென்ற போது, அவ்வுத்திரவை அந்நிறுவனத்தார் பெற்றுக்கொள்ளாத காரணத்தினால், அவ்வுத்திரவானது, நிறுவனத்தின் கேட்டில் காவல் துறையினரின் முன்னிலையில
ஒட்டப்பட்டது.
அந்நிறுனத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால், மறு உத்திரவு பிறப்பிக்கப்படும் வரை, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வணிகர்கள் யாரும் வாங்கி விற்பனை செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் சுகாதாரமற்ற உணவகங்கள் குறித்தோ அல்லது தரமற்ற உணவுகள் குறித்தோ புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு அனுப்பலாம். புகாரைப் பெற்றுக்கொண்ட அடுத்த 48 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரது விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.