செல்போன் திருடிய ரவுடி கைது - ரூபாய் 15,000/- மதிப்பிலான செல்போன் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் திருடிய ரவுடி கைது - ரூபாய் 15,000/- மதிப்பிலான செல்போன் மீட்க்கப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த சகாயராஜ் மகன் பிரசாத் (33) என்பவர் கடந்த 14.10.2022 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூபல்ராயர்புரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரது செல்போனை இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரில் வைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த செல்போன் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து பிரசாத் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) தனபால் தலைமையில் வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் திருமணிராஜன், செந்தில்குமார், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனியைச் சேர்ந்த சுப்பையா மகன் சரவணன் (24) என்பவர் மேற்படி பிரசாத்தின் செல்போனை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் எதிரி சரவணனை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 15,000/- மதிப்பிலான செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உட்பட 3 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.