வெளிநாட்டு நிதி தொடர்பாக தீவிர விசாரணை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மாநிலங்களவையில் தகவல்
வெளிநாட்டு நிதி தொடர்பாக தீவிர விசாரணை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மாநிலங்களவையில் தகவல்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்த நிதி உதவி வழங்கியதாக டெல்லியை சேர்ந்த அதர் மீடியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுக்கழிவால் மக்களுக்கு உடல்நல பாதிப்பு உண்டாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 2018-ல் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியது. அந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னால் அந்நிய சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நிதி வழங்கியது, தொடர்பாக தி அதர் மீடியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எது புகார்கள் வந்துள்ளனவா? என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நான்பாய் ரத்வா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணைய அமைச்சர் நித்தியானந்தர் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் தன்னார்வ தொண்டு நிறுவனமான தீ அதர் மீடியா ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2019 - 2021 காலகட்டத்தில் அந்த நிறுவனத்திற்கு 3. 54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது. இதில் ரூ2.79 கோடியை அந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதி பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.