அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு,இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்
சென்னை 2023 மே 16 ;அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு,இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்...!
கடந்த அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ததுடன், தொடக்கத்திலிருந்து விசாரிக்க உத்தரவிட்டது.
ஆனால், வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது. அதேபோல, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று வெளியிட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.