திருச்செந்தூரில் ஒரு உணவகத்தில் 73 கிலோ சிக்கன் மற்றும் இரால் பறிமுதல் செய்து அழிப்பு. உணவகங்களின் இயக்கத்தினை நிறுத்தவும் நடவடிக்கை - உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் நடவடிக்கை
தூத்துக்குடி 2022 ஜூன் 21 ;திருச்செந்தூரில் ஒரு உணவகத்தில் 73 கிலோ சிக்கன் மற்றும் இரால் பறிமுதல் செய்து அழிப்பு. உணவகங்களின் இயக்கத்தினை நிறுத்தவும் நடவடிக்கை - உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் நடவடிக்கை.எடுத்துள்ளார்.
உணவு பாதுகாப்புத் துறையின் ஆணையர் லால்வேணா மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதன் ஒரு அங்கமாக, 9444042322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், இன்று (21.06.2022) திருச்செந்தூரில் உள்ள நியூ புகாரி ஹோட்டல் என்ற உணவகமானது, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வின் போது, உணவகம் மிகுந்த சுகாதாரமற்ற வகையில் இருந்ததுடன், உரிய லேபிள் விபரங்களில்லாத இரால் பாக்கெட்டுகள் 19 கிலோவும், 54 கிலோ பழைய மற்றும் கழிவு சிக்கன் வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில் ஊற்றி புதைத்து அழிக்கப்பட்டது.
மேலும், மேற்கூறிய உணவகமானது பொதுமக்களின் பொதுசுகாதார நலனிற்கு மிகுந்த கேடுவிளைவிக்கும் வகையில் இருப்பதால், அவ்வுணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்யவும், உணவு பாதுகாப்புத் துறை ஆணையரிடமிருந்து அவரசரத் தடையாணை பெற்று, கடையின் இயக்கத்தினை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரக் குறைபாடுகள் மிகுந்த இவ்வுணவகத்தினை ஆய்வு செய்யவும், உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு வழங்க உறுதி செய்வதிலும், மாநில வாட்ஸ்அப் எண்ணில் பெறப்பட்ட புகார் உறுதுணையாக இருந்ததால், அப்புகாரை பதிவு செய்த நுகர்வோருக்கு உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.
மேலும், திருச்செந்தூரில் உள்ள மணி அய்யர் என்ற உணவகத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அதன் உணவுப் பொருள் இருப்பறையும், பாத்திரம் கழுவும் இடம் சமையலறையினுள் சுகாதாரத்தை சீர்கெடுக்கும் வகையிலும், இன்னும் பிற உணவு தயாரிப்பு சுகாதாரக் குறைபாடுகளும் கண்டறியப்பட்டது. மேலும், உரிய லேபிள் விபரங்கள் இல்லாத 18 கிலோ இட்லிப்பொடி, 20 கிலோ காஃபித் தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவற்றிலிருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பப்படும். மேலும், இவ்வுணவகமானது காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கி வருவதால், புதிய உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் வரையில், உணவகத்தின் இயக்கத்தினை நிறுத்தி வைக்க உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி அறிவிப்பாணை வழங்கவும், சுகாதாரக் குறைபாடுகள் மிகுநத இவ்வுணவகத்திற்கும் ஆணையரிடத்தில் அவசரத் தடையாணை பெற்று, உணவகத்தின் இயக்கத்தினை தடை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உணவகங்கள் சுகாதாரமாக உணவு தயாரிக்கவும், சிக்கன் போன்ற இறைச்சி வகைகளை தினம் புதிதாக வாங்கிப் பயன்படுத்தவும், ஃப்ரீசரில் சமையலுக்கு தயார் செய்யப்படாத சிக்கனை உரிய முறையில் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்படுகின்றது.
இம்மாவட்டத்தில் எந்தவொரு உணவகமாவது உணவு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் உணவு தயாரித்து விற்பனை செய்தால், அவர்களது கடையினை எவ்வித முன்னறிவிப்பின்றியும் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது.
பொதுமக்கள், உணவகங்களில் உணவு தாயரிப்பில் ஏதேனும் சுகாதாரக் குறைபாடுகளைக் கண்டறிய நேரிட்டால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. தகவல் தெரிவிப்பவரது விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.