Onetamil News Logo

தார் சாலை அமைத்து தராவிட்டால் சாலை மறியல்..! 2வருடங்களாக தார் சாலை இல்லாத மக்கள் மனு..!! 

Onetamil News
 

தார் சாலை அமைத்து தராவிட்டால் சாலை மறியல்..!                              2வருடங்களாக தார் சாலை இல்லாத மக்கள் மனு..!!           


ஸ்ரீவைகுண்டம்  2019 ஜூலை 15 ;தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட மணக்கரை பஞ்சாயத்து நடுவக்குறிச்சி  ஊர்பொதுமக்கள் குமார் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: எங்கள் கிராமமான நடுவக்குறிச்சியில் சுமார் 350குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ள எங்கள் கிராமத்தினர் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்காக பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கே நாள்தோறும் சென்று வருகின்றனர்.
கொங்கராயகுறிச்சியில் இருந்து வல்லநாடு செல்லும் பிரதான சாலையில் இருந்து ஒருகிலோ மீட்டர் தூரத்தில் எங்கள் கிராமம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் இருந்து நடந்து செல்லவேண்டிய நிலையிலுள்ள எங்கள் கிராமத்திற்கு, இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 72ஆண்டுகள் ஆனபோதும் இதுவரை தார் சாலை அமைக்கப்படவே இல்லை.
சாலை என்பதே பிரதானமாக இல்லாத நிலையில் எங்கள் ஊர் மக்களால் அமைக்கப்பட்ட மண் சாலை வழியாகவே நாங்கள் சென்று வந்தோம். மழைக்காலங்களில் இந்த மண் சாலையானது சகதிக்காடாக மாறிவிடும். இதனால் இந்த சாலை வழியாக நடந்து மட்டுமல்ல, வாகனத்தில் கூட செல்ல இயலாத நிலை நிலவி வந்தது.

இந்நிலையில், எங்கள் கிராமத்திற்கு தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று நாங்கள் தங்களிடமும், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு தரப்பினரிடமும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தோம்.
இதன்பலனாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக எங்கள் ஊருக்கு தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக மெட்டல் சாலை மட்டும் போடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைத்து ஒரு வருடம் நெருங்கியபோதும் இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் ஏற்கனவே போடப்பட்ட மெட்டல் சாலையில் கற்கள் அனைத்தும் பெயர்ந்து கிடப்பதால் நடந்து மற்றும் இருச்சக்கர வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே மழைக்காலங்களில் முற்றிலுமாக நடந்தோ.? அல்லது  வாகனத்திலோ செல்ல முடியாத நிலை தொடர்வது வேதனைக்குரியதாகும்.
வெறும் கற்களுடன் காட்சி அளிக்கும் சாலையால் எங்கள் கிராமத்திற்குள் ஆட்டோ, கார் போன்ற வாடகை வாகனங்கள் கூட வருவதற்கு தயங்குகின்றன. இதனால், வயதானவர்கள், நோயாளிகள், பெண்கள், மாணவ, மாணவியர்கள், விவசாயிகள் என அனைத்துதரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நாங்கள் கருங்குளம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று பலமுறை மனு அளித்தபோதும் தார் சாலை அமைக்கும் பணிகள் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் நாங்கள் நாள்தோறும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறோம்.
இதுபோன்று தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள எங்கள் கிராமத்தில் குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லை. இதனால் நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஆறாம்பண்ணை கிராமத்திற்கு சென்று தான் குடிநீர் எடுத்துவரும் சூழ்நிலையும் பலவருட காலமாக தொடர்கிறது. இந்தநிலை மாறிட எங்கள் கிராமத்திலேயே எங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு தாங்கள் வழிவகை செய்திடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் கிராமத்திற்கு தங்களின் கருணையால் இன்னும் ஒருவார காலத்திற்குள் தார் சாலை அமைத்து தந்திடுவதற்கான தகுந்த நடவடிக்கைகளை தாங்கள் எடுத்திடவேண்டும் என்று தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

தங்களின் தகுந்த நடவடிக்கைக்கு பின்பும், எங்கள் கிராமத்திற்கு தார் சாலை அமைத்து தராதபட்சத்தில் கிராமமக்களான நாங்கள் அனைவரும் எங்களது ரேசன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே சமர்ப்பிக்கவும் முடிவு செய்துள்ளோம். அதோடு, எங்கள் கிராமத்திற்கு மிக அருகிலுள்ள திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான நெடுஞ்சாலையில் 24.07.2019(புதன்கிழமை) காலை 9மணிக்கு நாங்கள் அனைவரும் குடும்பத்தோடு அணிதிரண்டு வந்து சாலைமறியல் போராட்டம் நடத்தவும் தீர்மானித்துள்ளோம் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் கூறியுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo