பள்ளிகளுக்கு அருகே கூல் லிப் என்னும் போதைப் பொருள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை; தடை செய்ய கோரிக்கை
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு அருகே கூல் லிப் என்னும் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ.சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க தமிழக அரசும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருப்பினும் சமீப காலமாக மாணவர்களிடையே போதைப் பொருள்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகின்றது.
அதிலும் கூல் லிப் என்னும் போதைப் பொருளை தற்பொழுது மாணவர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுக்கும் விதமாக போதைப் பொருள்கள் பயன்படுத்தும் மாணவர்களின் பற்களில் கறைகள் உள்ளதா? என்பதை பள்ளி ஆசிரியர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும்.
மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடை செய்ய தங்களது தலைமையிலான மருத்துவக் கண்காணிப்புக்குழு ஒன்றை ஏற்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உளவியல் நிபுணர்கள் மூலம் மன நல ஆலோசனை வழங்க ஆவன செய்ய வேண்டும். மேலும் பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஆணையிடுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.