Onetamil News Logo

உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ;597 அடி உயர படேல் சிலையை பார்வையிடுவதற்கு கட்டணம் நிர்ணயம் 

Onetamil News
 

உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ;597 அடி உயர படேல் சிலையை பார்வையிடுவதற்கு கட்டணம் நிர்ணயம் 


கெவாடியா 2018 நவம்பர் 1 ;இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தவர்.
படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது.
குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது மோடி இந்த சிலைக்கான அடிக்கல்லை 2013-ம் ஆண்டு நாட்டினார். 5 வருடங்களுக்கு பிறகு இந்த சிலை முழுவடிவம் பெற்றுள்ளது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
படேலின் 143-வது பிறந்த தினமான நேற்று இந்த பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது 2 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து படேல் சிலையின் மீது மலர்களைத் தூவின.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உலகிலேயே மிக உயரமான சிலையாக இது திகழ்கிறது. தைரியம், திறமை, தீர்க்கம் ஆகியவை கொண்ட மாமனிதர் படேல் என்பதை எதிர்கால சந்ததியினருக்கும் இந்த சிலை நிச்சயம் உணர்த்தும். படேல், இந்தியா தூள் தூளாக ஆவதற்கு சதித் திட்டம் தீட்டியவர்களின் முயற்சிகளை முறியடித்த புனித பணியை மேற்கொண்டவர்.
படேலின் சிலை குறித்து சிலர் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். இந்தியா இருக்கும் வரை இந்த சிலையும் இருக்கும். ஏனென்றால் இந்த சிலை நாட்டின் ஒற்றுமைக்கான சிலை. அந்த உணர்வை நோக்கி நாம் நடை போடுவோம். ஒரே இந்தியா, மிகச்சிறந்த இந்தியா என்னும் கனவை நனவாக்க பாடுபடுவோம்.
கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு சிலை, அருங்காட்சியகம் அமைத்து வருகிறது. அம்பேத்கருக்கு நினைவிடம் அமைத்தோம். இன்னும் வீர சிவாஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய வீரம் செறிந்த தலைவர்களுக்கும் நினைவிடங்கள் அமைப்போம்.
இதுபோன்ற நடவடிக்கைகளை சிலர் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். விமர்சிக்கின்றனர். மாபெரும் குற்றம் போலவும் கூறுகிறார்கள். இது வினோதமாக இருக்கிறது. இந்தியாவிற்காக தியாகம் செய்த தலைவர்களுக்கு இதுபோல் நினைவிடங்கள், சிலைகள் அமைப்பது குற்றமா?...
இந்த கேள்விக்கு இங்கே கூடியிருப்போர் அனைவருமே இல்லை என்றீர்கள். இதுதான் 130 கோடி இந்தியர்களின் உணர்வும் ஆகும். நாட்டை ஒன்றாக இணைத்திட்ட மாபெரும் தலைவருக்கு கிடைத்திட்ட கவுரவம்.
படேல் மட்டும் குறுநில அரசுகளை இணைத்திருக்காவிட்டால் ஜூனாகத் காடுகளில் சிங்கங்களை பார்ப்பதற்கும் அல்லது சோம்நாத் கோவிலுக்கு செல்வற்கும், ஐதராபாத் சார்மினார் கோபுரத்தை காண்பதற்கும் நாட்டு மக்கள் இன்று விசா வாங்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கும்.
குறு நில அரசுகளை சர்தார் படேல் பூகோள ரீதியில் இந்தியாவை ஒன்றாக இணைத்தார். நாங்கள் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றாக இணைத்து இருக்கிறோம்.
இந்த சிலையை அமைப்பதற்கு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து, ஒரு இயக்கமாகி உழைத்து உள்ளனர். இந்த சிலையை நிறுவ நிலத்தையும் விவசாயிகள் அளித்து இருக்கின்றனர். அவர்களை பாராட்டுகிறேன். உலகின் மிக உயரமான படேல் சிலை இங்கே அமைக்கப்பட்டிருப்பதால் இப்பகுதியில் விவசாயம், சுற்றுலா மேலும் வளர்ச்சி காணும். இப்பகுதி பழங்குடி மக்களும் வாழ்வாதாரமும் மேம்படும் இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசி முடித்த பின்னர் பிரதமர் மோடி, சிலையின் அடிப்பகுதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிலையின் உட்புறத்தில் 135 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடத்தையும் பார்வையிட்டார்.
முன்னதாக படேல் சிலைக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் குஜராத் கவர்னர் ஓ.பி.கோஹ்லி, முதல்-மந்திரி விஜய் ரூபானி பா.ஜனதா தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.
597 அடி உயர படேல் சிலையை பார்வையிடுவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அதன்படி பார்வையாளர்கள் சிலையை அதன் வளாகத்துக்குள் சென்று காண்பதற்காக ஒரு நபருக்கு ரூ.120 கட்டணமும், சிலையின் 135 மீட்டர் உயரத்தில் இருக்கும் மாடத்திற்கு சென்று கண்டுகளிக்க ஒரு நபருக்கு ரூ.350 கட்டணமும் வசூலிக்கப்படும். மாடத்திற்கு செல்ல சிலையின் உட்புறத்தில் ‘லிப்ட்‘ வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo