Onetamil News Logo

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது!

Onetamil News
 

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது!


மதுரை 2020 ஜூலை 7 ;சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் கி.பி.சி.ஐ.டி போலீசார் புலனாய்வு நடத்திக் கொண்டிருக்கக் கூடிய இவ்வேளையில் சி.பி,ஐ. இவ்வழக்கில் புலனாய்வை ஏற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.
மதுரை காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்: செயலாளர்: மீ.த. பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..... தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும் முடிவை அறிவித்த போதே பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பொறுப்புள்ள பலரும் அம்முடிவைக் குறை கூறியிருந்தனர். காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஏற்கெனவே இது குறித்துத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து அறிவித்துள்ளது. சி.பி.சி.ஐ.டி. புலனாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மனநிறைவு தெரிவித்த மதுரை உயா்நீதிமன்ற கிளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் சுட்டிக்காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையின் வழிகாட்டுதலுடன் சிபிசிஐடி புலனாய்வு தொடர வேண்டும். எனவே தமிழக அரசு இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் 19.06.2020 அன்று இரவு கொடிய முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, அதன் விளைவாக  22.06.2020 அன்று உயிரிழந்த நிகழ்ச்சி தமிழக மக்களை மட்டுமல்லாமல், இந்திய துணைக் கண்டத்தையும், உலகு முழுவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. பொதுமக்களின் கொந்தளிப்பிற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக ஆய்விற்கொண்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி.-யிடம் புலனாய்வு ஒப்படைக்கப்பட்டு அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.
சித்திரவதை மற்றும் படுகொலையில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலா் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் மீது இ.த.ச. பிரிவு 302இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு நீதித்துறைக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களோடு கூட காவல்துறை நண்பா்கள் எனப்படுவோருக்கும் (Friends of Police) இக்கொலை வழக்கில் தொடா்புள்ளது என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு செய்திருப்பதும், தமிழக அரசு அவ்வாறே சிபிஐ வசம் ஒப்படைக்க இருப்பதும் வலுத்த ஐயப்பட்டை ஏற்படுத்துகின்றன. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் சிபிசிஐடி முயற்சியில் வழக்குப் புலனாய்வு சரியான திசையில் சென்று கொண்டிருக்கும் போது தமிழக அரசு சிபிஐ உதவியோடு திசைதிருப்ப முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
எனவே தமிழக அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கூடாது என்றும், சிபிசிஐடி புலனாய்வு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்..
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், சனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரும், சட்டத்தின் ஆட்சியை மதிப்போரும், பொதுமக்களும் எமது கூட்டியக்கத்தின் கோரிக்கையை ஆதரித்துக் குரல்கொடுக்க வேண்டும்; தமிழக அரசு சாத்தான்குளம் வழக்குப் புலனாய்வைத் திசைதிருப்ப மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு கேட்டுக்கொள்கிறது.
 
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo