Onetamil News Logo

நாகர்கோவில் - காச்சுகுடா ரயிலை திருவண்ணாமலை வழியாக இயக்க கோரிக்கை

Onetamil News
 

நாகர்கோவில் - காச்சுகுடா ரயிலை திருவண்ணாமலை வழியாக இயக்க கோரிக்கை


நாகர்கோவில் 2020 செப் 28 ;கடந்த 2014 ஆண்டு பெப்ரவரி 12-ம் தேதி தாக்கல் செய்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில்  நாகர்கோவில்-காச்சுகுடா (ஐதராபாத்) வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, எர்ரகுண்டலா, தாடிபத்ரி, கூட்டி, தோன், கர்நூல்டவுண், கத்வால், மஹபூப்நகர் வழியாக இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலின் பயணநேரம் அதிகமாக இருப்பதால் ரயில்வேதுறைக்கு குறைவான வருவாய் கிடைப்பதால் சமீபத்தில் இந்த ரயிலின் காலஅட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரயில்வேதுறை இந்த ரயில் இயங்கும் நாட்களை மாற்றம் செய்து வார இறுதி நாட்கள் செல்லும் படியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இதன்படி இந்த ரயில்  இனி செவ்வாய்கிழமைக்கு பதிலாக சனிகிழமை நாகர்கோவிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுகிழமை காச்சுகுடா போய் சேரும், மறுமார்க்கம் இந்த ரயில் ஞாயிற்றுகிழமை காச்சுகுடா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திங்கள்கிழமை நாகர்கோவில் வந்து சேரும்.
தற்போது கன்னியாகுமரியிலிருந்து ஹைதராபாத் தவிர மற்ற நகரங்களான சென்னை, பெங்களுர், மும்பை போன்ற இடங்களுக்கு தினசரி ரயில்களும், புதுடில்லி, ஹவுரா, ஜம்முதாவி போன்ற பகுதிகளுக்கு வராந்திர ரயில் சேவையும் ராமேஸ்வரத்துக்கு வாரத்துக்கு மூன்றுநாள் சேவையும் உள்ளது. ஆனால் கன்னியாகுமரியிலிருந்து ஹைதராபாத்துக்கு மட்டும் நேரடி தினசரி ரயில் வசதி இதுவரை இயக்கப்படவில்லை. குமரி மாவட்டத்திலிருந்து சென்னை, பெங்களுருக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகமான இளைஞர்கள் ஐதராபாத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. கடந்த பத்து ஆண்டுகளாக குமரியிலிருந்து மதுரை வழியாக ஹைதராபாத்க்கு நேரடி தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள  பயணிகள் தினசரி ரயிலில் ஐதரபாத் செல்ல வேண்டுமனால் இங்கிருந்து எதாவது ஓரு ரயிலில் சென்னை சென்று பகல் முழுவதும் சென்னையில் பொழுதை கழித்துவிட்டு மாலையில் சென்னையிலிருந்து புறப்படும் மூன்று ரயில்களில் எதாவது ஒரு ரயிலில் பயணிக்க வேண்டும்.
திருவண்ணாமலை வழியாக இயக்க கோரிக்கை:          
இந்த நாகர்கோவில் -காச்சுகுடா ரயிலின் வழித்தடத்தை திருவண்ணாமலை வழியாக மாற்றி இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை செல்ல எந்த ஒரு நேரடி ரயில் வசதியும் இல்லை.  மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்ல வாரம் மூன்றுமுறை செல்லும் ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் மட்டுமே உள்ளது. இந்த ரயிலிலும் திருப்பதி செல்லும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்வதால் இடைப்பட்ட இடங்களில் உள்ள பயணிகளுக்கு முன்பதிவு இருக்கைகள் கிடைப்பது இல்லை. இது மட்டுமில்லாமல் விழுப்புரம் முதல் திருவண்ணாமலை  வழியாக காட்பாடி செல்லும் 161 கி.மீ தூரம் உள்ள வழிதடத்தில் இதுவரை ஒரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் கூட இயக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது. ஆகவே இந்த நாகர்கோவில் - காச்சுகுடா ரயிலை திருவண்ணாமலை வழியாக இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.  நாகர்கோவில் முதல் மதுரை வரை உள்ள பாதை இருவழிபாதையாக மாற்றும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றது.  இந்த பணிகள் முடியும்போது இந்த ரயிலின் வழிதடத்தை மாற்றி திருவண்ணாமலை வழியாக இயக்கும் போது நாகர்கோவிலிருந்து விழுப்புரம் வரை இருவழிபாதையில் இந்த ரயில் பயணிக்கும். இவ்வாறு பயணம் செய்யும் போது பயணநேரம் கணிசமான அளவில்  வெகுவாக குறையும்.  இது மட்டுமில்லாமல் இந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
தினசரி ரயில்சேவை:-
தற்போது தென்மாவட்டங்களிலிருந்து ஐதராபாத்துக்கு இரண்டு வாராந்திர ரயில்களும், ஒரு வாராந்திர ரயில் காச்சுகுடா வழியாக இயக்கப்படும் ரயிலும் உள்ளது. இதைவிட்டால் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மூன்று ரயில்களும், திருவனந்தபுரத்திலிருந்து கோவை , சேலம் வழியாக ஐதராபாத்துக்கு செல்லும் ஒரு தினசரி ரயிலும் இயக்ப்பட்டு வருகின்றது. தமிழகத்திலிருந்து ஐதராபாத்துக்கு கூடுதல் தினசரி ரயில்கள் இயக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே கிடப்பில் உள்ளது. குறிப்பாக ராமேஸ்வரம் - ஐதராபாத், கன்னியாகுமரி – ஐதராபாத் ஆகிய இரண்டு இடங்களிலிருந்து ஐதராபாத்துக்கு தினசரி ரயில்கள் இயக்கவேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட பயணிகளால் வைக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த நாகர்கோவில் - காச்சுகுடா வாராந்திர ரயிலை வழித்தடத்தை திருவண்ணாமலை வழியாக மாற்றி தினசரி சூப்பர்பாஸ்டு ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo