மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் கொண்டுவரவேண்டும் அமைச்சர் கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடி 2022 ஆகஸ்ட் 16 ; இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பாரத பிரதமர் தமிழகம் முதலமைச்சர் ஆகியோர் கூறி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் பல்வேறு கிராமங்கள் அடிப்படை வசதிகள் முழுமை அடையாமல் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியா வல்லரசு ஆகுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்த காலக்கட்டத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று கடந்த காலத்திலும் திகழ வேண்டும் என்று இந்த காலத்திலும் இரு முதலமைச்சர்களும் பேசியுள்ளனர். இது எந்த அளவிற்கு செயல்பாடுகளில் உள்ளன என்று கிராமவளர்ச்சிக்கு என்று இருக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டார்களா என்றால் கேள்விக்குறி தான். ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு உத்தரவு பிறப்பிப்பதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய இரண்டாம் கட்ட அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கடமைக்கு பணியாற்றுகின்றனர். கடமை உணர்வோடு பணியாற்றினால் கிராமத்தின் வளர்ச்சி நன்றாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக திகழ்ந்து வருகிறது. ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவரும் ஊராட்சியில் தற்போது 58 கிராம ஊர்பெயர்கள் கொண்டு வளர்ந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளில் இதுதான் மிகப்பெரிய ஊராட்சியாக இருந்து வருகிறது. இங்கு அனைத்து தரப்பினரும் வாழ்ந்து வருவது மட்டுமி;ன்றி நடுத்தர ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர். அதிலும் தினக்கூலி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தினமும் காலை பணிக்கு சென்று மாலை திரும்பினால் தான் ஒருவேளை உணவாவது நல்ல உணவு சாப்பிட முடியும் என்ற நிலையில் இருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு தாகம் தீர்க்கும் வகையில் 2004ம் ஆண்டு சாயர்புரம், பெருங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒரு பம்பிங் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இது அப்போதைய காலக்கட்டத்தில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு ஓரளவு தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. அதன்பின் மக்கள் தொகை அதிகம் ஏற்பட்டு சுனாமி குடியிருப்பு கோமஸ்புரம் என புதிய பகுதிகள் உருவாகி உள்ளன. தற்போது தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. 2004ல் பொருத்தப்பட்ட இரண்டு மின்மோட்டார்கள் தற்போது பலசமயங்களில் செயல்படாத நிலை இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு இன்று வரை செய்து கொடுக்கவில்லை. மங்களகுறிச்சியில் இருந்து மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் தீட்டப்பட்டு புதிய குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு தாகம் தீர்க்க வேண்டும் என்பது தான் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. பொதுமக்களிடம் ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து செய்ய வேண்டிய அடிப்படை பணிகளை செய்து கொடுக்கின்றனர். ஆனால் குடிதண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் நேரு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி அந்த திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்று அப்பகுதியைச் சார்ந்த பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்து வருகின்றனர். அந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாவட்ட எம்பியாக கனிமொழி எம்எல்ஏவாக சண்முகையா மற்றும் ஒன்றிய குழுத்தலைவர் மாவட்ட கவுன்சிலர் அந்த ஊராட்சியின் 14 உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் 5 பேர் என ஒட்டுமொத்தமாக அனைவருமே திமுகவைச் சார்ந்தவர்களாகவேதான் இருக்கின்றனர். இதுபோன்ற அமைப்பு வேறு எந்த ஊராட்சிக்கும் கிடைக்காது. இத்தனை பொறுப்புகளில் திமுகவினர் இருந்தும் ஒரு திமுக ஊராட்சி மன்றத்திற்கு செய்ய வேண்டிய முக்கிய பணியான குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்வராத காரணம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சியில் உள்ள சில ஒன்றிய செயலாளர்களும் கேட்கின்றனர். நேருவின் பார்வை நேர்மையாக இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் ஒரு சவாலாக அமைய இருக்கிறது. அது இதுபோன்ற குடிதண்ணீர் பிரச்சனையில் கூட எதிரொளிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எப்படி வாக்கு கேட்க செல்வார்கள். இதையெல்லாம் சிந்தித்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி குடிதண்ணீர் பிரச்சனைக்கு தனிக்கவனம் செலுத்தி தீர்வு காணவேண்டும் என்பது தான் அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.