பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 45 பேரின் கைதுக்கு கண்டனம்,பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை
சென்னை 2022 செப் 23; பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 45 பேரின் கைதுக்கு கண்டனம்,பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் 45 பேர் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) யாலும் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதில் கூறியதாவது....நேற்று அதிகாலை முதல் 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 95 இடங்களில் என்.ஐ.ஏ.வும் அமலாக்கத் துறையும் சோதனை மேற்கொண்டது. இதில் பி.எப்.ஐ. யின் அனைத்திந்திய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், அனைத்திந்திய பொதுச் செயலாளர் நசருதீன் இளமரம் உள்ளிட்ட அனைத்திந்திய, மாநில நிர்வாகிகள் 106 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பின்னர் இதில் 45 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இவ்வமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான ஏ.எஸ். இஸ்மாயில், வழக்கறிஞர் முகம்மது யூசுப், முகமது அலி ஜின்னா, மதுரை மாவட்டத் தலைவர் முகமது அபுதாகீர், செயலாளர் சையத் ஈசாக், மாநில துணைத் தலைவர் காலிது முகமது, முன்னாள் செயலாளர்களான காஜா மைதீன், இத்ரீஸ், தேனி மண்டலச் செயலாளர் யாசர், கடலூர் மாவட்டத் தலைவர் ஃபயாஸ் அகமது, எஸ்.டி.பி.ஐ. யின் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பரகத்துல்லா உள்ளிட்ட 11 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகள், அலுவலகங்களில் செய்த சோதனைக்குப் பின் கைப்பேசிகள், நூல்கள், துண்டறிக்கைகள், கணினி, பிரிண்டர், இதழ்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் நெல்லையில் உள்ள இஸ்லாமிய அறிவகங்களிலும் மதராசாக்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் 19 பேர், தமிழ்நாட்டில் 11 பேர், கர்நாடகாவில் 7 பேர், ஆந்திர பிரதேசத்தில் 4 பேர், இராஜஸ்தானில் 2 பேர், உத்தரபிரதேசத்திலும் தெலங்கானாவிலும் ஒருவர் என மொத்தம் 45 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்காக நிதி திரட்டியது, ஆட் சேர்ப்பது, ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற குற்றச்சாட்டுகளின் பெயரால் 5 வழக்குகளின் கீழ் இந்த கைதுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒன்றிய பாசக அரசு தனது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு குறுக்கே வரக்கூடிய எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றின் மூலம் ஊபா , பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பொய் வழக்குகளைப் போட்டு கைது செய்வது மோடி – ஷா – தோவல் கூட்டணியின் வாடிக்கையாக இருந்து வருகிறது. பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டம் பீகாரைச் சேர்ந்த ஆர்.ஜே.டி. தலைவர் லல்லுபிரசாத் யாதவ், மராட்டியத்தைச் சேர்ந்த என்.சி.பி. தலைவர் சரத் பவார், காசுமீர் தலைவர்கள் மெஃபூபா முப்தி, பரூக் அப்துல்லா, கர்நாடக காங்கிரசு தலைவர் சிவக்குமார், கேரள கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன், திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் போன்றோர் பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் வழக்கு தொடுக்கப்பட்டவர்களில் சிலர். பணப் பரிமாற்றத் தடை சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன; வானளாவிய அதிகாரத்துடன் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவரும் அடக்குமுறை சட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
அனைந்திந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலும் ஊக்கமுடன் செயல்பட்டுவரும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இன் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக உறுதியான பரப்புரை, அணிதிரட்டல், போராட்டங்களை முன்னெடுத்துவரும் அமைப்பாகும். பாசிசத்தை எதிர்த்து தொடர் பரப்புரைகளை அனைத்திந்திய அளவில் மேற்கொண்டு வருகிறது.
பாசிச பாசக அரசு பீமா கோரேகான் வழக்கு, தில்லிக் கலவர வழக்கு, ஜே.ன்.யூ மாணவர் வழக்கு, ஹத்ரஸ் வழக்கு என சனநாயக ஆற்றல்களின் மீது ஊபா பொய் வழக்கைப் பயன்படுத்தி ஆண்டுக்கணக்கில் சிறைபடுத்தி வருகிறது. காசுமீரில் பொதுப் பாதுகாப்புச் சட்டம், ஆப்ச்பா சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒமர் அப்துல்லா தொடங்கி மிர்வைஸ் உமர் பாரூக், குர்ரம் பர்வேஸ் வரை சிறைப்படுத்தியது மோடி – ஷா – தோவல் அணி. பயங்கரவாதத்தின் பெயராலும் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியும் சனநாயக ஆற்றல்களையும் குறிப்பாக இஸ்லாமியர்களையும் மிரட்டி ஒடுக்கப் பார்க்கும் தொடர் நிகழ்ச்சிப் போக்கின் பகுதியாகவே பாப்புலர் ஃப்ரண்ட் க்கு எதிரான வேட்டையை பாசிச அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த கைது, சோதனை நடவடிக்கையைக் கண்டிக்க பாசிச எதிர்ப்பில் அக்கறையுள்ள அனைவரும் முன்வர வேண்டும். ஆர்.எஸ்.எஸ். ஐயும் இஸ்லாமிய அமைப்புகளையும் சமப்படுத்திப் பார்க்கும் தவறான கண்ணோட்டத்தை சனநாயக ஆற்றல்களில் ஒருசாரார் கொண்டிருப்பது கவலையளிக்கிறது. இஸ்லாமியர்களின் குடியுரிமை தொடங்கி உணவு, உடை, வாழ்விடம், வழிபாட்டுத் தலம், பண்பாடு உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் மறுக்கக் கூடிய அரசியலை சங்பரிவார அமைப்புகள் செய்துவருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இனவழிப்பும் இனத்துடைப்பும் செய்வதற்கான அப்பட்டமான அறைகூவலை செய்துவருகின்றனர் என்பதை சனநாயக ஆற்றல்கள் கருதிப்பார்க்க வேண்டும்.
மாந்த உரிமை செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்கள் என குறிவைத்துக் கொண்டிருந்த பாசிச பாசக அரசு பாப்புலர் ஃப்ரண்ட் என்ற ஓர் அமைப்பை ஒட்டுமொத்தமாக குறிவைத்து தனது தாக்குதலை தொடங்கியுள்ளது; எந்த நேரத்திலும் அவ்வமைப்பை தடை செய்யக் கூடும் என்ற அச்சவுணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது பாப்புலர் ஃப்ரண்ட் என்ற அமைப்போடு முடியப்போவதில்லை, பாசிச எதிர்ப்பில் சமரசமின்றி உறுதி காட்டக்கூடிய எந்தவொரு அமைப்பையும் பாசிசம் விட்டுவைக்கப் போவதில்லை. ஆகவே, பாசிச அரசின் அடக்குமூறைக்கு எதிராக குரல் எழுப்புவோம், அணி திரளவோம், போராடுவோம்.
இன்னொருபுறம் என்.ஐ.ஏ. என்பது ஓர் அனைத்திந்திய காவல்துறையாக செயல்பட்டு வருகிறது; மாநில அரசிடம் உள்ள ’சட்டம் ஒழுங்கு’ அதிகாரத்தை மீறி எந்தவொரு மாநிலத்திற்குள்ளும் அந்த மாநில காவல்துறைக்கே தெரியாமல் நுழைந்து தேடுதல் வேட்டை, சோதனை, கைது என அட்டூழியம் செய்து வருகின்றது. மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கை அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்ற எண்ணிய போது திடீரென்று அதை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றி தன் கையில் எடுத்துக் கொண்டது. அதில்தான் 16 நாடறிந்த செயற்பாட்டாளர்கள் சிறைப்படுத்தப்பட்டனர் என்பது என்.ஐ.ஏ.வின் ஆபத்தை உணர்ந்துகொள்ள சரியான எடுத்துக்காட்டாகும். தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. வின் சுதந்திரமான செயல்பாட்டை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. சென்னை கிண்டியில் உள்ள தனது அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறுமாறு என்.ஐ.ஏ. வை கோர வேண்டும். என்.ஐ.ஏ. வைக் கலைக்குமாறு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் கைதைக் கண்டிப்பதோடு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.