Onetamil News Logo

கொரோனாவை விரட்டுவோம் ;வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை கட்டுவோம்  

Onetamil News
 

கொரோனாவை விரட்டுவோம் ;வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை கட்டுவோம்  


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 1 ; வீடெங்கும் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மஞ்சள் கலந்து வாசல் தெளிக்கிறார்கள்! பூண்டு ரசமும், வேப்பம்பூ ரசமும் பரவலாக வைக்கப்படுகிறது! முகத்திற்கு மஞ்சள் பூசச்சொல்லி பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? நாம் அனைவரும்  கொரோனாவை விரட்டுவோம் ;வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை கட்டுவோம். 
ஆடி மாதம் பிறந்தவுடனே ஊர் முழுவதும் வேம்பின் வாசனையும், மஞ்சளின் வாசனையும் காற்றில் பரவி பரவசப்படுத்தும். வேப்பிலையும், மஞ்சளும் அம்மனுக்கு உகந்த அபிஷேக ஆராதனை பொருளாக இருந்தாலும் மக்களை இம்மாதத்தில் பரவும் பெரிய நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாகவும் உள்ளது.
வெயிற்காலம் முடிந்து மழைகாலம் ரதாபங்கு ஆடிமாதத்தில் மாரி (மழை) அம்மனை வணங்கி வரவேற்கிறோம். இவ்வாறு மழை காலம் தொடங்கும் முன் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு வெப்ப நோய்களும், கிருமிகள், காற்றில் பரவும் கிருமிகள் மூலமாக பரவும் காலரா, வயிற்றுப்போக்கு போன்றவைகள் ஏற்படும். இதனை போக்கும் விதமாக முன்னோர்கள் ஆடி மாதம் தொடங்கியவுடனேயே வேப்பிலையும், மஞ்சளையும் வீடுகளிலும், கோயில்களிலும் அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.
வீடுகளின் வாசல் முன்பு வேப்பிலை கொத்து சொருகப்பட்டன. மஞ்சள் நீர் வாசல் மற்றும் வீடு பகுதிகளில் தெளிக்கப்பட்டன. இதன் மூலம் காற்றில் பரவும் கிருமிகள் அழிந்து விடுவதுடன், ஈக்கள் மற்றும் பூச்சுகளின் வரவும் குறைந்து விடும்.
ஆடி மாதத்தில் வேப்பிலை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. காரணம் காற்றில் மூலம் பரவும் பூஞ்சை, காளான், பாக்டீரியாக்கள் போன்றவை பரவாமல் காற்றை சுத்தப்படுத்தும் சிறப்பு பணியையும் செய்கிறது வேம்பு. வேப்பிலையை சர்வரோக நிவாரணி என மருத்துவம் கூறுகிறது.
பன்னெடுங்காலமாக வேம்பின் பயன்பாடுகள் இல்லந்தோறும் இருந்தே வந்துள்ளன. கொள்ளை நோய்களால் மரணங்கள் அதிகமாக நிகழ அதனை தடுக்கவும், இறைவனை வணங்கவும் பயன்படுத்தப்பட்டதே வேப்பிலை.
வேப்பிலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் புதைந்து உள்ளன. உலகில் பல தொழில் நுட்ப கூடங்கள் ஆராய்ந்து வேம்பின் மகத்துவத்தை பறைசாற்றி உள்ளன. இதனை முன்பே அறிந்திருந்த நம் முன்னோர் ஆடி மாதத்தின் தொடக்கம் முதல் மக்கள் அதிகம் கூடும் ஆலயங்கள் முதல் தனித்தனி வீடு வரை வேப்பிலை தோரணம் கட்டி நோய்கள் பரவாமல் தடுத்து உள்ளனர்.
வேப்பங்கொழுந்தை ஆடி மாதத்தில் கூழ் உடன் அருந்துகின்றனர். இதனால் உடலில் நோய் எதிர்ப்புகள் அதிகரிக்கின்றன. வேப்பிலை சேலை உடுத்தல், வேப்பிலை அரைத்து தண்ணீர் தெளித்தல், என பலவிதமான சமயசடங்குகள் அனைத்தும் மனிதனின் ஆரோக்கியத்திற்கே உதவுகின்றன.
வேப்பிலையை உடலில் அரைத்து பூசுவது, அதனை உடுத்துவதன் மூலம் சரும நோய்கள் உடலில் அண்டாது. மாரியம்மனின் மாலையாக, ஆடையாக உலா வரும் வேப்பிலை அம்மனுக்கு உகந்தது மட்டுமல்ல மனிதர்களின் நல்வாழ்விற்கும் உகந்தது.
மஞ்சள் பல்வேறு பயன்பாடு சிறப்பு மற்றும் மருத்துவ குணம் கொண்டது. உடல் ஆரோக்கியத்திற்கு மஞ்சளின் தேவையறிந்தே அன்றாட சமையலில் அதனை பயன்படுத்துகிறோம். மங்கல பொருளாகவும், தெய்வீக அம்சம் பொருந்தியதாக மஞ்சள் பயன்படுகிறது. ஆடி மாதத்தில் மஞ்சள் கலந்த நீரில் பெண்களை குளிக்க வைப்பதும், மஞ்சள் கலந்த நீரை வாசல் பகுதிகளிலும் தெளிக்கின்றனர்.
மஞ்சள் கலந்த நீரினை தெளிப்பதால் சிறுசிறு விஷபூச்சிகள், ஈக்கள், கிருமிகள் நிலப்பகுதி வழியே இல்லத்திற்குள் நுழையாது. “ஆடிச்செவ்வாய் தேடிக்குளி, அரைத்த மஞ்சள் பூசிக்குளி” என்பது பழமொழி ஆடி செவ்வாயில் எண்ணெய் தேய்த்து மஞ்சள் பூசிகுளித்தால்
உமையவள் கேட்ட வரம் தருவாள் என்பது ஐதிகம்.
மேலும் செவ்வாய் அன்று எண்ணெய் தேய்த்து மஞ்சள் பூசி குளித்தால் பெண்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பதுடன், தீய சக்திகள் மற்றும் தீய கிரக கோளாறுகள் நீங்கும்.
மஞ்சள் பொதுவாக வணக்கத்திற்குரிய பொருளாக பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாட்டில் அதிகளவு மஞ்சளை பயன்படுத்துவது அதன் மங்கல சிறப்புடன் நம்மை பாதுகாக்கும் அரணாக கருதி தான் என்பதே உண்மை.
பல நூற்றாண்டுகளாகவே மஞ்சளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இஞ்சிக்கு சொந்தம் இந்த மஞ்சள். மஞ்சளில் குர்குமின் என்ற பயோ ஆக்டிவ் காம்பவுண்ட், ஆன்டி ஆக்சிடென்ட் உண்டு. அறிவியல்பூர்வமாக இவற்றுக்குப் புண்ணை ஆற்றும் தன்மையுண்டு. முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் திறனுண்டு. சொரியாசிஸுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அம்மைக் கொப்புளங்களுக்கு மஞ்சள் பயன்படுத்தியிருக்கலாம், புண்ணை ஆற்றும் அதன் திறனுக்காக! வடு இருந்தால் அதைப் போக்கும் திறனுண்டு. முன்னொரு காலத்தில் வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துச் சிரங்குப் புண்களில் அப்பி சிரங்குகளைக் கட்டுப்படுத்தினார்கள். மஞ்சளுக்கு மருந்திருப்புத் தன்மை (பயோஅவைலபிலிட்டி - bioavailability) பண்பு சற்றுக் குறைவுதான். போலவே நமது உடலின் வெளிப்புறமும் அவ்வளவாக எடுத்துக்கொள்ளாது. குறைவாகப் பூசினால் மஞ்சள் முகம். அதிகமாக மஞ்சளை அப்பினால் முகம் சிவந்து வீக்கமடையும், ஒவ்வாமையும் ஏற்படலாம் கவனம். வைரஸ்களை இவற்றால் ஒன்றும் செய்ய இயலாது. கொரானா வைரஸ்களின் மரபணுக்களை  காத்திருப்பது அதன்மேல் பூசினாற் போலுள்ள புரதப்போர்வை. அதையெல்லாம் கடந்துபோகும் திறன் மஞ்சளுக்குக் கிடையாது. (டெக்னிக்கலாகச் சொன்னால் ரிசப்டார் புரோட்டீன், ஆக்டிவ் பைன்டிங் சைட்ஸ் எனும் பல படிகளுண்டு.)
அப்புறம் வேப்பிலை! வேப்பங்குச்சி, வேப்பம்பழம் என வேம்பின் பயன் அதிகம்தான். வேப்பம்பழம் குடற்புழு நீக்கியாக, சர்க்கரை நோய்க்கு, தொழுநோய்க்கு, சிறுநீரகக் குறைபாடுகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வேப்பங்குச்சிகளை இருமலுக்கு, ஆஸ்துமாவிற்கு, விந்துக் குறைவைச்  சரிசெய்ய, குடற்புழுக்களை நீக்க எனப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பூச்சிகளைக் கொல்ல, குறிப்பாக கொசுக்களை விரட்டப்  பயன்படுத்தியிருக்கிறார்கள். வேப்பஞ்சாறு மூலம் கர்ப்பம் கலைத்திருக்கிறார்கள். வேப்பஞ்சாறு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும்தான். ஆனால், ஆங்கில மருந்துகளுடன் எடுத்துக்கொள்ளும்போது தலைகீழாகவும் செயல்படும். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம் குடித்தார்களே? அதுவும் வைரஸ்கள்தானே என்று கேட்பீர்கள்? அப்போது சாப்பிட்டதன் காரணம் வேறு. டெங்கு காய்ச்சலின் விளைவாக ரத்த வெள்ளை அணுக்களும், பிளேட்லெட்டுகளும் குறைந்துவிடும். அதைக் கூட்டுவதற்குத்தான் பயன்பட்டதேயொழிய வைரஸ்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். டெங்கு நோயாளிகளைவிட எதற்கும் குடித்துவைப்போமே என்று குடித்தவர்கள் ஏராளம். டெங்கு வைரஸ்களின் பண்புகள் வேறு. கரோனா வைரஸ்களின் பண்புகள் வேறு. ஆதாரமாக மூச்சு விடுதலையே கரோனா வைரஸ்கள் நிறுத்திவிடும். அவை உருவாக்கும் சளி கெட்டியானது. ஃபுளு வைரஸினால் உருவாகும் சளி நீர்த்திருக்கும். ஆகையால் இரண்டும் கரோனாவை ஒன்றும் செய்யப் போவதில்லை!
வெய்யில் காலத்தில் ஏற்படும் வெப்பத்தால் ஏற்படுவது அம்மை நோய். காளியம்மனின் கோபத்தால் ஏற்படும் என்ற நம்பிக்கையில் வந்தது அப்பெயர். சின்னம்மை, பெரியம்மை, விளையாட்டம்மை, தட்டம்மை, பாலம்மை, தவளையம்மை, கல்லம்மை, மிளகம்மை, கடுகம்மை, பாசிப்பயறம்மை, வெந்தயம்மை, கொள்ளம்மை, பனியேறி, கரும்பனசை, பயறி, இராமக்கம், விச்சிலுப்பை, நீர்க்கொளவான், கொப்புளிப்பான் என்று ஏராளமாய் பெயர்களுமுண்டு. மீசல்ஸ் வைரஸ்கள்தான் அம்மைக்குக் காரணம். நோயாளி தும்மும்போதோ, இருமும் போதோ வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமோ, எச்சில் மூலமோ, சருமத்தொற்றின் மூலமோ இவை மற்றவர்களைத் தொற்றும். வரும்போது ஆள்கொல்லியாக இருந்தது. தற்போது மிகச் சிறந்த தடுப்பூசி உண்டு. அம்மைப்பால் குத்த வராங்க என ஓடி ஒளிந்த காலமெல்லாம் உண்டு. அதன் பிறகான காய்ச்சல். தொடக்கத்தில் இரண்டு பெரிய அம்மைத் தழும்புகள். பின்னால் ஒரே அம்மைத்தழும்பு, அதன் பின்னால் பிறந்தவர்களுக்கு தழும்பேயில்லை என்று மருத்துவ அறிவியல் முன்னேறிவிட்டது. 
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மஞ்சளும், வேப்பிலையும் உதவும் என்ற தகவல் தமிழ்நாடு முழுக்கப் பரவியதன் விளைவு, வேப்பமரங்களை மொட்டையடித்து, கடைகளில் மஞ்சள் பொடிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் மக்கள்.
முதலில் வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை மட்டுமே கட்டிய மக்கள், மஞ்சள் கலந்த வாளித் தண்ணீரை வாசலில் வைத்து கை, கால் அலம்பப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பலசரக்குக் கடை மற்றும் காய்கறிக் கடை நடத்தும் பெண்களில் பலர் உள்ளங்கையில் இருந்து முழங்கை வரையில் தினமும் மஞ்சள் பூசிக் கொண்டிருக்கிறார்கள். பல கிராமங்களின் நுழைவாயிலில், வேப்பிலை தோரணமாகத் தொங்குகிறது.
இவை மருத்துவமா, மூடநம்பிக்கையா என்ற விவாதம் ஒருபுறம் நடக்கிறது. தமிழர் வாழ்வியலில் மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் என்ன பங்கு இருக்கிறது? என்று தமிழர்களின் பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும் விரிவாகக் கள ஆய்வு செய்திருக்கும் பேராசிரியர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணின் ஆகியோருடன் பேசினோம்.
"தமிழர் வாழ்வில் மஞ்சள் ஆரோக்கியம் தொடர்பான ஒரு பொருளாகவே இருந்திருக்கிறது. வெப்ப மண்டல உயிர்கள், நீராடுவதில் பெரும் விருப்பம் உடையன. குளிர்த்தல் என்ற வார்த்தையையே நாம் இப்போது குளித்தல் என்று சொல்கிறோம். அவ்வாறு குளிக்கும்போது தமிழர்கள் சவுக்காரமாக (சோப்) எதைப் பயன்படுத்தினார்கள் என்று பார்த்தால், இலக்கியங்களில் பல சான்றுகள் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மஞ்சள். நுணுக்கிய மஞ்சளால் கண்ணனை யசோதா நீராட்டினாள் என்று பெரியாழ்வாரின் பாசுரம் பாடுகிறது.
பூப்பு நீராட்டை மஞ்சள் நீராட்டு என்று குறிப்பிடுவது நம் வழக்கமாக உள்ளது. பழந்தமிழர் மரபில் மஞ்சள் நீராட்டு என்ற சொல், பூப்பு நீராட்டினை மட்டுமே குறிப்பதன்று. போர்க்களம் செல்லும் வீரர்கள் மஞ்சள் நீராடி, மஞ்சள் உடை உடுத்திச் செல்வர். அது இறப்பினை எதிர்கொள்ளும் வீர உணர்வையும், தியாக உணர்வையும் குறிக்கும்.
இந்த வழக்கத்தின் தொல்லெச்சமாகவே அரக்கனை அழிக்கச் செல்லும் தாய்த் தெய்வத்தின் சாமியாடி (பிரதிநிதி) மஞ்சள் நீராடி மஞ்சள் உடை உடுத்திச் செல்கிறார். வெப்ப மண்டல மனிதர்களைப் போலவே அவர்கள் வழிபடும் சிவன், திருமால் ஆகிய தெய்வங்களும் நாள்தோறும் குளிர்க்கின்றன. இதற்குத் திருமஞ்சனம் ஆடல் என்று பெயர்" என்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.
                                                                                                                                                                                            
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனிடம் கேட்டபோது, "வேப்பம்பூ என்பது மூவேந்தர்களில் பாண்டியர்களின் அடையாளம். மருத்துவம் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் நம் மக்கள் வேப்பிலையைப் பயன்படுத்துகிறார்கள். அம்மை நோய் கண்டவர்களுக்கு விசிறிவிட வேப்பிலையும், அம்மைப் புண்களால் ஊறல் எடுக்கிறபோது தடவிக் கொடுக்க வேப்பங்கொழுந்தையுமே நம்மவர்கள் பயன்படுத்துவார்கள்.

அம்மை நோய் குணமானவர்களைக்கூட முதன் முதலில் குளிப்பாட்டுகிறபோது, மஞ்சளும், வேப்பிலையும் கலந்த தண்ணீரைத்தான் பயன்படுத்துவார்கள். அம்மை விளையாண்ட வீடுகளுக்கு மற்றவர்கள் வருவதைத் தடுப்பதற்காக, வீட்டு வாசலில் அடையாளத்துக்கு வேப்பிலையைக் கட்டுவதும் வழக்கம். இந்த யுக்திதான் ஊமைத்துரையின் உயிரையே காப்பாற்றியது.
 இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சிப் போரில் காயமுற்ற தன் மகனைத் தேடி போர்க்களத்துக்கே போயிருக்கிறாள் ஒரு தாய். மகனை மடியில் கிடத்தி அவள் அழுதபோது, அம்மா நான் பிழைக்க மாட்டேன். அதோ ஊமைத்துரை காயமுற்றுக் கிடக்கிறார். அந்தச் சாமியைக் காப்பாத்துமா என்று சொல்லிவிட்டு உயிர் துறந்து விடுகிறான். உடனே ஊமைத்துரையை தன் வீட்டிற்கே தூக்கிக்கொண்டுபோய்,காயத்துக்கு சிகிச்சையளித்திருக்கிறாள் அந்தத் பெண்.
ஊமைத்துரை உயிரோடுதான் இருக்கிறான் என்று தெரிந்ததும்  ஆங்கிலேயப் படைகள் அந்த ஊரில் வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கின்றன. அப்போது அந்தப் பெண் தன் வீட்டு வாசலில் வேப்பிலையைத் தோரணமாகக் கட்டி வைத்துவிட்டு, அழுதிருக்கிறாள். அம்மை நோயால் அவளது மகன் இறந்துவிட்டான் போல, *உள்ளே போனால் நமக்கும் நோய்த்தொற்று ஏற்படும் என்று படைவீரர்கள் பயந்து திரும்பிப் போய்விட்டார்கள். இது வெறுமனே வழக்காறு அல்ல; வரலாறு. கால்டுவெல் கூட தனது 'ஹிஸ்டரி ஆப் திருநெல்வேலி' புத்தகத்தில் இதனைப் பதிவு செய்திருக்கிறார்" என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo