நம்ம ஸ்கூல் திட்டம் முதல்வர் துவக்கினார்
'நம்ம ஸ்கூல்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்துள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்வதற்கான ஒரு முன்னெடுப்பாக நம்ம ஸ்கூல் என்ற இந்த புதிய திட்டம் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய தமிழக முதல்வர் ஒவ்வொருவரின் வசந்த காலமும் அவர்கள் பள்ளிகளில் படித்த காலம்தான் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், " இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இது ஒரு ஆரம்பம் தான். ஆனால் இந்த திட்டம் நிச்சயமாக எதிர்பார்த்ததை விட வெற்றி பெறும். ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்வில் வசந்த காலம் என்றால் அது அவர்களின் இளமைக்காலம்தான். குறிப்பாக அவர்கள் பள்ளியில் படித்த காலம். இந்த திட்டத்தின் மூலம் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு மாணவர்கள் உதவலாம். எல்லாவற்றையும் அரசு மட்டுமே செய்ய முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும். இந்த திட்டத்தை மாணவர்கள் நிச்சயம் வெற்றியடையச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.