Onetamil News Logo

பாரதிய ஜனதா கட்சிக்கு 150  இடங்களுக்கு மேல் கிடைக்காது. இந்த நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கிறீர்கள் ;வைகோ பேச்சு  

Onetamil News
 

பாரதிய ஜனதா கட்சிக்கு 150  இடங்களுக்கு மேல் கிடைக்காது. இந்த நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கிறீர்கள் ;வைகோ பேச்சு  


திருப்பரங்குன்றம்  2019 மே 10 ; மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மே 8 முதல் 13 வரை நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மே 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்று 9 ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதி, அவனியாபுரம் பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு:-
1330 அருந்தவக் குறட்பாக்களைத் தந்த வள்ளுப் பெருந்தகை, அரக முதல எழுத்தெல்லாம்  ஆதிபகவான் முதற்றே உலகு என்று தொடங்கி, முதல் பத்துப் பாட்டுகளுக்கு அடுத்து வருவது வான் சிறப்பு குறித்துத்தான்.
பெண்டிரும் உண்டுகொல்; பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் மெய்வாளில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
என்று கண்ணகி பெருந்தேவி பாண்டியன் பேரவையை நோக்கி தீயின் எரிமலையாகப் புறப்பட்டாளே! அந்த சிலப்பதிகார காவியத்தைத் தீட்டிய இளங்கோவடிகள், தொடக்கத்திலேயே
திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும் 
ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்
என்று மழையை வாழ்த்திப் பாயிரத்தைத் தொடங்கியதைப் போல, இந்த மழை விவசாயிகளின் மனதைக் குளிர வைக்கக்கூடியது. கொடிய கோடைக்குப் பிறகு மழை வருவது போல, ஊழல் அனல் காற்றில் வாட்டி வதைத்த அண்ணா திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்.
மலைச் சாரலோடு வசந்தத்தின் தென்றல் பாட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி முத்தமிழ் அறிஞர் ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் அருந்தவப் புதல்வர், இன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், நாளை மலரப் போகிற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மாட்சிமைக்குரிய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்திருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் நல்லாதரவைப் பெற்று, பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகச் செல்வதற்கு தீர்ப்பளிக்கப் போகிற நீதிபதிகளாகிய உங்கள் முன்னால் கரம் கூப்பி வணங்குகின்ற டாக்டர் சரவணன் அவர்களை ஆதரித்து இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.
மழைத்துளிகள் விழுந்தவண்ணம் இருக்கின்றன. மழைத் துளிகளுக்கு மத்தியில்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் ராயபுரம் ராபின்சன் பூங்காவில் 1949 செப்டம்பர் 18 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி வைத்தார். திராவிட இயக்கத்தைக் காப்பதற்காக சிந்தப்பட்ட இரத்தத் துளிகளைத் தந்த கே.வி.கே.சாமி, ஆலந்தூர் சின்னா, நெல்லிக்குப்பம் மஜீத், வண்ணை பாண்டியன், கோவை ஆரோக்கியசாமி, உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோர் செய்த தியாகத்தை இந்த மழைத் துளிகள் நினைவுபடுத்துகின்றன.
விவசாயிகள் பயிர் காப்பீடு தள்ளுபடி செய்யப்படவில்லை. எஸ்.ஆர். நிறுவனமும், அம்பானி நிறுவனமும் ஆயிரக்கணக்கான கோடிகளைப் பெற்றுக்கொண்டதே தவிர, விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கின்றார் தளபதி ஸ்டாலின்.
ஆட்சி மாற்றம் உறுதி ;மத்தியில் நரேத்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அவர் மட்டுமல்ல, சங் பரிவார் கூட்டத்தின் பின்னணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு 150  இடங்களுக்கு மேல் கிடைக்காது. இந்த நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கிறீர்கள். மதச் சார்பின்மையை அழிக்கத் துடிக்கின்றீர்கள். திருப்பரங்குன்றம் கூட்டத்திலும் இதைக் குறிப்பிட்டேன்.
வானம் கருத்து இருக்கிறது. பிறை தெரியாது. வானமெங்கும் கார்மேகங்கள் நிறைந்திருக்கின்றன. நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் பிறை தோன்றிய நாளிலிருந்து ரமலான் நோன்பு நோற்கக்கூடிய இசுலாமிய பெருமக்கள் இருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் விசாகத் திருவிழா என்றைக்கு நடைபெறும் என்று காத்துக்கொண்டு இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களும் இருக்கின்றார்கள். தேவலாயங்களுக்குச் சென்று, வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற உபதேச மொழிகளை ஜெபிக்கக்கூடிய கிறித்தவப் பெருமக்கள் இருக்கிறார்கள். கிரந்தங்களை வாசிக்கின்ற சீக்கியர்கள் இருக்கிறார்கள். பௌத்தர்கள், சமணர்கள், பார்சி, பகுத்தறிவாளர்கள், மாலியம் சிவனில் இணைந்து, வைணவம் சைவத்தில் இணைந்து எல்லோரும் ஒன்றாக இருக்கக்கூடிய ஒரு அமைப்பு தான் இந்தியா.
பிரிட்டிஷ்காரன் வருவதற்கு முன் இந்தியா என்ற அமைப்பு இல்லை. இதை நான் சொல்லவில்லை. எட்டு வருடம் சிறையிலிருந்து குடியரசுத் தலைவர் பதவியேற்ற நீலம் சஞ்சீவி ரெட்டி  குடியரசுத் தலைவர் உரையில் சொன்னார். அசோகர் காலத்திலும் இல்லை. அக்பர் காலத்திலும் இல்லை. பல மொழிகள், பல தேசியங்கள், பல கலாச்சாரங்கள், பல தேசிய இனங்கள், பல்வேறு நாகரிகங்கள், பல்வேறு மத நம்பிக்கைகள் எல்லாம் உள்ளடங்கியது இந்தியா. இதைச் சிதைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகிறார்கள்.
எல்லைப் புறத்தில் உயிரிழந்த வீரர்கள் சிந்திய இரத்தத்தைச் சொல்லி வாக்குக் கேட்க ப.ஜ.க.வுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. ஸ்டெர்லைட் கம்பெனிக்குக் கைக் கூலி வேலை பார்க்கும் தமிழக அரசு, காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்ததால் பச்சை குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்ட 13 உயிர்கள் பலிவாங்கப்பட்டன.
ஊழல்
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் இல்லை. வரவேண்டிய போ~ர்டு விரிவாக்கத் தொழிற்சாலை, அண்ணா திமுக அரசின் ஊழல் காரணமாக குஜராத் மாநிலத்துக்குச் சென்றது. இவர்கள் கேட்ட கமிசன் லஞ்ச பேரத்தால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசுசு தொழிற்சாலை ஸ்ரீசிட்டி நகருக்குச் சென்றது. ஹோண்டா பைக் தொழிற்சாலை சித்தூருக்குச் சென்றது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டேம் ரயில்பெட்டி தொழிற்சாலை இவர்களின் கமிசன் பேரத்தால் ஸ்ரீசிட்டி நகருக்குச் சென்றுவிட்டது.
பருப்பு பேர ஊழல், வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல், பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் ஊழல், மதிப்பெண் ஊழல், பொதுப்பணித்துறை ஒப்பந்தத்தில் ஊழல், உள்ளாட்சிகளில் அதிகாரிகளை நியமித்து ஊழல் என்று தமிழக அரசு ஊழல் நிறைந்த அரசாக இருக்கிறது. அண்ணா திமுக அரசு, மத்திய அரசுக்குப் பணிந்து கைகூப்பி வணங்கி கீழே கிடப்பதால்தான் தமிழக வாழ்வாதரங்கள் பறிபோய் இருக்கின்றன.
தமிழக வாழ்வாதாரத்துக்குத் துரோகம்
பென்னிக் குயிக் அணைக்கு மீண்டும் ஆபத்து வருகிறது. பென்னி குயிக் கட்டிய அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்டப்போகிறோம் என்று அறிவிக்கிறது கேரள அரசு. அதற்கு அனுமதி கொடுக்கிறது நரேந்திர மோடி அரசு. என்ன நோக்கம்? இந்த தென்பாண்டி மண்டலம் பசி, பட்டினியால் பஞ்ச பிரதேசமாக வேண்டும். இதைத் தவிர என்ன நோக்கம் இருக்க முடியும்.
மேகதாட்டுவில் அணை கட்டத் துடிக்கிறதே கார்நாடகம், என்ன நோக்கம்? டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக ஆக்க வேண்டும் என்பதுதான். ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு, மீத்தேன் எரிவாயு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் டெல்டா பகுதி பஞ்ச பிரதேசமாக மாறி, பாலைவனமாகும். எத்தியோப்பியாவாகும்.
மண்ணில் யாவுள வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று அட்சய பாத்திரமான அமுத சுரபியாக விளங்கிய தஞ்சை தரணி பிச்சைப் பாத்திரம் ஏந்துவம் சூழல் வரும். நமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் நிலையை எண்ணினாலே எனக்குக் கவலையாக இருக்கிறது.
நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டுவந்து தேனி மாவட்டத்தைச் சாம்பல் மேடு ஆக்கப் பார்க்கிறார்கள். இதை எதிர்க்கின்ற துணிச்சல், சுயமரியாதை உணர்வு தமிழகத்தை ஆளும் அரசுக்குக் கிடையாது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க வேண்டும் என்பதற்காக அனைத்துப் பிரச்சினைகளிலும் போராடிக் கொண்டிருக்கக்கூடிய நான் மிகுந்த வேதனையோடு சொல்கிறேன், மின்னல் வெட்டியது. இடி இடித்தது. பெருமழை பெய்தது. ஆனால் எங்கும் மக்கள் கூட்டம் களையவில்லை. சரவணன் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும், உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் மக்கள் உறுதி எடுத்துவிட்டார்கள்.
மின்னல் வந்து, இடி இடித்தால் மின்சாரம் தடைபட்டுப் போகும் என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படி மின்சாரம் தடைபட்டால் அவசரப் பிரிவில் இருக்கும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என்று நிர்வாகம் யூகிக்க முடியாதா? ஜெனரேட்டர்கள் சரியாக இயங்குகிறதா? இல்லையா? என்று முதலில் சோதித்துப் பார்க்க வேண்டாமா? இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் இதே பகுதியில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் ஐந்து உயிர்கள் பறிபோய்விட்டன.
கடன்கள் தள்ளுபடி
பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, நல்ல வைத்தியம் வேண்டும் என்பதற்காக தங்கள் காதுகளில் இருக்கக்கூடிய கம்மலை, மாங்கல்யத்தோடு அணிந்திருக்கக்கூடிய தங்கச் சங்கிலியையும், இரண்டு சவரன், மூன்று சவரன், நான்கு, ஐந்து சவரன் வரை நகையை ஈடாக வைத்து கடன் வாங்கிய தாய்மார்கள் எந்தக் கட்டத்தில் அதை மீட்க முடியும்? இனி எந்தக் காலத்தில் பொன் நகையை பார்க்கப் போகிறோம் என்று நினைத்தார்கள். தாய்மார்கள் கவலை கொள்ள வேண்டாம் உங்கள் பொன் நகை புன்னகையோடு உங்களிடம் வந்து சேருவதற்கு தளபதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திருப்பிக் கொடுக்கப்படும் என்று. அதைப் போன்றே கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இன்றைக்கு 75 ரூபாய், 100 ரூபாயில் இருக்கும் கேபிள் டி.வி. கட்டணம் இனி ஐம்பது ரூபாயில் கொடுக்கப்படும். 350 ரூபாய்க்கு வாங்கிய சமையல் எரிவாயு உருளை இன்றைக்குத் 900 ரூபாய். இந்த நிலை மாறும்.
சரக்கு - சேவை வரியால் வியாபாரிகள் வாழ்வு சூறையாடப்பட்டுவிட்டது. ஒரு பக்கத்தில் விவசாயிகள், மறு பக்கத்தில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அனைத்து இடங்களிலும் வேலை இல்லாத் திண்டாட்டம். படித்த பட்டதாரிகள் இளைஞர்கள், இளம் பெண்கள் 80 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். புள்ளி விவரங்கள் அதைத்தான் தெரிவிக்கின்றன. தமிழகம் வேட்டைக்காடாக ஆகிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்று நம் விரும்புகிறோம்.
பாலியல் குற்றச்சாட்டு - குழந்தை விற்பனை ;
நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததைப் போல பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன.  எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் நாசமாக்கப்பட்டிருக்கிறார்கள். 800க்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் வாழ்வு சூறையாடப்பட்டு இருக்கிறது. ராசிபுரத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஏழ்மை, வறுமை, இல்லாமையில் இருக்கும் தாய்மார்களிடம் 25 ஆயிரம் தருகிறோம் உங்கள் குழந்தையைத் தாருங்கள் என்று வாங்கி, இரண்டு இலட்சம், மூன்று இலட்சம், ஐந்து இலட்சம் என்று விற்றிருக்கிறார்கள்.
நான் சின்னஞ் சிறுவனாக இருந்தபோது, டூரிங்க டாக்கிஸ் சென்று பராசக்தி படம் பார்த்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. அண்ணன் டாக்டர் கலைஞர் எழுதிய அருமையான காவியம். அந்தப் படத்தின் நாயகன் உலகின் தலைசிறந்த தமிழ் நடிகரான சிவாஜி கணேசன் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குணசேகரன் தங்கை கல்யாணி. குணசேகரனை நேசித்தவர் விமலா. இதேபோன்ற ஒரு கூட்டத்தில் பேசுகிறார், தமிழகத்தின் கொற்கை முத்துக்களை கிளியோபட்ரா ஆவலோடு, அன்போடு, பிரியத்தோடு வாங்கி பயன் அடைவாள். ஆனால் இன்றைக்கோ பிழைப்பு நடத்துவதற்கு இங்கு வழியில்லாமல், சிங்கப்பூருக்குச் சென்று ஆடவன் ஈட்டும் பணத்தை எதிர்பார்த்து, பசியும் பட்டினியுமாக தாய்மார்கள் இங்கே இருக்கிறார்கள்.
ஆண்டவனின் பிள்ளைகளின் நிலைமையோ அதைவிட பரிதாபம். குழந்தைகள் விற்பனை செய்யப்படுகிறதாம்!  அவர் பேசுகிறார், அண்ணன் டாக்டர் கலைஞர் வசனத்தைத்தான் சொல்கிறேன், கேளுங்கள் நண்பர்களே! குழந்தை விற்பனை செய்யப்படுகிறதாம். தாய்மார்கள் குழந்தைகளை விற்கிறார்களாம் கேளுங்கள் நண்பர்களே! பத்து மாதம் பாடுபட்டு வயிற்றிலே சுமந்த தாய், மடியிலே கிடத்திப் பாலூட்டி, சீராட்டிய தாய், கண்ணே மணியே வைரமே, செல்வமே என்று பாரட்டுகின்ற தாய், குழந்தையைக் குளிப்பாட்டி பள்ளிக்குச் செல்லும் நடை அழகைக் கண்டுகளித்த தாய், பத்து மாதம் எந்த வைர வைடூரியத்தை, தங்கத் தாம்பாளத்தை, கோமேதகத்தை வயிற்றிலே வைத்திருந்தாளோ, அந்தக் குழந்தையை, பிள்ளையோ பிள்ளை என்று மார்க்கெட்டில் கீரையோ கீரை என்று விற்பதைப் போல் விற்கின்றளாம்! எட்டணாவுக்கு ஒரு குழந்தையாம்! பிஞ்சுக் குழந்தை மூன்று ரூபாயாம். பெரிய குழந்தை ஐந்து ரூபாயாம். இந்த அவலம் நாட்டிலே நடக்கலாமா?
ஒரு தாய், தகப்பன் தன் குழந்தைக்கு பசிக்கு உணவு அளிக்க முடியாமல், குழந்தையை ஆற்றில் வீசி எறிந்துவிட்டு தானும் தற்கொலை செய்வதற்கு முயன்றபோது பிடிபட்டு, கைதாகி, குற்றவாளிக் கூட்டில் நிறுத்தப்பட்டு, மரண தண்டனையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாளாம் கல்யாணி என்ற ஒரு பெண். இந்த இடத்தில் பொதுக்கூட்டத்தைக் கேட்டுக்கொண்டிருந்த குணசேகரன் நீதிமன்றத்தை நோக்கி ஓடுவார். 
ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள். அவள் ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும். சட்டத்தை எரித்திடுவோம்.
67 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் கலைஞர் எழுதியிருந்ததை எண்ணிப் பார்த்தேன். இன்றைக்கு அதே சம்பவம்தான் ராசிபுரத்தில் நடக்கிறது.
சகோதரர்களே டாக்டர் சரவணன் அவர்களை நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆக்குங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவார். 22 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றிபெற்று சட்டமன்றம் செல்வார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படும்.
நான்கு தூரல் விழுந்தாலே கூட்டம் கலைந்துவிடும். ஆனால் இவ்வளவு அமைதியாகக் கேட்கிறீர்களே, நான் பெரிய பேச்சாளன் என்பதற்காக அல்ல, என் நெஞ்சிலிருந்து பீறிட்டு வருகிற உணர்வுகள் தாய்த் தமிழகத்தைக் காப்பதற்காக, பொன்னான தமிழ்நாட்டைக் காப்பதற்காக. 54 ஆண்டுகளாக பாடுபட்டவன், ஐந்து வருடம் சிறையில் இருந்தவன். மதுவின் கொடுமையை எதிர்த்து ஐந்தாயிரம் கிலோ மீட்டர் நடந்தவன். மக்களைக் காப்பதற்காக நடந்து நடந்து களைத்துப்போனவன். இறுதி மூச்சு இருக்கிறவரை தமிழ்நாட்டுக்காகப் பாடுபடும் உண்மை ஊழியன். அவன் பேசுவதில் சத்தியம் இருக்கிறது; உண்மை இருக்கிறது என்பதனால் கேட்டீர்கள். வெல்லட்டும் உதயசூரியன்; மலரட்டும் தளபதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo