Onetamil News Logo

மதுரையிலிருந்து நாமக்கல் வழியாக பெங்களுர்க்கு ஜனசதாப்தி ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை ;மதுரை  எம்.பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Onetamil News
 

மதுரையிலிருந்து நாமக்கல் வழியாக பெங்களுர்க்கு ஜனசதாப்தி ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை ;மதுரை  எம்.பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மதுரை 2020 செப் 9 ;பெங்களுர் நகரம் இந்தியாவின் சிலிகான் வேலி  என்று அழைக்கப்படுகிறது. இங்கு அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்து உள்ளது. இதைபோல் இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு பொதுதுறை நிறுவனங்கள் (BEL,HAL,NAL,BHEL,BEML,HMT, ISRO) அமைந்துள்ளன. இந்த நகர் தமிழகத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சென்னைக்கு அடுத்து அதிக அளவில் மக்கள் பெங்களுரில் பணிபுரிந்து வருகின்றனர். மதுரையிலிருந்து பெங்களுர்க்கு தற்போது தினசரி ரயிலாக நாகர்கோவில் - பெங்களுர் ரயில் மற்றும் தூத்துக்குடி – மைசூர் என இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில்களில் தூத்துக்குடி – மைசூர் ரயில் மதுரையிலிருந்து பெங்களுர்க்கு இயக்கப்பட்ட ரயில் ஆகும்.  பின்னர் இருமார்க்கங்களிலும் நீட்டிப்பு செய்யப்பட்டது.  இந்த இரண்டு தினசரி ரயில்களில் மதுரை சிட்டி பயணிகளுக்கு மிகக்குறைந்த அளவே இருக்கைகள் கோட்டாவாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமில்லாமல் இந்த ரயில்கள் மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்ட பயணிகளால் முன்பதிவு நிரம்பிவிடுகின்றது.  இதனால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பயணிகள் பெங்களுர்க்கு செல்ல முன்பதிவு இருக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். பெங்களுர் வழியாக செல்லும் ஒருசில மும்பை மார்க்கம் செல்லும் ரயில்கள் மும்பை செல்லும் பயணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.  
சிறப்பு ரயில்
2010-ம் ஆண்டுகளில் ராமேஸ்வரத்திலிரந்து மதுரை வழியாக மைசூர்க்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு பயணிகள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. பின்னர் இந்த ரயிலை ரயில்வேத்துறை நிறுத்திவிட்டது. இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயக்கப்பட்டிருந்தால் பரமகுடி, மானாமதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதியில் உள்ள பயணிகள் பெங்களுர் செல்ல மதுரைக்கு வரவேண்டிய தேவை இருக்காது.
சென்னை ரயில்கள்
மதுரையிலிருந்து சென்னைக்கு செல்ல வைகை, தேஜாஸ் என இரண்டு பகல்நேர ரயில்கள் மதுரையிலிருந்து புறப்படுமாறும் மதுரை வழியாக குருவாயூர் - சென்னை என மொத்தம் மூன்று தினசரி பகல்நேர ரயில்கள் உள்ளன. ஆனால் இதைப்போல் மதுரையிலிருந்து பெங்களுர் செல்ல பகல்நேர ரயில்கள் இல்லை. மதுரையிலிருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்க கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை பெங்களுர்க்கும் ரயில்கள் இயக்க கொடுக்க வேண்டும். பெங்களுர்க்கும் அதிக அளவில் தமிழகத்திலிருந்து புறப்பட்டு மதுரை வழியாகவும், மதுரைக்கு என தனியாக ரயிலும் இயக்க வேண்டும். மதுரையிலிருந்து பெங்களுர்க்கு பகல்நேர ரயில் இயக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்டநாள் கனவு ஆகும்.
மதுரை – பெங்களுர் தூரம் - 440 கி.மீ  
மதுரை – சென்னை தூரம் -  493 கி.மீ
இந்திய ரயில்வேத்துறை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு பல பெயர்களில் அதிவேக ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில்கள் ராஜதானி ரயில், டோரோண்டோ ரயில், சதாப்தி ரயில், ஜனசதாப்தி ரயில், கரீப்ரத் ரயில், டபுள்டக்கர் ரயில், முழுவதும் குளிர்சாதன ரயில், அந்தோதையா, உதய்  என்ற பெயர்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் அதிவேகமாக பயணித்து மிகக்குறைந்த நிறுத்தங்களில் நின்று செல்லும் படியாக இயக்கப்படுகிறது. இது போன்ற ரயில்களில் ஜனசதாப்தி என்ற பெயரில் பகல்நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் மிகவும் பிரபலம் ஆகும். இந்த ரயில்களில் சதாரண நடுத்தர பயணிகள் பயணிக்கும் வகையில் இரண்டாம்வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் இது போன்று இயக்கப்படும் ரயில்களில் ஜனசதாப்தி ரயில் கோவை – மைலாடுதுறை மற்றும் சென்னை – விஜயவாடா ஆகிய இரண்டு தடத்தில் மட்டுமே தமிழகத்தில் இயக்கப்படுகிறது. ஆனால் மிகசிறிய மாநிலமான கேரளாவில் திருவனந்தபுரம் - கோழிக்கோடு, திருவனந்தபுரம் - கண்ணூர் ஆகிய இரண்டு  வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இது போன்ற எந்த ஒரு ரயிலும் இதுவரை இயக்கப்படவில்லை.
ஜனசதாப்தி
மதுரை மற்றம் சுற்றுவட்டார பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து நாமக்கல், ஓசூர் வழியாக பெங்களுர்க்கு பகல்நேர ஜனசதாப்தி தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று மதுரை பயணிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பகல்நேர ஜனசதாப்தி தினசரி ரயில் இயக்கப்பட்டால் மதுரையிலிருந்து பெங்களுர்க்கு பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரவு நேர ரயில்களில் உள்ள கட்டணத்தை காட்டிலும் பகல்நேரங்களில் இயக்கப்படும் ரயில்களில் கட்டணம் குறைவு ஆகும். இதனால் தமிழகத்தில் பகல் நேரரயில்கள் அதிக அளவில் அறிவித்து இயக்கினால் தமிழக பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பெங்களுரில் உள்ள  யஸ்வந்பூர்லிருந்து  சிமோகாவிற்கு ஓர் ஜனசதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் பகல்நேரத்தில் அதிக நேரம் பராமரிப்பு பணிகள் உட்பட் யஸ்வந்பூர் ரயில் நிலையத்தில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை காலியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை வைத்து எளிதாக மதுரையிலிருந்து பெங்களுர்க்கு புதிய ஜனசதாப்தி  ரயில் இயக்க முடியும்.
உதய் எக்ஸ்பிரஸ்:
கோவையிலிருந்து பெங்களுர்க்கு பகல்நேரத்தில் பயணிக்கும் வகையில் டபுள்டக்கர் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் காலியாகவே இயங்கி வருகின்றது. இதனால் ரயில்வேதுறை இந்த ரயிலின் கட்டணத்தை குறைத்து உள்ளது. இவ்வாறு கட்டணத்தை குறைத்தும் போதிய  வருவாய் இன்றி காலியாகவே இயங்கிவருகின்றது. கோவை பயணிகளுக்கு பெங்களுர்க்கு செல்ல தினசரி இரவு நேர ரயில் இயக்கிவிட்டு இந்த பகல்நேர உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையிலிருந்து பெங்களுர்க்கும் இயக்கலாம் என்ற ஆலோசனையும் ரயில்வேதுறையிடம் வைக்கப்பட்டுள்ளது என்று மதுரையை சார்ந்த ரயில் பயணிகள் ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.
மதுரை எம்.பி இந்த கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை  மாவட்டபயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo